jaga flash news

Friday, 27 November 2020

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் !

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் ! நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம் என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது. மூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது. விக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சில சமயங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ஹிக் ஹிக் என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல். ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது விக்கல் நிற்பது ஏன்? பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன. இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது. விக்கல் வருவதற்கான காரணங்கள் : உணவை வேகமாகச் சாப்பிடுதல். அளவுக்கு மீறிய உணவை உண்ணுதல். வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல். அளவிற்கதிகமாக மது அருந்துதல். வயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம். தீர்வுகள் : விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10 - 20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

No comments:

Post a Comment