jaga flash news

Sunday, 25 September 2016

மந்திரம் கால் மதி முக்கால்

மந்திரம் கால் மதி முக்கால் 


ஸ்ரீவித்தையில் நாம் பல மந்த்ரங்களை ஜபிக்கிறோம். இதில் இல்லாத மந்திரங்களே இல்லை. உடல் ரீதியாக வரும் நோய்களை அகற்ற பலவேறு மந்திரங்கள் உள்ளன. மனநோய்களுக்கும் இன்னபிற காரிய சாகயங்களுக்கும் மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திர உச்சாரணங்களின் வலிமையை பொறுத்து பலப்ராப்தி ஏற்படுவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். சில இடங்களில் பலப்ராப்தி ஏற்படுவதில்லை என்பதையும் காண்கிறோம். இதற்கு ஒரு காரணம் உள்ளது,. இதை ஏன் என்று விசாரித்தால் மந்திரம் கால் மதிமுக்கால் என்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்த மந்திரங்களை உச்சாரணம் செய்யும் முறையே காரணம். மன ஈடுபாட்டுடன் செய்தால் பலப்ராப்தி சீக்கிரமே ஏற்பட்டுவிடுகிறது. அதாவது மந்திரம் கால்பகுதி உச்சரித்தால் அதில் முக்கால் பகுதி நமது மதியை புத்தியை செலுத்த வேண்டும். அதுதான் மந்திரம் கால் மதிமுக்கால் என்பது. அர்த்தவிசாரம் இல்லாமல் செய்தால் பலப்ராப்தி குறைவாகவே ஏற்படும். இது ஆத்ம ஞான மந்திரங்களுக்கும் பொருந்தும். பஞ்சதசாக்ஷரீயான ஸ்ரீவித்யை ஆத்ம ஞானத்திற்கே உரியது. உலகாயதமான பலன்களும் ஏற்படுகிறதே என்றால் அது அதன் பக்கவிளைவு. மருந்து சாப்பிட்டால் வியாதி குணமாவதோடு பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுவதுபோல் அக்ஞானமாகிற நோய் குணமாவதோடு உலக இன்பங்களும் ஏற்படுகின்றன. இந்த விபரீதமான சில பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்கத்தான் இந்த வித்யையை ஜபிக்க சில கட்டுப்பாடுகளும் சாபவிமோசனங்களும் ஜபவிதியும் ஏற்பட்டுள்ளன. இவை ஸாதகனை உலக நினைவிலிருந்து மீட்டு தானே தன்னை அறியும் அந்த மோக்ஷ நிலையாம் பலப்ராப்தியை ஏற்படுத்துகிறது. அதனால் மூன்று கூடங்கள் அடங்கிய இந்த வித்யை முக்கால் பகுதி மதியான மனத்தாலும் புத்தியாலும் ஆராய்ந்து ஜபித்தால் மஹாவாக்யங்கள் இவனுக்கு புரிபடுகின்றன. ஜடமாக ஆயிரம் ஆவர்த்தி பண்ணுவதைவிட மதியை செலுத்தி நூறு ஆவர்த்தி செய்தால் பலன் சீக்கிரம் ஏற்படும் அல்லவா? இப்படி மதி முக்கால் பங்கு செலுத்த என்ன செய்யவேண்டும் என்றால் அதில் ஸாதகனுக்கு ஈடுபாடு ஏற்படவேண்டும். ஒரு பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஒருவனிடம் எண்ணச் சொல்லிக்கொடுத்தால் அதில் அவன் எவ்வளவு ஈடுபாட்டோடு ஒரு ரூபாய் கூட விடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையோடு முழுமனத்துடன் எண்ணுகிறானோ அதைப்போல ஜபம் செய்யும் போது குறைந்தது பத்து ஆவர்த்தியில் ஒரு ஆவர்த்தியாவது அதன் அர்த்தத்தை மனதில் வாங்கி ஈடுபாட்டோடு செய்தால் போதும். அதன் பலனே அலாதி. நமது உடல் கூறுகள் (அனாடமி) பற்றி சாத்திரங்கள் கூறும்போது இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்று கூறுகின்றன. அதனால் மந்திரம் ஜபிக்கும் போது தரையில் ஆசனமிட்டு, ஆசமனம் செய்து, கால்களை மடக்கி வைத்துக்கொண்டு, வாயினால் உபாம்சுவாக கூறிக்கொண்டு மனதினால் அர்த்தத்தை விசாரித்துக்கொண்டு ஜபித்தால் அது எப்படியாகும் என்பதை பார்ககலாம்.
1. தரையில் ஆசனம் இட்டால் மண் தொடர்பு. இது பூமி தத்துவம். 
2. கால்களை மடக்கினால் உடல் சூடாகிறது. அது அக்னி தத்துவம். 
3. எதிரே நீர் வைப்பதனால் ஜல தத்துவம். 
4. வாயினால் உபாம்சுவாக கூறுவது காற்று உள்ளே புகுவதனால் வாயு தத்துவம். 5. இதற்கு மேலாக மனம் ஈடுபாடு ஆகாய தத்துவத்தை உணர்த்துகிறது. 
ஜப ஆரம்பத்திலும் முடிவிலும் பஞ்சோபசாரம் செய்வதும் இந்த பஞ்சபூத தத்துவங்கள் எப்படி நம்மை பிண்ணிப்பிணைத்து வைத்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. இந்த ஐந்து தத்துவங்களால் ஆன இந்த ம்ருத சரீரம் மண்ணோடு மண்ணாக ஒருநாள் ஆகிவிடும். மூச்சுக்காற்று காற்றுடன் கலந்துவிடும். இப்படி ஐந்து பூதங்களிலும் நாம் கரைந்துவிடுவதுதான் இறப்பு என்பது. மனம் ஆகாய தத்துவம். அதனால் மனதில் இந்த ஜன்மாவில் ஏற்பட்ட வாசனைகள் (பதியப்பட்ட எண்ண அலைகள்) ஆகாய மார்க்கமாக சென்று இவன் வேறு ஒரு பிறவி எடுக்க வகை செய்கிறது. இதனால்தான் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுகிறார்களோ? உடல் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. இந்த மனமும் உடலைப்போன்று இந்த ஜன்மாவிலேயே அழிந்துவிட்டால் அதற்குப்பிறகு வேறு ஒரு பிறவி கிடையாது. அதனால்தான் சினமிறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே என்று தாயுமானவர் பாடுகிறார். அதனால் இதை முக்கிய நோக்கமாக வைத்துக்கொண்டு மற்ற பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மந்திரம் கால் மதிமுக்கால் என்றபடி ஜபித்துவருவோமானால் பிறவி நோய் நீங்கி ஆன்ம இன்பம் கிட்டும் என்பது நிச்சயம்.