jaga flash news

Monday, 3 August 2020

பிரம்மஹத்தி (கொலை செய்தவர்களை பிடிக்கும் தோஷம்)

திருவிளையாடல் புராணம்*…
*வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்*
.
🌺வரகுணபாண்டியன் ஒருமுறை வேட்டைக்கு கிளம்பினான். மிருகங்களை வேட்டையாடிவிட்டு, காட்டு வழியே குதிரைகளில் தனது படைகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அப்போது இருள் சூழ்ந்துவிட்டது. வரும் வழியில் அந்தணர் ஒருவர் படுத்திருந்தார். அதை வரகுண பாண்டியன் கவனிக்கவில்லை. அவனது குதிரை அவர்மேல் ஏறி மிதித்தபடியே ஓட, அந்தணர் அலறியபடியே இறந்து போனார். குதிரைகளில் குளம்பொலி சப்தத்தில் யாருமே இதைக் கவனிக்கவில்லை. ஆனால், அந்தக் காட்டில் யாகம் முதலானவற்றுக்காக சுள்ளி பொறுக்க வந்த அந்தணர்கள் சிலர் இதைக் கவனித்து விட்டனர். அவர்கள் அந்தணரின் உடலை எடுத்து வந்து, குதிரை மிதித்ததால், அவர் இறந்து போன விஷயத்தை மன்னனிடம் தெரிவித்தனர்.

🌺வரகுண பாண்டியன் மிகுந்த துக்கமடைந்தான். அந்தணரைக் கொன்ற பாவம் பொல்லாததாயிற்றே என்று கூறிய அவன், அவரது குடும்பத்திற்கு வாழும்வரை காலம் தேவையான பொன்னும் பொருளும் கொடுத்தான். தான தர்மங்கள் பல செய்தான். ஆனாலும், அவனை பிரம்மஹத்தி (கொலை செய்தவர்களை பிடிக்கும் தோஷம்) பற்றிக் கொண்டது. இதன்பிறகு மன்னன் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. இதுகுறித்து பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டான். கொலைப்பழி தோஷம் தீர வேண்டுமானால், தொடர்ந்து பத்து நாட்கள் சுந்தரேஸ்வரரின் ஆலயத்திற்கு சென்று, 1008 முறை சுற்றி வழிபட வேண்டும், என அவர்கள் தெரிவித்தனர்.

🌺மன்னனும், உடனடியாக அந்த வழிபாட்டை ஆரம்பித்தான். பத்தாம்நாள் முடிவில் அசரீரி ஒலித்தது. வரகுணா! உன் வழிபாட்டை ஏற்றேன். நீ ஆலய வலம் வரும்போது, எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். உன் பிரம்மஹத்தி விலக திருவிளையாடல் புரியப் போகிறேன். உன்னை எதிர்த்து காவிரிச்சோழன் போருக்கு வருவான். அவனை நீ எதிர்த்து நில். அவன் புறமுதுகிட்டு ஓடும் போது, திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்தை அடைவாய். அங்கு வீற்றிருக்கும் என்னை வழிபடு. உன் பிரம்மஹத்தி விலகும், என்றது. எம்பெருமானே அருளிய இந்த வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த பாண்டிய மன்னன், சோழனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான்.

🌺படைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்த பாண்டியன், உற்சாகத்துடன் அவனை எதிர்த்தான். சோழர்படை இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை, அவர்கள் பின்நோக்கி ஓடினர். சோழனை விரட்டியடித்த பாண்டியன் திருவிடைமருதூரை வந்தடைந்தான். அங்குள்ள கோபுரத்தைக் கண்டதும் தன்னிலை மறந்து சுவாமியை வணங்கினான். இதற்குள் சோழன் தப்பித்தால் போதுமென ஓடிவிட்டான். வரகுணபாண்டியன் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்றதும், அவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி அகன்று தனியாக நின்றது. சோழன் வெளியே வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என அது நினைத்தது. ஆனால், அசரீரி மீண்டும் தோன்றி, பாண்டியா! நீ மேற்கு வாசல் வழியே வெளியேறி விடு, என்றது. பாண்டியனும், அதன் வழியாக வெளியேறி மதுரைக்கு வந்துவிட்டான்.

🌺(இப்போதும், அந்த பிரம்மஹத்தி கோயில் வாசலில் நிற்பதாக நம்பிக்கையுண்டு) மேற்கு வாசலில் கோபுரம் ஒன்றைக் கட்ட ஏற்பாடு செய்தான். ஒருமுறை சிவபெருமானிடம், தனக்கு சிவலோகக் காட்சியை காட்ட வேண்டும் என பிரார்த்தித்தான். சிவபெருமானும் நந்திதேவர் மூலமாக அரிய அந்தக் காட்சியை காட்டியதுடன், தானும், பார்வதியும் விநாயகர், முருகன் முதலான குழந்தைகளுடன் இருக்கும் அரிய தரிசனத்தைக் கொடுத்தார்.🙏

No comments:

Post a Comment