ஏழரை சனி ஒரு விளக்கம்:
பொதுவாக ஏழரை நாட்டு சனி என்றால் அனைவருக்கும் ஒரு பயம் ஏற்படுகிறது. சனி பகவான் ஒருவருக்குள் புதைந்து கிடக்கும் விதி என்ன என்பதை உணர்த்துவார். இது நல்லதோ அல்லதோ இரண்டுக்கும் பொருந்தும். ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் தங்கி சஞ்சரிக்கிறார். வட மொழியில் சனை என்பதற்கு மெதுவாக என்றும், சரம் என்பதற்கு நகருதல் என்றும் பொருள். இதனால் மெதுவாக நகருபவர் என்ற காரணப் பெயராகிய சனைச்சரன் என்றே அழைக்கப்படுகிறார். சந்திர பகவான் இருக்கும் இடத்தை ராசி என்று அழைக்கிறோம். இந்த ராசிக்கு முன் கட்டமான பன்னிரண்டாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கத் தொடங்கும் காலத்திலிருந்து ஏழரை நாட்டுச் சனி நடக்கத் தொடங்குகிறது. இதில் பன்னிரண்டாம் ராசியில் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டுகளை விரய சனி அல்லது தலை சனி என்றும், ராசியில் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டுகளை ஜென்ம சனி அல்லது மார்பு சனி என்றும், இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டுகளை பாத சனி என்றும் கூறுகிறார்கள்.
ஒருவருக்கு முதல் 30 ஆண்டுகளுக்குள் ஒருமுறை ஏழரை நாட்டுச் சனி நடக்கும். இதை மங்கு சனி என்று கூறுவர். இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் மூன்றாம் சுற்றை இறுதிச் சனி என்றும் கூறுவார்கள். சிலருக்குப் பிறவியிலேயே முதல் சுற்று தொடங்கினால் அவர்களுக்கு நான்கு சுற்றுகள் ஏழரை நாட்டுச் சனி வர வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை இன்பம், துன்பம் இரண்டையும் கொண்டு வருகிறது. இதனால் சனி பகவானின் சஞ்சாரத்தினால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன என்பதை உணர வேண்டும். ஒருவருக்கு நன்மை ஏற்பட்டால் மற்றவர்களுக்குத் தோல்வி ஏற்படுவதும், ஒருவர் தோற்றால் இன்னொருவர் வெற்றியடைவதும் இயற்கையே. தோல்வி கண்டவர் வெற்றியடைவதும், வெற்றியடைந்தவர் தோல்வியடைவதும் இயல்பே. இந்த வாழ்க்கையின் இயல்பை மனிதர்களுக்கு உணர வைக்கும் கிரகம் சனி பகவானே என்றால் மிகையாது. அதனால் வெற்றி, தோல்விகளைச் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு அவர் உணர்த்துகிறார். சனி பகவான் நீதியை பரிபாலிக்கிறார். விருப்பு, வெறுப்பு இல்லாமல் ஒருவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். தராசின் இரு தட்டுகளும் எப்போதும் சமமாக இருப்பது போல் அவரின் செயல்களும் சமச்சீராகவே அமையும். இதனால்தான் என்னவோ துலாம் என்கிற தராசு ராசியில் அவர் உச்சமடைகிறார். அதாவது சிறப்பான பலம் பெறுகிறார். சனி பகவான் நம் ஜாதகத்தில் உள்ள நன்மை, தீமைகளை உணர்த்துகிறார். அதனால் சனி பகவானின் பலத்தைக் கொண்டே நாம் சென்ற பிறப்பில் செய்துள்ள பாவ புண்ணியங்களை உணர வேண்டும்.
சனி பகவான் குறிப்பாக ஏழைப்பங்காளன் ஆவார். அதனால் சனி பகவான் வலுத்துள்ளவர்கள் இப்பிறப்பில் மக்களின் ஆதரவைப் பெற்று பொருள் சேர்ப்பவராக இருப்பர். அதாவது அவர்களை மக்கள் தொடர்புள்ள வாழ்க்கை முறைகளில் ஈடுபடச் செய்து பொன், பொருள், நிலம், வாகனம் ஆகியவற்றை சனி பகவான் வழங்குவார். சனி பகவான் பலம் குறைந்தவர்கள் மேற்கூறிய இனங்களில் பொருளை இழப்பதற்கு வாய்ப்பு உண்டாகும் என்பதையும் உணர வேண்டும்.
பொதுவாக ஏழரை நாட்டுச் சனி என்றால் கஷ்டம் வந்துவிடும் என்று பயப்பட வேண்டாம். நமக்கு கஷ்டங்களைக் கொடுத்து, நம் உடலையும், மனதையும் பக்குவப்படுத்தி நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறார். வாகனங்களில் சென்றவர்கள் நடந்து செல்வதும், நடந்து செல்பவர்கள் வாகனங்களில் செல்வதும் ஏழரை நாட்டுச் சனியில் சகஜமாக நடக்கிறது.
அதனால் சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ராசிகளில் இருந்தால் பலம் பெறுகிறார். சனி பகவானை குரு பகவான் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருப்பவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சனி பகவான் பலமாக இருந்து லக்ன சுபராகி குரு பகவானும் அவரின் தொடர்பும் இருந்தால் பட்ட நிலம் தழைக்கும், பாலைவனம் சோலை வனமாகும். அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறும். அனைவருடைய அன்பையும் ஆதரவையும் பெறுவர். அவர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி (4ஆம் ராசியில் சஞ்சரிப்பது) அஷ்டம சனி (எட்டாம் ராசியில் சஞ்சரிப்பது) ஆகிய சஞ்சார காலங்களிலும் புதிய புதிய திருப்பு முனைகள் ஏற்பட்டு, சிறப்பான உத்யோகம், வெளிநாட்டு வாய்ப்பு, திருமணம், குழந்தை பிறப்பு ஆகிய பாக்கியங்கள் கிடைக்கும்.
கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் பத்தாம் இடம் கர்மஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதே பத்தாம் இடம்தான் ஜாதகரின் பாவ புண்ணியங்களையும் குறிக்கும் என்று கூறப்படுகிறது. சனி பகவானை கர்மகாரகர் என்று கூறுவார்கள். கைரேகைக் கலையில் விதி ரேகையை சனி ரேகை என்று அழைக்கிறார்கள். மேலும் பூர்வ புண்ய பலத்தை அதாவது விதிப் பயனைக் குறிக்கும் கிரகம் சனி பகவான். ஆகவே சனி பகவானோடு சேர்க்கைப் பெற்ற கிரகங்கள் ஜாதகரின் பூர்வ புண்ய பலத்தைக் குறிக்கும். சுய முயற்சி மற்றும் தனிப்பட்ட ஈடுபாடுகளைக் குறிக்கும் கிரகம் குரு. ஆகவே குரு பகவானோடு சேர்ந்த பலம் பெற்ற சனி பகவான் ஒருவரை தன் அறிவினால் சமுதாயத்திற்குச் சேவை செய்யும் வல்லமையைக் கொடுத்து புகழடையச் செய்வார். இதேபோல் மற்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடுவதைக் காணலாம். ஏழையைப் பணக்காரன் ஆக்குவதும், பணக்காரனை ஏழை ஆக்குவதும் சனி பகவானுக்கு கைவந்த கலை. தன் கடமைகளை சரிவர நீதி தவறாமல் செய்து வருபவர்களை சனி பகவான் வாழ்த்துவார். ரிக்ஷாவில் சென்றவர்கள் சுபிட்சமாக ஆவதற்கு சனி பகவான் காரணம் என்றால் மிகையாகாது.
குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி நடக்கும் காலத்தில் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு இரண்டு எள் தீபமேற்றி வழிபடவும். மேலும் ஏழை, எளியவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், பெரு நோயாளிகளுக்கும் உணவு, உடை அளித்து உதவி செய்ய வேண்டும். முடிந்தால் வருடம் ஒருமுறை திருநள்ளாறு, குச்சனூர் போன்ற தலங்களுக்கும் சென்றும் வழிபட வேண்டும. சனிக் கிழமைகளில் ஒரு பொழுதாவது விரதமிருப்பதும் நலம் அளிக்கும். சனிக் கிழமைகளில் சனி அஷ்டக தோத்திரத்தை பாராயணம் செய்து வரவும். மற்றபடி உங்கள் எதிர்காலம் சிறப்பாகவே அமையும்.
No comments:
Post a Comment