jaga flash news

Wednesday, 21 October 2020

அனுமன் பிறந்த கதை தெரியுமா?*

"ஸ்ரீ அனுமன்  திருவடிகளே சரணம்"

*அனுமன் பிறந்த கதை தெரியுமா?*

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள். எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். *புஞ்ஜிகஸ்தலை* என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள்.

"ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ.." என சாபமிட்டார் ரிஷி.

புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, "பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்" என்ற வரம் அளித்தார். அந்தப்பெண் ஒரு பிறவியில், *கேஸரி* என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு *அஞ்ஜனை* என்ற பெயர். கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் மை பூசிய பேரழகி.

ஒருநாள், அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். 

தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது, என கதறினாள். அப்போது வாயுபகவான் காட்சியளித்து "பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை. மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்"  என சொல்லி மறைந்தார். அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

*அனுமன் பெயர்க்காரணம்!*

ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை ஹனு என்பர். எனவே அவர் ஹனுமான் ஆனார். தமிழில் அனுமன் என்கிறோம்.

*ராமாயணத்தில் அனுமன் யார்?*

ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. 

இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். 

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! 

ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! 

அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். 

இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். 

ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

*அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்?*

அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். 

வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.துளசிதாசர் எழுதிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் இதன் பொருளை வாசிக்கலாம். 

மாலையில் 1008 முறைக்கு குறையாமல் *ஸ்ரீராம ஜெயம்* சொல்ல வேண்டும். அவரது கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். 

ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரவில் தூங்கும் முன் ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமானவர் கள் சாப்பிடாமல் இருக்கலாம். மற்றவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். 

பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், *ராமா* என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் *ஆஞ்சநேயர்* இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று

"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்"

என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.

*அனுமனை வணங்குவதன் பலன்*

அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

*வெண்ணெய், வடை மாலை சாற்றுவது ஏன்?*

இதற்கும் அன்னை சீதாப்பிராட்டியார்தான் காரணம். இலங்கைக்குத் தீ வைத்த போது நெருப்பு அவரைச் சுடவில்லை என்றாலும், அதன் வெம்மை அவரைத் தாக்கியது. மேலும் போர்க்களத்தில் ஒரு கட்டத்தில் ராமனை ஒரு தோளிலும், இலக்குவனை மறு தோளிலும் சுமந்து அவர்கள் போரிட உறுதுணையாக இருந்தார் அனுமன். 

அப்போது எதிரிகள் எய்த அம்புகளாலும், கொடிய ஆயுதங்களாலும் மாருதியின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. அதை அவர் ஒரு பேறாகவே கருதினார். போர் முடிந்தது. 

சீதை அக்னிப் பரீட்சையில் வென்று சீதாராமனாக காட்சி அளித்தார் ராமபிரான். அப்போது சீதை அனுமனின் உடலெங்கும் உள்ள காயத்தையும், வெப்பத்தினால் அவர் படும் வேதனையையும் புரிந்து கொண்டாள். 

என்ன இருந்தாலும் தாய் உள்ளம் அல்லவா? உடனே நிறைய வெண்ணெய் கொண்டு வரச் செய்து, அதை மாருதியின் உடலெங்கும் பூசச் செய்தாள். 

புண்களினால் ஏற்பட்ட வலியும், சூட்டினால் ஏற்பட்ட வேதனையும் வெகுவாகக் குறைந்தது. 

அதனால் அனுமன் மனம் மகிழ்ந்து, எனக்கு வெண்ணெய் சாற்றுபவர்களின் நோய் ராமபிரான் அருளால் முழுவதும் நீங்கிவிடும்! என்று கூறினார். அதனாலேயே அவருக்கு வெண்ணெய் சாற்றும் வழக்கம் ஏற்பட்டது.

வடை மாலை: 

நவகிரகங்களில் உளுந்து ராகுவுக்குரிய தானியம். ராகுவாலும் சில கெடுதல்களைச் செய்ய முடியும். அதைப்போக்க உளுந்தை நன்றாக அரைத்து, வடை செய்து அதை மாலையாக்கி அனுமனுக்கு அணிவித்து வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும். தோலுடன் கூடிய கறுப்பு உளுந்து என்றால் மிகவும் விசேஷம் என்பது ஐதிகம்.

*பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்*

1. *ஸ்ரீ ஹனுமத் சுலோகம் 

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.

2. *வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம்*

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||

3. *எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட 

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||

உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும்.

ஓம் அனுமனை போற்றி
ஓம் அஞ்சனை புதல்வனை போற்றி
ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
ஓம் அமாவாசையில் பிறந்தவனே போற்றி
ஓம் அவதார புருஷனே போற்றி
ஓம் ஆரோக்யமளிப்பவனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
ஓம் கர்மயோகியே போற்றி
ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
ஓம் சீதாராம சேவகனே போற்றி
ஓம் சூரிய சீடனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் பஞ்சமுகனே போற்றி
ஓம் பக்தரக்ஷகனே போற்றி
ஓம் பயமேயறியானே போற்றி
ஓம் பரதனை காத்தவனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் புலனை வென்றவனே போற்றி
பொட்டிட மகிழ்வானே போற்றி
ஓம் மூலநக்ஷத்ரனே போற்றி
ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
ஓம் மாவீரனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் ராமதாசனே போற்றி
ஓம் ராமநாமத்திருப்பானே போற்றி
ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
ஓம் ருத்ர வடிவே போற்றி
ஓம் லக்ஷ்மணனைக் காத்தவனே போற்றி
ஓம் வாயுகுமாரா போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வணங்குவோர் வாழ்வே போற்றி
ஓம் வைராக்கியனே போற்றி
ஓம் வேதக்கடலே போற்றி
ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

"ஸ்ரீ அனுமன்  திருவடிகளே சரணம்"

ஸ்ரீ ராமஜெய வரத ஆஞ்சநேயர் திருக்கோவில் 
தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவுற்று மண்டல பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமஜெய வரத ஆஞ்சநேயர் அருள் பெற அழைக்கிறோம்




No comments:

Post a Comment