jaga flash news

Saturday, 16 January 2021

சொர்க்க லோகம் செல்ல வைக்கும், 'ரமா ஏகாதசி' விரத மகிமை...

ரமா ஏகாதசி - Rama Ekadasi

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் ஏகாதசி விரதம் என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.

கார்த்திகா மாதத்தில் (October / November) கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய ஏகாதசியே "ரமா ஏகாதசி" என்று அழைக்கப்படுகின்றது. 


ஒவ்வொரு ஏகாதசியின் பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கும் "பிரம்ம வைவர்த்த புராணத்தில்" இருந்து "ரமா ஏகாதசிக்கு "  உண்டான மகிமையை பார்ப்போம்...

ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மஹாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், யுதிஷ்டிரர் கார்த்திகா மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விளக்கமாக கூறும் படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்..

அதற்கு, ஸ்ரீ கிருஷ்ணர், அரசர்களில் சிறந்த மஹாராஜா யுதிஷ்டிரரே, இந்த ஏகாதசி "ரமா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த 'ரமா ஏகாதசி' விரதத்தை ஒருவர் கடைபிடிப்பதன் மூலம், 'இக' வாழ்வில் தனது அனைத்து பாவங்களையும் தொலைத்து மிகவும் உயர்ந்த 'பர' வாழ்வை அடைய முடியும், அதனை பற்றி கூறுகிறேன் கேள் என்று விளக்குகிறார். 


முன்பு திரேதா யுகத்தில்,  நேர்மையுடனும், சாஸ்திரங்களை பின்பற்றியும் ஆட்சி புரிந்த 'முசகுண்டா' என்ற ஒரு அரசன் இருந்தார். அவருக்கு, இந்திரன், வருணன், யமதர்ம ராஜன் மற்றும் விபீஷணன் ஆகிய அனைவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். 

அவர், தனது மகளுக்கு புண்ய நதியாம் 'சந்திரபாஹு'  என பெயரை சூட்டி மகிழ்ந்தார். 'முசகுண்டா' தனது மகளை ' சந்திரசேனா' என்ற மன்னனின்  புத்திரனாகிய 'ஷோபனா'  -விற்கு மணமுடித்து கொடுத்தார்.  

திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு ஒருமுறை, (கார்த்திகா மாதத்தில் {கிருஷ்ண பட்சத்தில் தசமி திதியன்று} )  சந்திரபாஹு,  தனது தந்தையை  காண்பதற்காக  தனது கணவர் ஷோபனா-வுடன் அரண்மனைக்கு வந்திருந்தனர். 


'முசகுண்டா' சாஸ்திர விதிகளை மிகவும் முறையாக கடைபிடித்து வருபவர். ஆதலால், ஏகாதசி விரதத்தை  அவர் மட்டும் முறையாக கடைபிடிப்பதோடு நில்லாமல்  நாட்டு மக்கள் அனைவரும் விரதம் கடைபிடிக்கவும் ஆணை பிறப்பித்திருந்தார். 

ஆகவே, அவரது ராஜாங்கத்தில், தசமி திதியன்று (ஏகாதசிக்கு முதல் நாள்) 'முரசு'  கொட்டி  (தண்டோரா போட்டு) மறுநாள் 'ஏகாதசி' அன்று நாட்டு மக்கள் அனைவரும் 'ஸ்ரீ ஹரி' யை மனதில் நினைத்து தியானம் செய்து 'விரதம்' இருக்க வேண்டும் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார்... 

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
 நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  
'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்..... 


சந்திரபாஹுவின் கணவர் ஷோபனா மிகவும் உடல்நிலை நலிவுற்று இருந்தார், இந்த சூழலில்  ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பது என்பது கண்டிப்பாக  இயலாத காரியம்  என்று சந்திரபாஹு தனது கணவரிடம் 'ப்ரியமானவரே, எனது தந்தை ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதை மிகவும் கண்டிப்பாக வலியுறுத்துபவர், இப்போதைய சூழலில் நீங்கள் அவரது ஆணையை பின்பற்ற முடியாது என்றால், இங்கிருந்து சென்று விட வேண்டியது தான், ஏன் என்றால், ஏகாதசி அன்று எங்கள் ராஜ்ஜியத்தில் 'யானை, குதிரை போன்ற உயிரனங்கள்' கூட எந்த உணவும் எடுத்துக்கொள்வதில்லை, அப்படி இருக்கும் பொழுது மனிதர்களாகிய நாம் எப்படி உண்ண முடியும்? என்று கூறினாள்.
இவை அனைத்தையும் கேட்ட 'ஷோபனா',  ஏகாதசி விரதத்தின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என்ற போதிலும், தற்போது இருக்கின்ற ராஜ்யத்தின் அரசரின் ஆணை என்பதாலும் {அரசர் தனது மாமனாராகவே இருந்த போதிலும்} மற்றும் தனது ப்ரியமான மனைவியின் மனம் வருந்த வேண்டாம் என்ற காரணத்திற்காகவும், தானும் ஏகாதசி விரதம் இருப்பதாக தெரிவித்தான்.  

இதனைக் கேட்ட சந்திரபாஹு மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்.

அடுத்த நாள் 'ஏகாதசி' அன்று ராஜ்யத்தில் அனைவரும் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து 'ஸ்ரீ ஹரி' யை துதித்து வந்தனர்.

'ஷோபனா'- வும்  எதுவுமே உண்ணாமல் விரதம் இருந்தார். அன்று வழக்கத்தை விட அதிகமாக பசியும், தாகமும் எடுத்தது. இருப்பினும், தன்னால் முடியவில்லை என்று தெரிந்தும், இரவு வரை விரதத்தை தொடர்ந்தார். ராஜ்யம் முழுவதும் , இரவில் பகவான் ஸ்ரீ ஹரி நாமத்தை ஜபித்து வந்தனர். 


ஆனால், இதற்கு முன்பு இது போன்று ஒரு நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து பழக்கப்படாததாலும், மேலும் உடல்நிலை நலிவுற்ற காரணத்தினாலும், மறு நாள்  காலை (துவாதசி) அன்று ஷோபனா மரணமடைந்து விட்டார்...

இருப்பினும், ஒரே ஒரு முறை 'ரமா ஏகாதசி' விரதத்தை அனுஷ்டித்ததின் பலனாக, ஷோபனா மரணத்திற்குப்பின்,  இந்திர லோகத்திற்கு அடுத்த படியாக 'மந்த்ராசல மலை' என்ற இடத்தில் உள்ள  சொர்க்க லோகத்தில் பொன்னும், வைரமும், வைடூரியங்களாலும், தூண்களாகவும், கதவுகளாகவும், இருக்கைகளாகவும் கொண்டு  அலங்கரிக்கப்பட்ட அரண்மனையில் ஒரு ராஜா போல ஷோபனா அமர்த்தப்பட்டார்.  
அவருக்கு, கந்தர்வர்களும் (இந்திர லோகத்து இசைக் கலைஞர்கள்), அப்ஸரஸ்களும் (இந்திர லோகத்து நடன மங்கைகள்) பணிவிடை செய்தனர். அவருக்கு இந்திரனுக்கு அடுத்தபடியான மரியாதை கொடுக்கப்பட்டு, அனைத்து உபசரணைகளும் செய்யப்பட்டன...

இவ்வாறு இருக்கும்பொழுது, ஒருநாள் யாத்திரையாக அந்த சொர்க்க லோகத்திற்கு 'ஸோமஷர்மா' என்ற ஒரு தபோ வலிமை மிக்க அந்தணர் வந்தார். அந்தணரைக் கண்டவுடன் தனது ஆசனத்தில் இருந்து உடனடியாக எழுந்து சென்று அவரை வணங்கி வரவேற்றார் ஷோபனா. மேலும் அவரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்...

அந்தணரே,
நான் முழு மன ஈடுபாடு இல்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் 'ரமா ஏகாதசி' விரதத்தை என் மனைவி சந்திரபாஹு கூறிய ஒரே காரணத்தினால் கடைப்பிடித்தேன். ஆனால், அதற்கு பலனாகவே நான் இப்படி ஒரு சுக, ராஜபோக 'பர' வாழ்வை அனுபவிக்கின்றேன். 

அந்தணரே, இந்த ராஜபோக நிலை என்பது தற்காலிகமானது என்றும் சிறிது நாள்களில் சென்று விடும் என்றும் அறிந்தேன். தாங்கள் தயவு செய்து எனது மனைவி 'சந்திரபாஹூ'வை சந்தித்து இந்த நிலை குறித்து எடுத்துச் சொல்லி, எனக்கு எப்பொழுதும் இந்த ராஜ வாழ்க்கை நிலைத்திருக்க வழி வகை செய்ய வேண்டும், என்று மிகவும் வேண்டி கேட்டுக் கொண்டார். 

அந்தணரும், அவரின் வேண்டுகோளை ஏற்று 'முசகுண்டா'வின் அரண்மனைக்குச் சென்று சந்திரபாஹுவினை  சந்தித்து நடந்த விஷயங்களை எடுத்துக் கூறினார். சந்திரபாஹு, மிகவும்  சந்தோஷப்பட்டாள், அதே நேரம் இதனை நம்ப முடியாமல் அந்தணரிடம் இது உண்மை தானா, அப்படி என்றால் என் கணவர் இருக்கும் 'மந்த்ராசல மலை'க்கு என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள்.

அதற்கு அந்தணர் சரி என்று கூறினாலும், இந்த பூத உடலோடு அனைவரும் அங்கு செல்ல முடியாது என்று கூறி முதலில் 'வாமதேவர்' என்ற ஒரு மஹரிஷியின் ஆஷ்ரமத்திற்கு அழைத்து சென்றார். அவரிடம் அனைத்து விவரங்களையும் கூறி இதற்கு ஒரு உபாயமும் கேட்டனர். பின்னர் வாமதேவ மஹரிஷி தனது தபோ வலிமை மூலமும், மற்றும் பல வேத மந்திரங்களை பிரயோகித்தும், மேலும் சந்திரபாஹு தனது எட்டு வயது முதல் மிகவும் பரிபூர்ண நம்பிக்கையோடு இருந்த ஏகாதசி விரதத்தின் பயனையும் தாரை வார்த்து  புனித நீரை தெளித்து 'சந்திரபாஹு' வை சொர்க்க லோகம் செல்வதற்கு ஏற்ப  ஒளி உடலாக மாற்றினார். 

இதன் மூலம், சந்திரபாஹு தனது கணவர் இருக்கும் 'மந்த்ராசல மலை'க்கு சென்று தனது கணவரின் அருகில் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தாள். அவளைக்  கண்டு மிகவும் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் உற்ற ஷோபனாவிடம், எனது ப்ரியமானவரே, நான் உங்களை ஏகாதசி விரதம் இருக்கக் கூறியது உங்கள் நலனை கருத்தில் கொண்டு தான் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன், மேலும் நான் எனது 8 வயது முதல் இருந்த ஏகாதசி விரதத்தின் புண்ய பலனைக் கொண்டே  இப்பொழுது இந்த ஒரு உன்னத நிலையை அடைய முடிந்தது என்றும்  கூறினாள். 

இவ்வாறு அவர்கள், சொர்க்க லோகத்தில் குறிப்பிட்ட காலம் இருந்து அதன் பின்னர் விஷ்ணுவின் பாத கமலங்களை அடைந்தனர்...


இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாராஜா யுதிஷ்டிரரிடம் "ரமா ஏகாதசி" விரத மகிமையை பற்றி எடுத்து கூறினார்.

மேலும், இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களும், இந்த புண்ய கதையைக் கேட்டவர்களும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்யத்தை அடைவார்கள் என்று "ப்ரம்ம வைவர்த்த புராணம்" எடுத்துரைக்கின்றது...

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'ரமா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  


ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

No comments:

Post a Comment