jaga flash news

Sunday, 13 January 2013

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!


பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.

ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!

என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்

மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவது

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!

திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.

நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!

ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!  பொதுவாய்ப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டிக்கொள்வது எல்லாம் பிறந்த வீட்டில் தானே நிறைவேற்றுவார்கள்!  அதனால் தான் வேறொருத்தர் வந்தார் ஆண்டாளின் அண்ணனாக. 

ஆனால்  இதற்கெனப் பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்  சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.

அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?

ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியைச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். 

1 comment:

  1. Sun. 21, May. 2023 at 7.50 am.

    *திருவரங்கக் கலம்பகம் :*

    கலம்பகம் என்ற சொல், கலவை, பல்வகைச் செய்யுட்களாலாகிய பிரபந்த வகை, குழப்பம், ஒரு கணித நூல் ஆகியவைகளைக் குறிக்கும் பொருள் உடையது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சியில் (5 ) ல் இச்சொல்லின் முதல் ஆட்சியைத் தருகின்றது.

    ஆழ்வாரின் இவ்வாட்சி, பலவகை மலரும் கலந்து தொடுக்கப்பட்ட மலர் மாலையைக் குறித்தலால் (கதம்பம்) கலவை என்னும் அடிப்படைப் பொருளின் சார்புடன் கலம்பகை அமைந்தமை விளங்கும்.

    நச்சினார்க்கினியரும் பெரும்பாணாற்றுப்படை உரையில், "பலபூக்களால் நெருங்கிய கலம்பக மாகிய மாலை" என்னும் ஆட்சியைத் தருகின்றார்.

    இவ் இலக்கியம் பல உறுப்புகளும், யாப்பு வகைகளும் கலந்து வரப் பாடப் பட்டிருப்பதால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது.

    கலம்பகத்திற்கு விளக்கங்கள் அதிகம் உள்ளன. தனி தலைப்பு கொடுத்து எழுத வேண்டிய ஒன்று.

    *திருவரங்கம் :*

    திருமாலின் திவ்விய தேசங்கள் 108−னுள் தலைமை பூண்டது.

    சோழ நாட்டுத் திருப்பதிகள் 40−ல் முதன்மையானது.

    கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று வைணவர்களால் முதன்மையாக எண்ணப்படுகிற மூன்று திருத்தலங் களுள் முதலது. கோயில் என்றும் பெரிய கோயில் என்றும் மறுபெயருடையது.

    "பூலோக வைகுந்தம்" எனப்படும் பெருமை பெற்றது. போக மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

    "ஓங்கார" வடிவம் உள்ள ஶ்ரீரங்க விமானத்திலே,, ஆதிசேடன் என்னும் பாம்பணையில் பள்ளி கொண்டருளும் திருமால், முன்பு சத்தியலோகத்தில், பிரமதேவனது திருவாராதனத் திருவுருவமாக இருந்தான்.

    பின்னர் சூரிய குலத்தில் வந்த "மனு" என்பவனின் புதல்வனான "இட்சுவாகு" மன்னன் , பிரமனைக் குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம் புரிந்து, அத்தேவன் அருளால், அப்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நிறுவி திருவாராதனம் செய்து வந்தான்.

    அந்த ஶ்ரீரங்கநாதனே, இட்சுவாகு முதல் இராமபிரான் வரையிலுள்ள சூரிய குல மன்னவர் அனைவர்க்கும் குலதெய்வ மாகி விளங்கினான்.

    இங்ஙனம் மனித உருவம் கொண்ட பெருமாளாகிய இராமபிரானால் வணங்கப்பட்டமை பற்றி, அரங்க நாதனுக்கு "பெரிய பெருமாள்" என்ற திருநாமம் ஏற்பட்டது.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete