jaga flash news

Saturday 16 January 2021

மலையளவு பாவத்தையும் போக்கும் 'மோஹினி ஏகாதசி' விரத மகிமை ...

மோஹினி ஏகாதசி' விரத மகிமை ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 
'வைஷாக மாதம்', (April / May )  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "மோஹினி    ஏகாதசி" (Mohini Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

மோஹினி ஏகாதசி பற்றி 'கூர்ம புராண' விளக்கம்: 
யுதிஷ்டிர மஹராஜ் ஸ்ரீ கிருஷ்ணரிடம்,  கேட்கிறார்... ஓ வாசுதேவா,  வைஷாக  மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ தர்ம புத்திரனே, 
வைஷாக மாத வளர் பிறையில்  வரும் ஏகாதசி 'மோஹினி ஏகாதசி' என்று அழைக்கப்படும். வசிஷ்ட மகரிஷி, ராம பிரானுக்கு உரைத்ததை நான்  உனக்கு சொல்கிறேன், என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். 
இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் இந்த ஜென்மத்தில் அவர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த மலையளவு பாவங்களையும் நீக்கி மோட்சத்தை தரவல்லது.  அதன் மகிமையை நான்  உனக்கு கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான்  கூறியதை நாம் இங்கு விவரிக்கின்றோம்... 

ஸ்ரீ ராமபிரான், வசிஷ்ட மகரிஷியிடம் கேட்கிறார், மஹாமுனியே, ஏதோ பாவத்தினால் நான் சீதையை பிரிந்து தனித்திருக்கின்றேன். எனது அனைத்து  பாவங்களையும், துயரத்தையும்  நீக்கும் ஒரு விரதம் பற்றி எனக்கு கூறுங்கள், என்று கேட்கிறார். 

வசிஷ்டர் கூறுகிறார், ஓ, ராம பிரானே, உனது ராம நாமத்தை' உச்சரிப்பதன் மூலமே ஒருவர் இந்த பிறவிப் பெருங்கடலைக்  கடக்க முடியும், இருப்பினும், லோக நன்மைக்காக நீ கேட்ட இந்த கேள்விக்கு நான் விடையளிக்கின்றேன். 

ஓ ராமா, அனைத்து பாவங்களையும் போக்கும் அந்த விரத நாள், "வைஷாக சுக்ல ஏகாதசி விரதம்" ஆகும், துவாதசி திதியுடன் சேர்ந்து விரதம் இருக்க வேண்டிய இந்த  ஏகாதசி "மோஹினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படும். அதன் விரத மகிமை பற்றி கூறுகிறேன் கேள் என்று கூறி தொடங்குகிறார். 

முன்பு, சரஸ்வதி நதிக்கரையில், 'பத்ராவதி' என்ற அழகிய நகரத்தை, சந்திர வம்சத்தைச் சேர்ந்த, நீதிமானான, 'த்யுதிமான்' என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த நகரத்தில், மிகச்சிறந்த விஷ்ணு பக்தனான, செல்வந்தனான 'தனபாலன்' என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு, ஐந்து புதல்வர்கள், சுமனா, த்யுதிமான், மேதாவி, சுகுர்த்தி, த்ருஷ்டபுத்தி என்று இருந்தனர். 

ஐந்து புதல்வர்களில், நான்கு புதல்வர்கள் மிகவும் நல்லொழுக்கத்துடன் இருந்தனர். ஆனால், த்ருஷ்டபுத்தி என்பவன் மட்டும் மிகவும் தகாத செயல்களில் ஈடுபடுவதும், மது அருந்துவதும், தகாத பெண்களுடன் உறவு கொண்டும் தனது வாழ்க்கையை கழித்தான். எவ்வளவு புத்திமதி சொல்லியும் திருந்தவில்லை. தனது தந்தையின் சொத்துக்களையும் இது போன்ற தேவையற்ற சகவாசத்தால் காலியாக்கி வந்தான். ஒரு காலகட்டம் வரை பொறுத்துப்பார்த்த தந்தை தனபாலன், அவனை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டான்.  சிறிது பொன் நகைகளுடன் வீட்டை விட்டு சென்ற 'த்ருஷ்ட புத்தி' மீண்டும் அந்த பெண்களுடன் காலத்தை கழித்து வந்தான். ஆனால், அந்த அணிகலன்களும், பொருளும் தீர்ந்தவுடன்  விலை மாதர்கள் அவனை வெளியே அனுப்பி விட்டனர். 

பின்னர், வேறு வழியின்றி திருடுவதை தனது தொழிலாக்கி அதன் மூலம், தனது வாழ்க்கையை அதே தீய பாதையில் தொடர்ந்தான். இதனால், அரண்மனைக் காவலர்களிடம் சிக்கிக்  கொண்ட பொழுது, முதலில் ஓரிரு முறை, விஷ்ணு பக்தனான தனபாலனை கருத்தில் கொண்டு அவனை விடுவித்தனர்.   ஆனால், இதுவே வழக்கமாக நடக்க, வேறு வழியின்றி, நகரத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கக் கூடாது என்று உத்தரவிட்டு,  'த்ருஷ்ட புத்தியை' நகரத்திற்கு வெளியே கொண்டு விட்டு விட்டனர். 

நகரை விட்டு காட்டிற்குள் பிரவேசித்த 'த்ருஷ்ட புத்தி', தனது உணவிற்கு வேறு வழியின்றி, மிருகங்களையும், பறவைகளையும் கொன்று புசிக்க ஆரம்பித்தான். இவ்வாறு, தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் பாவத்திற்கு மேல் பாவமாக செய்து, தனது  பாவக்கணக்கை மலையளவு உயர்த்தினான் 'த்ருஷ்ட புத்தி'. 

தனது வாழ்வில் எந்த ஒரு நோக்கமும் இன்றி, கால் போன போக்கில் அலைந்து திரிந்த 'த்ருஷ்ட புத்தி', கடந்த ஜென்மத்தில் செய்திருந்த ஏதோ ஒரு புண்யத்தின் விளைவாக ஒரு 'வைஷாக' மாதத்தில், அவனை அறியாமல் 'கௌண்டின்ய முனிவரின்' ஆஸ்ரமம் அமைந்திருக்கும்  கங்கைக்கரை ஓரத்தினை அடைந்திருந்தான்.  அங்கு கங்கைக்கரையில் குளித்து விட்டு சென்று கொண்டிருந்த 'கௌண்டின்ய முனிவரின்' ஈர  உடையில் இருந்து சில கங்கை நீர்த்துளிகள் 'த்ருஷ்ட புத்தி' மீது விழுந்தது. அதன் மூலம், அவனது சிந்தை சற்று தெளிவடைந்து, முனிவரை வணங்கி, ஓ முனிவரே, நான் பற்பல தீய செயல்கள் செய்ததன் மூலம், அனைவரும் என்னை வெறுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளேன். மேலும் நான் பாவங்களை மலை அளவு செய்துள்ளேன், இந்த பாவங்களில் இருந்து விடுபட ஒரு உபாயம் சொல்லுங்கள் என்று கை கூப்பி வேண்டினான். 

முனிவரும் அவன் மேல் இரக்கம் கொண்டு, அவனது நிலை மாற, மகனே, "இந்த 'வைஷாக' மாதத்தில் வரக்கூடிய சுக்ல பட்ச ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து, பகவான் விஷ்ணுவை முழு நாளும் த்யானம் செய்து மனதார வேண்டிக்கொள்வதன் மூலம் உனது மலையளவு பாவங்களில் இருந்து நீ வெளி வரலாம்" என்று அறிவுரை கூறி ஆசி வழங்கினார். 

'த்ருஷ்டபுத்தி'யும் இந்த 'மோஹினி ஏகாதசி' விரதத்தை  கடைபிடித்து தனது பாவங்களை அழித்து நல் புத்தி கிடைக்கப்பெற்று நற்செயல்களை செய்து மோட்சம் கிடைக்கப்பெற்றான். 

இவ்வாறு, இதன் பெருமைகளை யுதிஷ்டிரனிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஓ  யுதிஷ்டிரா, இந்த 'மோஹினி ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள் 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார். 
முக்கிய குறிப்பு:
ப்ரம்ம தேவர்,  கருட புராணத்தில் நாரத முனியிடம் கூறும் பொழுது, "ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் பொழுது ஏகாதசியும், துவாதசியும்   இருக்கலாம். அல்லது ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி மூன்றும் வரும் படி கூட இருக்கலாம். ஆனால், தசமி மற்றும் ஏகாதசி திதி இருக்கும் பொழுது, ஏகாதசி விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்" என்று கூறுகிறார்.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'மோஹினி ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

No comments:

Post a Comment