jaga flash news

Saturday, 12 September 2020

இந்திரா ஏகாதசி

Indira Ekadashi - ஏகாதசி விரத கதை - இந்திரா ஏகாதசி 13.09.2020

By fasting on Indira Ekadashi all the forefathers 
who are in hell will be at once liberated.

 
(   கிருஷ்ண பட்ச ஏகாதசி)
 ஆஸ்வீன மாதம், கிருஷ்ண பட்சத்தில், வரும் ஏகாதசி திதியை இந்திரா ஏகாதசியாக கொண்டாடுவர். இந்திரா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

 மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ணரை வணங்கி, "மதுசூதனா, மது என்னும் அரக்கனை அழித்தவரே,  ஆஸ்வீன மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் மற்றும் அதன் மகிமையை விவரமாக எடுத்துரைக்கவேண்டுகிறேன்" என்று கூறினார்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பதிலளிக்கையில் - "யுதிஷ்டிரா, புண்ணிய நாளான, ஆஸ்வீன மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி, இந்திரா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் விரத விதிமுறைப்படி உபவாசத்துடன் விரதம்அனுஷ்டிப்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதுடன், பாவ வினைகளின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக நரகத்தில் தள்ளப்பட்ட அவரின்  மூதாதையர்களும் விடுதலை பெறுவர். இப்புனித ஏகாதசி மஹிமையை கேட்கும்அனைவரும் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய பலன் பெறுவர்.

 சத்ய யுகத்தில் இந்திரசேனன் என்னும் ராஜா மஹிஷமதி புரி என்னும் ராஜ்யத்தை ஆண்டு வந்தார். பலசாலியான அவர் தனது திறமையாலும், பலத்தினாலும் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தி, பயம் இல்லாமல் அரசாண்டு வந்தார்.புகழும், பெருமையும் பெற்ற அரசர் மிக்க தெய்வ நம்பிக்கையும் கொண்டு தனது ராஜ்ஜியத்தின் குடிமக்கள் எவ்வித குறைகளும் இன்றி வாழ நன்கு போஷித்து வந்தார். அதனால் நாடு மிகவும் சுபிக்க்ஷத்துடன் இருந்தது. அரசன்இந்திரசேனன் அரண்மனையில் தங்கமும், தான்யமும் நிரம்பி வழிந்தது. மைந்தர்கள், பேரர்கள் என அனைத்து செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். பிரபு மஹாவிஷ்ணுவின் மீது அபரிமிதமான பக்தி பூண்டிருந்தார்.கோவிந்த நாம சங்கீர்த்தனையுடன் ஆன்மீகத்தில் தன்னை பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டு பரப்பிரம்மமான மெய்ப்பொருளை அறிய வேண்டி தியானத்தில் ஆழ்ந்து வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள், அரசன் இந்திரசேனன், மகிழ்வுடனும், அமைதியுடனும்  அமைச்சரவையில் இருக்க, அங்கு திரிலோக சஞ்சாரியான நாரதர் விஜயம் செய்தார். சங்கின் வெண்மை நிறத்துடன், சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன்,, மல்லிகைமலரை போன்று, மின்னலை போல் நாரதர் வானத்தில் இருந்து இறங்கினார். பின்னலிடப்பட்ட சிவப்பு நிற முடிக்கற்றை தலையை அலங்கரிக்க, அரசன் இந்திரசேனன் தேவரிஷி நாரதரை மிகவும் மரியாதையுடன், தனது இருகரங்களையும் கூப்பி தனது அரண்மனைக்கு வரவேற்றார். அவர் அமர்வதற்கு ஏற்ற ஆசனம் அளித்து, பாத பூஜை செய்து, இனிய வார்த்தைகளால் வரவேற்று உபசரித்தார். நாரத முனிவர் இந்திரசேனனை நோக்கி, " ராஜன்,ராஜ்ஜியத்தின் ஏழு (7) அங்கங்களும் சரியானபடி வளர்ச்சி பெற்று வருகிறதா என்று வினவினார்.அரசனின் நலம், அமைச்சர்கள், அரசாங்க கருவூலம், ராணுவம், நண்பர்கள், பிராம்மணர்கள், அவர்களால் ராஜ்ஜியத்தின் நலனுக்காகசெய்யப்படும் வேள்வி பலிகள், மற்றும் குடிமக்களின் தேவை இவை ஒரு ராஜ்ஜியத்தின் ஏழு அங்கங்கள் ஆகும்.  அரசாங்க கடமைகளை எப்படி நிறைவேற்றுவது எனும் யோசனையிலே உனது மனமும், சிந்தனையும் ஆழ்ந்துள்ளதா? பகவான் மஹாவிஷ்ணுவின் சேவையில் பக்தியுடன் பூரணமாக அர்ப்பணித்துக் கொள்ள உன்னால் முடிகிறதா? என்று கேட்டார்.அரசன் பதிலளிக்கையில், " முனிவர்களில் தலைசிறந்தவரே !  தங்களின் கிருபா கடாக்ஷத்தால், எல்லாம்நன்றாக நடந்து வருகிறது. இன்று உங்களின் வருகையினால், இந்த ராஜ்ஜியத்தில் செய்யப்பட்ட அனைத்து வேள்வி பலிகளும் வெற்றி பெற்றன. கருணைகூர்ந்து தங்களின் விஜயத்துக்குக்கான காரணத்தை கூற வேண்டுகிறேன்."என்றார். 

 தேவரிஷி நாரதர் அதற்கு பதிலளிக்கையில், "அரசர்களில் சிங்கத்தைப் போன்று புகழ் உடையவனே, உனக்கு வியப்பைத் தரக்கூடும் எனது வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் கேள். பிரம்மலோகத்தில் இருந்து கீழ் இறங்கி வரும்வழியில் யமலோகம் சென்றிருந்தேன். பிரபு எமதர்ம ராஜனும், என்னை மிகவும் கருணையுடன் புகழ்ந்து பாராட்டி அமருவதற்கு சிறப்பான ஆசனமும் அளித்தான். நான் அவன் செய்யும் சத்ய, தர்ம பரிபாலனத்தை மிகவும் சிலாகித்து,பகவான் மஹாவிஷ்ணுவின் மீதான அவன் பக்தியையும், சேவையையும் புகழ்ந்து பாராட்டினேன். அப்போது, அவன் அமைச்சரவையில் உனது தந்தையைக் கண்டேன்.  உனது தந்தையார் மிகவும் பக்தியுடன் விஷ்ணு சேவை புரிந்துஇருந்தாலும், ஒரு தடவை ஏகாதசி விரதத்தை பூரணமாக அனுஷ்டிக்காமல், நிறைவடைவதற்கு முன்பே நிறைவு செய்ததால், அவர் எமலோகம் செல்ல நேர்ந்தது. அவர் என்னிடம், "மஹிஷமதிபுரி என்னும் ராஜ்ஜியத்தை இந்திரசேனன்என்னும் அரசன் ஆண்டு வருகிறான். தயவுசெய்து அவனிடம் என் நிலையை எடுத்துச் சொல்லுங்கள். என் பாவ கர்மங்களின் விளைவாக,  நான் யமலோகத்தில் வாழ்கிறேன். ஆகையால், மகனே, கருணையுடன் வருகின்ற இந்திராஏகாதசி விரதத்தை விதிமுறைப்படி அனுஷ்டித்து, தான, தர்மமும் செய்தால், நான் நரகத்திலிருந்து விடுதலை பெற்று மேலுலகமான சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று சொல்லுங்கள்" என்றார்.தத்துவரீதியாக, இவ்வுலகில் வாழும்ஒவ்வொரு ஜீவராசியும் தனது ஆத்ம விடுதலைக்காக ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நாம சங்கீர்த்தனை செய்ய வேண்டும். கருடபுராணம் பாவ கர்மங்களின் வினையினால் நரகத்தில் இருப்பவர் பகவானை அமைதியாக தியானித்துபிரார்த்திக்க இயலாது. நரகத்தின் தண்டனைகளின் விளைவுகளால் மனம் மிகவும் அலைக்கழிக்கபடுவதால் அமைதி பெறுவது கடினமாகிறது. ஆதலால் நரகத்தில் வசிப்பவரின் உறவினர் எவராவது அவரின் பெயரில் தான, தர்மசெய்தால், அவர் நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கத்துக்கு செல்வர் என்கிறது. பிரம்மவைவர்த்த புராணம், நரகத்தில் இருப்பவருக்காக அவரின் உறவினர் எவராவது அவர் பொருட்டு, இங்கு இந்திரா ஏகாதசியை விரதவிதிமுறைகளின் படி கடைப்பிடித்தால், நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கலோகத்தை அடைவர் என்கிறது. மேலும் நாரதர், "உனது தந்தையர் என்னிடம் சொன்ன செய்தியை சொல்வதற்காகவே இங்கு வந்தேன். இந்திராஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து உனது தந்தையாருக்கு உதவுவது உன் கடமையாகும். விரதத்தை அனுஷ்டிப்பதால் உண்டாகும் புண்ணியத்தின் பலனால், உனது தந்தையார் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடைவார்"என்றார். அரசன் இந்திரசேனனும் நாரதரிடம், "மஹானே, தாங்கள் தயைகூர்ந்து இந்திரா ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் வழியையும், இந்திரா ஏகாதசி வரும் மாதத்தையும், நாளையும் கூறி அருள வேண்டும் என்று வேண்டினார்.

நாரதர் இந்திரசேனனிடம், "ராஜன், இந்திரா ஏகாதசி விரத விதி வழிமுறைகளை சொல்லுகிறேன். நீ கவனமாக கேட்டுக் கொள்." என்றார். 
1. ஆஸ்வீன மாதம், கிருஷ்ண பட்சத்தில் இந்திரா ஏகாதசி திதி வருகிறது.
2. ஏகாதசிக்கு முன் நாளான தசமி திதி நாளன்று, அதிகாலையில் எழுந்து, ஸ்நானம் முதலியவற்றை முடித்துக்கொண்டு, பகவான் விஷ்ணுவிற்கு பூஜை செய்ய வேண்டும்.

3. மதியம், மறுபடியும் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரில் (நதி முதலியன) குளித்து, மூதாதையர்களுக்கு நம்பிக்கையுடன், பக்திபூர்வத்துடன் தர்ப்பணம் செய்யவும்.

 4. ஏகாதசி நாளன்று காலை எழுந்தவுடன் பல் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும். பின்னர் பகவானை பக்தியுடனும், சிரத்தையுடனும் தியானித்து பின்வரும் புனித ஏகாதசி விரத சங்கல்பத்தை மேற்கொள்ளவேண்டும். " இன்று நாள் முழுதும் நான் உபவாசத்துடன், பஞ்சேந்திரியங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அனைத்தையும் துறந்து, பரம்பொருளே! நின்னையே தியானித்து இருப்பேன். அனைத்துலகையும் காக்கும்பரந்தாமா, நீயே கதி என்று சரண் அடைந்த என்னை காத்து அருள்வாய்" என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். 

5. ஏகாதசி மதியம், சாலிக்கிரம வடிவில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை விதி வழிமுறைப்படி பூஜித்து, வேள்வித்தீயில் நெய் ஆகுதி அளித்து, தர்ப்பணம் செய்து மூதாதையர் நரகத்திலிருந்து விடுதலை பெற உதவ வேண்டும்.
6. பின்னர், வேத அத்யயனம் செய்யும் பிராமணர்களுக்கு ஏகாதசி போஜனம் அளித்து, இயன்ற அளவில் தானமும் செய்ய வேண்டும்.
7.  பின்னர், மூதாதையர்களுக்கு அளிப்பதற்கு செய்த உணவுபிண்டங்களை முகர்ந்து பசுக்களுக்கு அளிக்க வேண்டும். அடுத்து, பிரபு ரிஷிகேசருக்கு நறுமண மலர்களை அர்ப்பணித்து பூஜை செய்ய வேண்டும். அன்று இரவு முழுவதும்பிரபு ஸ்ரீ கேசவரை தியானித்து கண் விழித்து இருக்க வேண்டும்.
8 அடுத்த நாள் காலை, துவாதசியன்று, ஸ்ரீ ஹரியை சிரத்தையுடன் பூஜித்து வணங்க வேண்டும். பின்னர் பிராமண போஜனம் செய்விக்க வேண்டும்.
10. பின்னர் உற்றார், உறவினர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும். கடைசியில், தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

"ராஜன், நான் கூறிய விதிமுறைப்படி இந்திரா ஏகாதசி விரதத்தை புலனடக்கத்துடன் வெற்றிகரமாக அனுஷ்டித்தால், நிச்சயம் தங்களின் தந்தையார் நரகத்திலிருந்து விடுதலை அடைந்து விஷ்ணுவின் உறைவிடத்தை அடைவர்." என்றுசொல்லி நாரதர் இந்திரசேனனை ஆசீர்வதித்து மறைந்தார்.

அரசன் இந்திரசேனன், தனது உற்றார், உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருடனும் இணைந்து தேவரிஷி நாரதர் கூறிய விதிமுறைப்படி முறையாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். மறுநாள் துவாதசியன்று மதியம் அரசன்தன்னுடைய விரதத்தை முடித்த போது தேவர்கள் வானத்திலிருந்து மலர்களை தூவி ஆசீர்வதித்தனர். ஏகாதசி விரத புண்ணிய பலனால், இந்திரசேனனின் தந்தை எமலோகத்திலிருந்து விடுதலை அடைந்தார். இந்திரசேனன் தனதுதந்தை கருட வாகனத்தில் ஸ்ரீஹரியின் உறைவிடத்திற்கு செல்லுவதை கண் எதிரே கண்டு நிம்மதியும், அமைதியும் அடைந்தார். பின்னர் நெடுங்காலம் எவ்வித இடையூறும் இன்றி ராஜ்ஜியத்தை ஆண்டு தனது மகன் வசம் ராஜ்யபரிபாலனத்தை ஒப்படைத்து விட்டு, தானும் வைகுண்டம் அடைந்தார். 

"ஒ யுதிஷ்டிரா, ஆஸ்வீன மாதம், கிருஷ்ண பட்ச ஏகாதசி விரத மஹிமையை உனக்கு எடுத்துரைத்தேன். இதைக் கேட்பவரும், படிப்பவரும் நிச்சயம் இவ்வுலக வாழ்க்கையில் அனைத்து சுகபோகமும் பெற்று வாழ்வதுடன், தன்பாவவினைகளிலிருந்து முக்தி பெற்று மரணத்திற்குப் பின் வைகுண்டத்தை அடைவர்." என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

பிரம்ம வைவர்த்த புராணம், ஆஸ்வீன மாதம், கிருஷ்ண பட்ச ஏகாதசி அதாவது இந்திரா ஏகாதசி  என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது. 

 On 14th Sep, Parana Time - 08:49 AM to 10:02 AM

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே,

No comments:

Post a Comment