jaga flash news

Monday, 16 March 2015

மன அழுத்தம்

மன அழுத்தம்
மன அழுத்தத்திற்கு என்ன தீர்வு, இதை எவ்வாறு கட்டுப்படுத்துதல் என்பது பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னர் மன அழுத்தம் நீண்டகால ரீதியில் எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியும் சற்று மேலோட்டாகப் பார்ப்போம்.
மன அழுத்தத்தினை நீண்டகாலமாக குணப்படுத்தாது, வைத்திய உதவியை நாடாமல் கவனிப்பாரற்று அசட்டை செய்யும்பொழுது இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது உடல் நிலையைப் பாதிப்பதுடன் நின்றுவிடாது எமது வாழ்க்கைக் காலத்தையும் பெருமனே குறைக்கின்றது. இது கேட்பதற்கு புதிதாகவும் வியப்பாகவும் இருந்தாலும் இது எவ்வாறு நடக்கின்றது என்று பார்ப்போம். மன அழுத்தம் யாரில் ஏற்படுகின்றது என்று பார்த்தால் அண்மையில் பாரிய இழப்புகளை சந்தித்தவர்கள் மற்றும் நீண்டகால நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இவற்றில் மாரடைப்பு வந்தவர்கள், பாரிசவாதம் வந்தவர்கள், நீரிழிவு நோய் வந்தவர்கள் இது தவிர புத்தி சுவாதீனம் இல்லாமல் உள்ளவர்களை பராமரிப்பவர்கள் போன்றவர்களை முக்கிய உதாரணமாகக் கூறலாம். சென்ற இதழில் குறிப்பிட்டது போன்று மன அழுத்தம் எம்மை பல்வேறு விதங்களில் பாதிக்கின்றது. மன அழுத்தத்தின் முக்கிய இயல்புகளில் ஒன்று எமது மனத்தின் ஒருமுகச் சிந்தனையை சிதறடிக்தலாகும். இதன் காரணமாகத்தான், மன அழுத்தம் உள்ளபோது எம்மால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடிவதில்லை, செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் நாட்டம் அற்றுப் போகின்றது. சரி, இது எவ்வாறு எமது உடல் நிலையைப் பாதிக்கமுடியும்? இங்குதான் மன அழுத்தத்தின் அடிப்படையே ஆரம்பமாகின்றது. எமது உடல் எந்த ஒரு சிறிய வியாதியிலிருந்தும் குணப்படவேண்டுமென்றால் எமது மன நிலை நன்றாக இருத்தல் மிக அவசியம். நாம் அதிகளவு மன அழுத்தத்தில் வருந்தும் பொழுது கோர்ட்டிசோல் எனப்படும் உடற்சுரப்பு அல்லது ஹோர்மோன் பெருமளவில் எமது உடலில் சுரக்கின்றன. இவை எமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குணமடையும் தன்மை என்பவற்றை பெருமளவு குறைக்கின்றன. கோர்டிசோல் உடற்சுரப்புப் பற்றி பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல, இது எமது உடலில் குளுக்கோசின் அளவை கூட்டுதல், உடல் நிறையை அதிகரித்தல், நீரிழிவு நோயினை மோசமாக்குதல், எலும்பின் அடர்த்தியினை குறைத்தல் போன்ற பல்வேறு தீய விளைவுகளை தூண்டுகின்றது.
அடுத்ததாக, மன அழுத்தத்தின் மிகமுக்கிய பாதிப்புகளில் ஒன்று எமக்கு எதைச் செய்வது என்றாலும் அதில் நாட்டம் அற்றுப் போகின்றது. உதாரணமாக, நீரிழிவு நோய் வந்தவர்களைப் பார்த்தால், இவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக அவசியமாகச் செய்யவேண்டிய தொழிற்பாடுகள் பல. என்ன சாப்பிடுகின்றோம், எவ்வளவு சாப்பிடுகின்றோம், நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தல், வேளாவேளைக்கு மருந்துகளையோ, இன்சுலினையோ தவறாது பாவித்தல், இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை தவறாது பாவித்தல் போன்றன. இவர்களுக்கு எதிலும் நாட்டம் இல்லாமற்போய் நம்பிக்கையின்மை ஏற்படும்போது இவர்களின் நீரிழிவு நோய்க்குரிய கட்டுப்பாடு பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதே கூற்று நீடித்த நோய்களினால் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் பொருந்தும்.
மேலே குறிபிட்ட காரணிகளுடன், நித்திரை இல்லாமற்போதல் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற பல்வேறுவிடயங்கள் எமது பொது உடல்நிலையைப் பாதிக்கக்கூடிய தன்மை ஏற்படுகின்றது.
மன அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உளநோய் மருத்துவர்கள் உளநோய் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பது வழக்கம். இந்த மருந்துகளின் தொழிற்பாட்டின் அத்திவாரம் என்ன என்று பார்த்தால், இவை மன அழுத்தத்தை பூரணமாக குணமாக்கிவிடப்போவதில்லை. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு தீர்ப்பதன் மூலமோ அல்லது தவிர்ப்பதன் மூலம் மட்டுமே இந்த மருந்துகளின் பூரண தொழிற்பாட்டை அனுபவிக்கமுடியும். இதன் காரணத்தினால் மன அழுத்தத்திற்கான முன்னணித்தீர்வு கவுன்சலிங் அல்லது திறப்பி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மதிவளத்துணை சிகிச்சைகளில் தங்கியிருக்கின்றன. சுருங்கக்கூறினால் உளநோய் மருத்துவர் மன அழுத்தம் உள்ளவருடன் தனியாக அமர்ந்து அவருடைய குறைநிறைகளை கேட்டறிந்து எந்த எந்தக் காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என்று அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசித்தலாகும். கேட்பதற்கு இலகுவாகவும் இது உண்மையிலேயே மன அழுத்தத்தை குறைக்க உதவுமா என்றும் எம்மில் பலர் வியக்கக்கூடும். ஆனால் இவ்வகையான மதிவளத்துணை சிகிச்சைகள் மிகவும் பயனளிப்பதுடன் மன அழுத்தம் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை செல்வனே உயர்த்துகின்றது என்றால் அது மிகையாகாது.
இந்த மதிவளத்துணை சிகிச்சைகளில் பல்வேறு உப பிரிவுகள் அல்லது வகையான சிகிச்சைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் வௌ;வேறுவிதமாக பலனளிக்க வல்லன.
பொதுவாக இச்சிகிச்சைகளின் மூலம் ஒருவர் தனது எதிர்மறையான சிந்தனைகளைஅடையாளம் காணுதல், அவை ஏற்படும்போது அதனை எவ்வாறு வெற்றிகொள்ளுதல் மற்றும் தமது புலனுணர்வு நடத்தைகளை எவ்வாறு தெளிவுபடுத்தி நேர் திசையில் நெறிப்படுத்தல் போன்ற பல்வேறு அடிப்படைகளை கற்றுக்கொள்ள முடிகிறது. இந்த மதிவளத்துணை சிகிச்சைகள் நீண்டகாலமாக மிகக் கடுமையான மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உதவியளிக்கப் போவதில்லை. இப்படியானவர்களுக்கு மன அழுத்தம் எதிர்ப்பு மருந்துகளும் சேர்த்துக் கொள்வதன் மூலமே பூரண பயனை அடைய முடியும்.
மேலே குறிப்பிட்டதுபோல மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நம்பிக்கையின்மை சோர்வான எண்ணங்கள் ஏற்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் எந்தக் காரணமுமே இல்லாமல் மன அழுத்தம் சோகம் போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றது. மதிவளத்துணை சிகிச்சையானது இந்த எண்ணங்கள் எப்பொழுது எதனால் ஏற்படுகின்றது என்பதையும் அவற்றை எவ்வாறு அடையாளம் கண்டு தீர்த்தல் அல்லது தவிர்த்தல் போன்றவற்றுக்கு உதவிபுரிகின்றன.
இவ்வாறாக தனிப்பட்ட சிகிச்சை தவிர குழுக்களாக சிகிச்சை பெறுவதும் மிகவும் பயனளிப்பதாக நம்பபப்படுகின்றது. இதனை குழு மதிவளத்துணைச் சிகிச்சை என்று அழைக்கலாம். இதன் அடித்தளம் மிகவும் இலகுவானது. பொதுவாக தனிமையாக இருக்கும்பொழுது எமது மன அழுத்தம் அதிகரிக்கின்றது. பலருடன் சேர்ந்து கூடிக்கதைக்கும் பொழுது மனப்பாரம் குறைகின்றது. இதன் அடிப்படையில் மன அழுத்தம் உள்ளவர்கள தமது குறைநிறைகளை ஒன்றாகக் கலந்தாலோசிக்கும் பொழுதும், அதைப் பகிர்ந்து கொள்ளும் பொழுதும் இவர்களுக்கு மனபலம் நம்பிக்கை என்பன வளர்ச்சியடைகின்றது. இந்தக் குழுக்களில் இருந்து பல்வேறுவிதமான உளரீதியான ஆதரவுகளை பெற்றுக் கொள்ளவும் முடிகின்றது. எமது அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தை சற்று உற்றுப் பார்ப்போம். எம்மில் பலருக்கு முக்கிய பிரச்சனை என்ன? எமது உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் கிடைப்பதில்லை. ஒருவருடைய பிரச்சினையின் ஆழத்தையும் காரணத்தையும் மற்றவரால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அதற்கு பெரும்பாலானவர்கள் தயாராகவும் இல்லை. 'இருக்கிற பிரச்சனைக்கை டிப்பிரசன்தான் முக்கியம்' என்றுதான் பலர் கூறக்கேட்டிருப்போம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மன அழுத்தம் எமது கையை மீறிப் போகும்போது உங்கள் குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெறுதல் பயனளிக்கும். எம்மைப் போன்ற மேற்கத்தைய பிறமொழிபேசும் நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்படும் முக்கிய சவால்களில் ஒன்று மொழிப் பிரச்சனை. ஒருவர் மனம் திறந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு விளக்கம் மற்றும் மொழி என்பன மிக முக்கியமான அடித்தளமாக செயற்படுகின்றது. உதாரணமாக ஒரு உணர்வினை வெளிப்படுத்தும் பாடலையோ கவிதையையோ இன்னொரு மொழிக்கு பெயர்க்கும்பொழுது அது தன்னுடைய மூலதளத்தைவிட்டு விலகியே அர்த்தம் கொடுக்கும். அதுபோல எமது உணர்வுகளை உடைந்த ஆங்கிலத்தில் உளநோய் வைத்தியருக்கு தெரிவிப்பது அசாத்தியமானது. இதன் காரணமாக எந்த மனோதத்துவ நிபுணரையோ நாடும்போது அவர் சொந்த மொழி பேசுபவராக தெரிந்தெடுத்தல் மிக அவசியம்.
எமது மன அழுத்தத்திற்கு தீர்வுகாண முழுப்பாரத்தையும் வைத்தியரின் தோள்களில் சுமத்திவிடாது எமது அன்றாட வாழ்க்கையிலும் பலமாற்றங்களை செய்தல் மிக அவசியம். அன்றாட உடற்பயிற்சி, போதிய அளவு உறக்கம், தனிமையை முடிந்த அளவு தவிர்த்தல், உணர்வுகளை பலருடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பன மன அழுத்தத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தவல்லன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் மதிவளத்துணை சிகிச்சைகளை நாடும்பொழுது அழுத்தத்தினை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடிகின்றது. நீண்டகாலமாக மன அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள் தமது உடல் நிலையை நல்ல நிலையில் பாதுகாப்பதற்கு உளநோய் வைத்திய நிபுணரின் ஆலோசனையை நாடுதல் பெரும் பயனளிக்கும்

No comments:

Post a Comment