நற்கதியருளும் நவராத்திரி - A to Z
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தெரிந்து கொண்டால் நெகிழ்ந்து போவீர்கள்!
தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். "யாதுமாகி நின்றாய் காளி'என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு "சிவை ஜோடிப்பு'என்றும் பெயருண்டு. "சிவை' என்றால் "சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை,பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம்,குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.
பொம்மைகளை அடுக்கும் முறை
மனிதனாகப் பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும். கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும். முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக் கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும் பொம்மைகளையே வைப்பதால்,அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது, எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செய்யலாமே!
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
1.முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
2.இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
3.மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு,வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
4.நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
5.ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
6.ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
7.ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர்,ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
8.எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள், பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
9.ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
நவராத்திரிக்கு பூஜிக்க வேண்டிய மலர்கள்
ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்து பூஜித்தல் அவசியம்.
முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால் மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும்.
இரண்டாம் நாள்: மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது நலம் பயக்கும்.
மூன்றாம் நாள்: மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் நாள்: ஜாதிமல்லி மற்றும் மணமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
ஐந்தாம் நாள்: முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.
ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.
ஏழாம் நாள்: மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.
எட்டாம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வளம் பெருகும்.
நவராத்திரியில் படைக்க வேண்டிய பிரசாத முறைகள்:
நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.
முதல் நாள்:-
காலை: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும், இன்னல் கள் தீர்ந்து இன்பம் சேரும்.
மாலை: செவ்வாய்க்கிழமையாக அமைந்துள்ளதால் செவ்வாயான அங்காரகனுக்கும், துர்க்கைக்கும் உகந்த தான சிவப்பு காராமணி சுண்டலை வினியோகிக்கலாம்.
இரண்டாம் நாள்:-
காலை: தயிர் சாதம் பிரசாதம், இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.
மாலை: புதன்கிழமையாதலால் புத பகவானுக்குகந்த பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
மூன்றாம் நாள்:-
காலை: தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி செல்வம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.
மாலை: வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தது. கொண்டைக்கடலை சுண்டல் விநியோகிக்கலாம்.
நான்காம் நாள்:-
காலை: எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக அளிக்கலாம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.
மாலை: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்காக அரிசியுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து அரிசிப்புட்டு செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
ஐந்தாம் நாள்:-
காலை: வெண்பொங்கலை பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன் மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
மாலை: இது தவிர நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் கொடுப்பது நல்லது.
ஆறாம் நாள்:-
காலை: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன் மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.
மாலை: ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவானுக்காக கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு,போன்றவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.
ஏழாம் நாள்:-
காலை: சர்க்கரைப் பொங்கல், இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்பாடும்.
மாலை: சந்திரபகவானுக்காக அரிசி கலந்த தேன் குழல், தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.
எட்டாம் நாள்:-
காலை: பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவை சேர்ந்த பருப்பு பாயசத்தை, உடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.
மாலை: மாலையில் நவதானியம் சுண்டல் கொடுக்கலாம்.
ஒன்பதாம் நாள்:-
காலை: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம்.
மாலை: கருப்பு கொண்டைக்கடலை சுண்டலுடன் தாம் பூலத்துடன் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment