jaga flash news

Saturday, 16 January 2021

ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கும் 'காமிகா ஏகாதசி' விரதம் ...

ப்ரம்மஹத்தி தோஷம்' மற்றும் 'மறு பிறவி' நீக்கும் 'காமிகா ஏகாதசி' விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'ஸ்ரவன' (Shravana) மாதம், (July / August)  தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "காமிகா ஏகாதசி" (அ) "ஸ்ரவன கிருஷ்ண பட்ச ஏகாதசி" (Kaamika Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

காமிகா ஏகாதசி பற்றி 'ப்ரம்ம வைவர்த புராண' விளக்கம்: 
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, வஸூதேவா,  ஸ்ரவன  மாதத்தில், கிருஷ்ண  பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, இதனைப்பற்றி ஒரு முறை நாரத முனி, தனது தந்தையான ப்ரம்ம தேவரிடம் கேட்டுப்பெற்ற விளக்கத்தை உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

நாரத முனி, தனது தந்தையாகிய ப்ரம்ம தேவரிடம்,ஸ்ரவன மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று நான் என்ன செய்ய வேண்டும், யாரைத்தொழ வேண்டும் அதன் மகிமை பற்றி எடுத்துரையுங்கள் தந்தையே என்று கேட்க, ப்ரம்ம தேவரும் மனமகிழ்ந்து, எனதருமை மைந்தா, மானிடர்களின் நன்மைக்காக நீ கேட்ட இந்த ஏகாதசி விரத மகிமை பற்றி கூறுகிறேன் கேள், மாதவா, மதுஸூதனா, விஷ்ணு, ஸ்ரீதரா என்று போற்றப்படும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை துதிக்க வேண்டும் என்று சொல்லி மேலும் விளக்குகிறார். 
காமிகா ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம், ஒருவர் கங்கையில் நீராடிய புண்ணியத்தையும், கேதார்நாத் சென்று பகவான் சிவபெருமானை தரிசனம்  செய்த புண்ணியத்தையும், சூரிய க்ரஹணத்தின் போது 'குருஷேத்ரா' சென்று நீராடிய புண்ணியத்தையும், கண்டகி நதியில் (சாளக்கிராமம் கிடைக்க கூடிய இடம்)  நீராடிய புண்ணியத்தினையும் பெறுகிறார். 

மேலும், பகவான் ஸ்ரீ ஹரிக்கு ப்ரியமான இந்த காமிகா ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம்,  அனைத்து பாவங்களும் நீங்கி மறுபிறவி இல்லாமல் அந்த ஆத்மா பகவான் பாதங்களை எட்டுகிறது. 

ஒருவர், தன் வாழ்வில், தான் தெரியாமல் செய்த, (இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ) அந்தணரைக் கொன்ற தோஷமான 'ப்ரம்மஹத்தி' தோஷத்தை நீக்குகிறது இந்த காமிகா ஏகாதசி விரதம். மேலும், தெரியாமல், ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில் ஒரு குழந்தையைக் கருவிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டிருப்பின் அதன் மூலம் ஏற்பட்ட பாவத்தையும் போக்கவல்லது இந்த காமிகா ஏகாதசி விரதம். 

ஆனால், இவ்வாறு பலன் தெரிந்து கொண்ட பின்னர், அதே தவறை மீண்டும் தெரிந்தே செய்து விட்டு, விரதம் இருந்து பிராயச்சித்தம் தேடலாம் என்று கண்டிப்பாக நினைக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி சொல்லப் பட்டுள்ளது. 

மேலும், காமிகா ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு நெய் விளக்கு ஏற்றி, துளசி சாற்றி வழிபடுதல், மிகப்பெரிய சௌபாக்யத்தை தரும். அன்று துளசி கொண்டு, விஷ்ணுவின் நாமங்கள் கூறி  அர்ச்சனை புரிவோர் யமதர்ம ராஜனிடம் கொண்ட பயம் நீங்கப்பெறுவர். மேலும், அவர்களுக்கு மறு பிறவியும் இல்லை. 
(துளசியை ஏகாதசி அன்று பறிக்கக்கூடாது, முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்)

ப்ரம்ம தேவர், இவ்வாறு காமிகா ஏகாதசியின் மகிமை பற்றி நாரத முனியிடம் எடுத்துரைத்தார். 

இதனை, பாண்டவர்களிடம்  எடுத்துக்கூறிய பகவான்   ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில்,  ஹே யுதிர்ஷ்டிரா, நம்பிக்கையுடன், இந்த காமிகா ஏகாதசி விரதத்தை  கடைபிடிப்பவர்களது, அனைத்து பாவங்களும் நீங்கி, (ப்ரம்மஹத்தி தோஷம் உட்பட) அவர்கள் சொர்ணம் (தங்கம்) தானம் செய்த புண்ணியம் பெறுவார்கள்,  அவர்கள் மறு பிறவியின்றி முக்தி அடைவார்கள் என்று கூறி அருளினார். 

இவ்வாறு "காமிகா ஏகாதசி" விரத மகிமை பற்றி "ப்ரம்ம வைவர்த புராணம்" விளக்குகின்றது.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'காமிகா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment