jaga flash news
Friday 20 August 2021
புணர்ப்பு தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் - தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம் செய்யலாம்
ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு யோகம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மகர ராசியில் உள்ள சனியோ சனி புணர்ப்பு தோஷத்தையும் பரிகாரத்தையும் பார்க்கலாம்
புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது.
புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்
தோஷம் ஏற்படுத்தும் சேர்க்கை சந்திரனுக்கு ராசிமண்டலத்தை சுற்றி வர 30 நாட்கள், சனிக்கு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 வருடங்கள். சனி மந்தம், சந்திரன் வேகம், சனி இருள், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் கூட்டணியாக இருந்தால் தோஷமாகி விடுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும்.
மனதை சொல்லும் சந்திரன் நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகன், சந்திரன் தாய்காரகன், அதாவது தாய், தாய்வழி உறவுகள் பற்றி பிரதிபலிப்பவர் சந்திரன். மனோகாரகன், மனதை ஆள்பவர். நமக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். மதிநலம் மனநலம் என்று சொல்வார்கள். அதன்படி நாம் ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்குபவர் சந்திரன். ஆகையால்தான் இவர் இருக்கும் ராசி வீடு ஒருவரின் ஜனன ராசி என்ற சிறப்பை பெறுகிறது.
உயர் பதவி தேடி வரும் சனி, சந்திரன் சம்பந்தம் பெற்ற ஜாதகர்கள் கடின உழைப்பாளிகள், நாட்டின் உயர்பதவிகளில் அமரக்கூடிய பாக்கியமுடையவர்கள். தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி வரும். சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது எல்லாம் இவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். ஆணவம், அகங்காரம் இல்லாமல் அமைதியாக சாதித்துக் காட்டுவார்கள்
திருமணத்தடை
சனி-சந்திர சேர்க்கையால் பிரச்சனை மட்டும்தானா? புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும். பிறந்த ஜாதகத்தில் சனி சந்திரன் சேர்க்கை சனி சந்திரன் கிரக பரிவர்த்தனை. சனி சந்திரன் சப்தாம்ச பார்வை. சனி சந்திரன் சார பரிவர்த்தனை ஆகிய எல்லாமே புணர்ப்பு அமைப்புதான். புணர்ப்பு அமைப்பு இருப்பவர்கள் நித்திரையற்றவர்களாகவும், மற்றவரின் குறைகளைக் கண்டறிந்து அதை சுட்டிக்காட்டுவதில் வல்லவர்களாகவும் இருப்பர்.
துறவியாகும் அமைப்பு
புணர்ப்பு யோகம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள். சனி சந்திரன் சேர்க்கை பெற்ற ஞான ஜாதகங்கள் துறவறம், பிரம்மச்சரியம், சன்யாச வாழ்க்கை வாழ்வார்கள். ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், காஞ்சி பெரியவர், ராமானுஜர் ஆகியோருக்கு இந்த வகையான அமைப்பு உள்ளது.
மண வாழ்க்கையில் பாதிப்பு
சனி மெதுவாக நகரும் கிரகம், மந்தன் உடல் உழைப்புக்கு காரகன். சந்திரன் வேகமாக நகரும் கிரகம். மனோகாரகன், புத்தி காரகன். சுறுசுறுப்பான ஒரு கிரகம் மெதுவாக நகரும் ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்ளும். தாம்பத்யத்தில் தடங்களை ஏற்படுத்தும். இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையில் எப்படி சந்தோஷம் இருக்கும்.
ராஜயோகம் ஏற்படும்
ஜாதகத்தில் 4,10,11 ஆகிய வீடுகளில் சனி சந்திரன் சேர்க்கை ஏற்பட்டால் புணர்ப்பு யோகமாகி ராஜயோகம் ஏற்படும் என்று ஜாதக பாரிஜாத நூல் தெரிவிக்கிறது. மிகச்சிறந்த உளவியல் விசயங்களுக்கு புணர்ப்பு முக்கிய காரணமாகும். புணர்ப்பு தோஷம் இருப்பவர்கள் தயக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆணோ பெண்ணோ அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நெருங்க விடமாட்டார்கள்.
தோஷமற்ற நிலை
புணர்ப்பு தோஷம் ஜனன ஜாதகத்திற்கு மட்டுமே கோச்சார விதிகளுக்கு பொருந்தாது. ஒரு ஜாதகத்தில் ஒரு ராசியில் சந்திரன், சனி சேர்க்கை பெற்றிருக்கும் போது குரு பார்வையோ, சேர்க்கையோ பெற்றிருந்தால் அது தோஷம் கிடையாது. குருவின் வீடான தனுசு மீனம் ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை பெற்றால் புணர்ப்பு தோஷமில்லை.
பரிகாரம்
என்ன புணர்ப்பு ஜாதக அமைப்பு கொண்டவர்கள் குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது. திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment