jaga flash news

Wednesday, 2 September 2020

விதுரர் வில்லை ஒடித்த வரலாறு

மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சி இது. பாண்டவர்களுக்குரிய பாகத்தைத் துரியோதனன் தர மறுத்தான். அதனால் பாண்டவர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பாதி ராஜ்யத்தைச் சண்டை சச்சரவு ஏதுமில்லாமல் அமைதியான முறையில் வாங்கித் தருமாறு கண்ணபிரானைத் துரியோதனன்பால் தூது அனுப்பினார்கள்.

பகவான் அஸ்தினாபுரம் சென்றார். சுற்றுமுற்றும் பார்த்தார். துரியோதனன் அரண்மனையிலிருந்து யாராவது வேவு பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டார்.ஆமாம்.. அந்த வேலை ரகசியமாக நடந்து கொண்டிருந்தது! திருப்தியுடன் தலையை ஆட்டிக் கொண்டு விதுரன் மாளிகைக்குத் தங்குவதற்காகச் சென்று விட்டார். துரியோதனன் மாளிகைப் பக்கம் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

விதுரன் மாளிகையினுள் நுழையும்போது கடைக்கண்ணால் அந்த மாளிகையின் அருகிலிருந்த சந்து ஒன்றிலிருந்து ஒருவன் நைஸôக நழுவி துரியோதனன் மாளிகைக்குச் செல்வதைக் கண்டு துளிக்கூட ஆச்சரியப்படவில்லை அவர். எல்லாம் தாம் எண்ணியது போலவே நடப்பது கண்டு புன்னகை பூத்துக் கொண்டார்!

விதுரர் மாளிகைக்கு கண்ணபிரான் தங்குவதற்காகச் சென்றதில் விஷயம் உண்டு. விதுரன் தனது சிறந்த பக்தன் என்ற காரணம் மட்டுமில்லை. ஏன்... பீஷ்மரும் சிறந்த பக்தர்தான். அவருடைய மாளிகையிலும் தங்கலாமே... பீஷ்மரையும் துரியோதனனையும் தவிர்த்துவிட்டு விதுரர் மாளிகையை தேர்ந்தெடுத்ததில் ராஜ தந்திரம் இருக்கிறது.

கண்ணபிரானைக் கண்ட விதுரர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். ஆமாம்! "தன் மாளிகையில் கண்ணபிரான் திருவடி பட, தான் எத்தனை ஜென்மமாய்ப் புண்ணியம் செய்தேனோ' என்று மகிழ்ந்து அவருக்குப் பற்பல உபசாரங்கள் செய்து புண்ணியம் தேடிக்கொண்டார் விதுரர்.

மறுநாள் ராஜசபையில் எல்லோரும் கூடியிருக்கையில் துரியோதனன் சினத்துடன் ஏதோ உறுமியபடி நின்று கொண்டிருந்தான்.

பாண்டவர்களுக்காகத் தூது வந்திருந்த கண்ணபிரானும் அவருடன் விதுரரும் உள்ளே நுழைந்தபோது துரியோதனன் ஆவேசம் வந்தவன்போல் விதுரரை ஏக வசனத்தில் அழைத்துக் கண்டபடி திட்டினான். தனது சிறிய பிதாவாகிய விதுரரை இப்படி ராஜ சபையில் பலர் முன்னிலையில் இப்படித் திட்டுகிறோமே என்று துளிக்கூடக் கவலைப்படவில்லை துரியோதனன். ஆத்திரம் அவன் அறிவை அப்படி மறைத்திருந்தது.

""நமது ஜென்மப் பகைவர்களிடமிருந்து தூது வந்திருக்கும் ஓர் இடையனுக்கு நீ எப்படி விருந்து படைத்து உன் மாளிகையில் தங்க வைப்பாய்? என் வீட்டில் உணவு உண்டு வாழ்பவன் நீ... எனக்கே துரோகம் செய்

கிறாயா?''என்று கண்டபடி திட்டி இறுதியில் விதுரனின் தாயின் கற்பையும் சந்தேகிக்கும்படியான வார்த்தையால் திட்டி விட்டான் துரியோதனன்.

அதைக் கேட்டதும்தான் விதுரர் கோபத்தில் வெடித்து எழுந்தார்.

""அடே துரியோதனா! அற்பப் பதரே! இப்படி வசை பாடிய உன் நாவையும் தலையையும் ஒரு நொடியில் என் வாளில் சீவித் தள்ளிவிடுவேன். நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் குரு குலத்தில் ஒருவன் மகனைக் கொன்றான் என்று விண்ணவர் பழிப்பார்களே என்று உனக்கு உயிர்பிச்சை தருகிறேன். பிழைத்துத் தொலை மடையனே... நாளை நடக்கின்ற யுத்தத்தில் அறம் நிச்சயம் வெல்லும். பாவம் தோற்கும். நீ அறவழி என்றால் என்ன என்பதே தெரியாத முழுமூடன். உன்னுடன் செஞ்சோற்றுக் கடனைக் கழிக்கவாவது நான் நின்று போரிட்டாலும் இறுதியில் பாண்டவரே வெல்வார்கள். ஆனாலும் நீ என்ன சொல்லுவாய்... நான் பட்சபாதத்துடன் போர் புரிந்ததாய் பழி கூறுவாய். ஆதலால் என்னுடைய இந்த மகத்தான வில்லை இதோ முறித்து எறிகிறேன். நீ உயிருடன் உள்ளவரை இந்த அஸ்தினாபுரத்திலேயே தங்கமாட்டேன். தீர்த்த யாத்திரை செல்வேன்'' என்று கூறி தனது மகிமை பொருந்திய வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டுவிட்டு சபையை விட்டுச் சென்று விடுகிறார் விதுரர்.

விதுரர் வைத்திருந்த வில் விஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது! இதனை அறிந்திருந்த கண்ணபிரான், தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது!

இந்த நிகழ்ச்சியைத்தான் "திருவேட்களம்' திருப்புகழ்பாடல்: "சதுர்த்தரை நோக்கிய பூவொடு' என்று துவங்கும் பாடலில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment