செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
- அரிசி – 1 /2 கிலோ
- சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
- கொத்தமல்லி – 1 /2 கட்டு
- புதினா – 1 கட்டு
- பச்சை மிளகாய் – 4
- வெங்காயம் – 250 கிராம்
- தக்காளி – 250 கிராம்
- இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
- தயிர் – 1 /2 ஆழாக்கு
- எண்ணெய் – 1 குழிக்கரண்டி
- ஏலக்காய் – 2
- கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி
- பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
- தனியாத்தூள் – 4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம் மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
- பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
- பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
- பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
- சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
- ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
- பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
- பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.
குறிப்பு
- சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
- தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்.
No comments:
Post a Comment