jaga flash news

Thursday, 1 October 2020

விவசாயி, மகன், கழுதை

விவசாயி, மகன், கழுதை The Man, the Boy, and the Donkey 

 ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள்.


செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார்.


அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர், ‘ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார்.


உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். தந்தையும் அவ்வாறே செய்தார்.




இப்படியாக இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’ என கேட்டார்.



தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையிம் முதுகில் ஏறிச் செல்வோம் என ஏறிக் கொண்டனர்.



சிறிது தொலைவு சென்றதும், இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா?’ என எள்ளி நகையாடினர்.





அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள்.

மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர்.



கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது.


விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது.


அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! அது இறக்க நேரிட்டது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறந்து போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

நீதி :

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது.

    சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

No comments:

Post a Comment