jaga flash news

Thursday 27 November 2014

பூப்புனித நீராட்டுவிழா

தமிழர்களின் பாரம்பரியம் "பூப்புனித நீராட்டுவிழா "

    பூப்புனித நீராட்டுவிழா என்பது, பூப்படைந்தை பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா என பொருள்படும். அதாவது, பருவ வயதை அடைந்த ஒரு சிறுமி பால்முதிர்ச்சி அடைந்து (சிறுமியாக இருந்தவள் குமரியாக மாறும்) பருவ மாற்றம் பெற்று “பக்குவப் படும்போது” நடாத்தப் பெறும் ஒரு சமயச் சடங்காகும். 


சந்தான விருத்தி (தாய்மை) அடையக் கூடிய பருவத்தை முதன் முதலில் பெறும்போது அதாவது முதல் கரு உற்பத்தியாகியதை (மாதவிடாய் வெளியானதை) காரணமாக வைத்து சமயச் சடங்குகள் செய்யப் பெறுகின்றன. இச் சடங்குகள் செய்வதன் மூலம் அப் பெண்ணிற்கு ஆசூசம், கண்ணூறு, தோஷ நிவர்த்தியும், மாங்கல்ய பாக்கியமும், சந்தான விருத்தியும் கிடைக்கப் பெறும் என்பது இந்துக்களின் ஐதீகம்.



முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் செய்யப் பெறுகின்றன. பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்பெறுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், சமூகம், அவர்களின் வாழ்நிலை வசதிகள் போன்றவைகளுக்கு அமைய மாறுபடுகின்றன. பொதுவாக ஒரு பெண் பூப்படைந்த நேரத்தை வைத்து கணிக்கப்பெறும் ஜாதகம் அவள் பிறக்கும் போது எழுதப்பட்ட ஜாதகத்திலும் சிறப்புடையது என ஜோதிடம் கூறுகின்றது.



இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.



இங்கே விபரிக்கப்படுபவை தென்னிந்திய, ஈழத்து தமிழரிடையே (சாதிப் படிநிலைச் சமூக அமைப்பில்) இந்துக்களிடையே நடைபெறும் சடங்குகளின் பொதுவான சில நிகழ்வுகளாகும். இவை இடத்துக்கிடம் மாற்றம் காணலாம், வேறு பல கூறுகள் சேர்க்கப்படலாம். சில கைவிடவும்படலாம்.



முதல் தண்ணி வார்த்தல் (நீராட்டல்):

மஞ்சள் நீராட்டுச் சடங்கு பெண் பூப்படைந்தவுடன் முக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் (குப்பை) மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி (தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற் தண்ணி எனப்படும்.



தற்காலத்தில் தனியாக குளியலறை வைத்திருப்பவர்கள் பெண்ணை குளியறையில் நீராட்டுகின்றார்கள். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர்.



அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தகம் (பன்ன வேலைக்குப் பாவிப்பது) முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் (காவலுக்காகச்) செருகிவிடுவார்கள். கன்னிப் பெண் பூப்பெய்திய காலத்தில், அல்லது மாதவிடாய் உள்ள காலத்தில் பேய் பிசாசுகள் பிடிக்கும் என்ற பயம் எமது மூதாதையினரிடம் இருந்து வந்துள்ளது. அதனால் போலும் அவர்கள் பூப்பெய்திய பெண்களையும், மாதவிடாய் வந்த பெண்களையும் வீட்டின் ஒதுக்கமான இடத்தில் கரியினால் கோடிட்டு வேப்பம் இலையும், காம்புச்சத்தகம் வைத்து காவல் செய்யப் பெற்ற இடத்தில் 3 நாட்களுக்கு தங்க வைக்கிறார்கள். தீட்டுத்துடக்கு வீட்டை குட்டிச்சுவராக்கும் என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.



பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாழிக்குக் கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டு முடியும் வரை மாற்றுடுப்பு வழங்கும் பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பத்தொரு நாட்கள் வீட்டுத் (ஆசூசம்) துடக்கு ஏற்படுகின்றது.ஆகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு குருவை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.



பூப்பெய்திய பெண்ணை உபசரிக்கும் முறை:

முதற்தண்ணி வார்த்ததும் சில இடங்களில் கத்தரிக்காயை மெதுவான அடுப்புத் தணலில் (சுட்டு) வாட்டி எடுத்து, சிறிய உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்தெடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். ஒரு தரம் இதைக் குடித்தால் பெண்களுக்குப் பிரத்தியேகமாக ஏற்படும் நாரி வலி பின் ஒருபோதும் தோன்றாது என நம்பப்படுகிறது.



உணவாக முதல் மூன்று நாட்களும் பச்சையரிசிச் சாதமும், கத்தரிக்காய் பாற்கறியும் கொடுப்பார்கள். மூன்று நாட்களின் பின் அதிகாலை ஒரு பச்சை முட்டை குடிக்கக் கொடுத்து அதன் அளவு நல்லெண்ணெயும் முட்டைக் கோதுக்குள் விட்டு குடிக்கக் கொடுப்பார்கள். பின்பு காலை உழுத்தங்களி, மதியம் சோறு கறி, கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் கொடுப்பார்கள். பொரியல் வகை சமயல் எல்லாவற்றிற்கும் நல்லெண்ணையையே பாவிப்பார்கள்.



பால் விடாது காலை, மாலை கோப்பி கொடுக்கலாம். இரவு இடியப்பம் கொடுக்கலாம். இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் கூடிய ஊட்டநலன் உள்ள உணவுகளைக் கொடுப்பர். முக்கியமாக அனைத்து உணவுகளிலும் உழுந்தும், நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்கப்படும்.



அத்துடன் காலையில் வேப்பிலை 10, மிளகு 3, விரற்பிடி சின்னச் சீரகம், 2 உள்ளிப் பல், சிறுதுண்டு மஞ்சள் இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் குளிசைகளாக்கி (சரக்கு உறுண்டை) 3 நாட்களுக்கு விழுங்கக் கொடுப்பது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது .



சாமர்த்தியச் சடங்கு - தோயவார்த்தல் - (தலைக்குத் தண்ணீர் வார்த்தல்)

சடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவு செய்து அச் சடங்கை விழாவாக வீட்டிலா அல்லது மண்டபத்திலோ செய்வதன முடிவு செய்வர். அத்துடன் அவர்கள் தம் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவ் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுப்பார்கள். வசதி படைத்தோர் தலைக்குத் தண்ணீர் வார்த்தலை வீட்டிலும். அதற்கான கொண்டாட்டத்தினை மண்டபத்திலும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.மற்றையோர் இரண்டையும் வீட்டிலேயே செய்வார்கள்.



வீட்டில் நடத்தப்பெறும் தலைக்குத் தண்ணீர் வார்த்தல் செய்யும் முறைகள்

பருவமடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேல் பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர்.



பால் தப்பும் இடதில், நிறைகுடம், குத்துவிளக்கு, ஒரு பாத்திரத்தில் பால் - அறுகம்புல், சில்லறைக் காசும் இட்டு வைக்கப் பெற்றிருக்கும். அத்துடன் வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பார்கள். இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் கொடுக்கப் பெறுகின்றது. பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எல்லாக் காரியங்களும் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்குவர்.



தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் (தப்புவார்) வைப்பார்கள். அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 7 பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பார்கள். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார்.



அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர்.



ஆரத்தி எடுத்தல்:

பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலைக் கொத்தினால் மூடப்பெற்ற நிறைகுடம் அல்லது செம்பு) கொடுப்பார். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைப்பார்கள்.



பின்னர் சுமங்கலிப் பெண்கள் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது பக்கமாக உயர்த்தி (ஆலயத்தில் சுவாமிக்கு கற்பூர ஆராத்தி எடுப்பதுபோல்) ஆரத்தி எடுத்து பின் தலைக்குமேல் மணிக்கூடு சுற்றும் திசையில் மூன்று முறை சுற்றி அதைப் பின்னுக்கு கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறிந்து வேப்பிலையால் தலையையும் உடம்பையும் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ திரி ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம்),



ஆரத்தி இரு வகையாக செய்யப் பெறுகின்றது. சுப காரியங்களுக்கு வலஞ் சுழியாகவும் அசுப காரியங்களுக்கு இடஞ்சுழியாகவும் எடுப்பது ஆகம விதி, ஆராத்தி எடுப்பவர்கள் அவதானத்துடன் எடுப்பது முக்கியமாகும். ஆராத்தி எடுப்பவர்கள் சில சமயங்களில் இடஞ்சுழியாக ஆராத்தித் தட்டை சுற்றுவது எதிர்மாறான பலனைக் கொடுக்கக் கூடும். குளிக்கப் போய் சேறு பூசின கதையாக முடிந்து விடலாம். அதனால், ஆராத்தித் தட்டை எடுத்து வலது-இடது பக்கமாக மூன்று முறை ஆட்டியபின் ஆராத்தி யாருக்கு எடுக்கப் பெறுகின்றதோ அவரின்-அவர்களின் வலது பக்கமாக உயர்த்தி இடது பக்கமாக பதித்து மூன்று ்முறை சுற்றுதல் வேண்டும்.



ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை பால்றொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை).



பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் அணிந்து (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணைப் பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூசை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்குபற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தி தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்கள் மதிய உணவு விருந்தளித்து உபசரிப்பர்.



ஆரத்தி எடுக்கும் முறை

உணவு பொருள்கள் அடங்கிய ஆராத்தி தட்டத்தினனை 3 முறை மேலும் கீழுமாக சுற்றிப் பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் நிற்பவரிடம் கொடுப்பார்கள்.நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும்.



பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும்.பின் இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் சலவைத் தொழிலாளிடம் கொடுத்து விடப்படும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும்.



மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகள்:

இங்கும் ஆரத்தி எடுக்கப்பெற்கின்றன. அத்துடன் விசேடமாக ஒழுங்கு செய்யப்பெற்ற மலர்-தட்டுகளுடன் சிறுமியர்களும், குத்துவிளக்குகளுடன் பூப்பெய்திய பெண்களும், ஆராத்தித் தட்டங்களுடன் சுமங்கலிப் பெண்களும் பூப்பெய்திய பெண்ணை மேடைக்கு அழைத்து வருவார்கள். அதன்பின் ஆராத்திகள் எடுக்கப்பெறும். நிறைவாக நிழல் படங்கள் பிடித்து விருந்துபசாரம் செய்யப்பெறும்.



ஆரத்திக்கான பலகாரங்கள் செய்யும் முறை

பால்சாதம் (பால்புக்கை): பச்சை அரிசியும், தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கப்படும்.



பிட்டு: வழமை போல் வறுத்த உழுத்தமா, அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் சிறியனவாக மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்.



களி: வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைக்கப்படும்.



பாலுறட்டி (பால்ரொட்டி)

1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணை தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணையில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்.



ஆரத்திப் பொருட்கள்:

நிறை நாழி (நிறை நாழி - கொத்தில் நெல்லை நிரப்பி அதன் நடுவே காம்புச் சத்தகத்தை குத்தி வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் சொருகி வைப்பர்.)

பிட்டு, களி, பால்சாதம், சோறுகறி. தேங்காய்த் தட்டம் (முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்),

பழங்கள்

பலகாரம்

பன்னீர்த்தட்டம்

வெற்றிலை பாக்கு எலுமிச்சை,

பூத்தட்டு,

பாலுறட்டி,

வேப்பிலை,



பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.



நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.



ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் ஒரு பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்த பெண்களும் பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்.



ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் அவரையும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.



இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.



தமிழ்நாட்டு வழமை:

தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).



பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன.



புனிதச் சடங்கு

பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.



பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார்.



அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.



இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.



இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.



குடும்பச் சடங்கு

புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர்.



இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்

No comments:

Post a Comment