jaga flash news

Monday 5 October 2015

ஆயிரம் லிங்கங்கள் கொண்ட அதி அற்புத ஆறுகள்!

ஆயிரம் லிங்கங்கள் கொண்ட அதி அற்புத ஆறுகள்!

01.இந்தியா=கர்நாடகா =வடக்கு கன்னட பகுதி=சால்மலா ஆறு=சஹஸ்ரலிங்க ஷேத்திரம்.
கர்நாடக மாநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்-- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமானஆவுடையாருடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.
இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.
இந்த சிவலிங்கப் பாறைகளின் காலம் 1500 வருடங்களுக்கு முன்பானது என்று கூறுகிறார்கள். அதை எதற்காக வடிவமைத்து உள்ளார்கள் அல்லது அதை வடிவமைத்தவர் யார் என்ற சரியான விவரமும் தெரியவில்லை. அநேகமாக அங்கு எதோ ஒரு ஆலயம் அமைக்கப்பட இருந்தது என்றும் அந்நியர்களின் படையெடுப்பினால் அவை கட்டப்படாமல் நதியில் மூழ்கிக் கிடப்பதாகவும் கருதுகிறார்கள். சஹாஸ்ர என்றால் ஆயிரம் என்றுப் பொருள். ஆனால் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவு சிவ லிங்கங்கள் காணப்படுவதினால் இந்த இடத்தின் பெயரே சஹஸ்ரலிங்க ஷேத்திரம் என அமைந்து விட்டது.
02.கம்போடியா =அங்கோர் வாட் அதிசயங்கள் - ஆயிரம் லிங்கங்கள் பதித்த ஆறு.
9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை அங்கோர் வாட்டைச் சுற்றிலும் கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமானது என்று (river of thousand lingas) சொல்லப்படும், ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப் பெற்ற ஆற்றுப் பகுதியாகும். அங்கோர்வாட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலைப்பகுதி (kulen hills) உள்ளது. அந்தப் பகுதி மரங்கள், செடிகள் அடர்ந்த காட்டுப் பகுதி.
அம் மலைப் பகுதியிலிருந்து, சயாம்ரீப என்ற ஆற்றின் துணை ஆறான ஸ்டங் என்ற ஆறு வருகிறது. மலையில் காட்டுப் பகுதியில் இந்த ஆறு ஓடி வரும் வழியில் தண்ணீருக்கு அடியில், மணற்பாறைகளில் வரிசையாக லிங்கம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு ஒரே மாதிரி லிங்கங்கள், சில பெரிய லிங்கங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சதுரமாக ஆவுடையாரும், அதற்குள் வட்டமாக லிங்கமும் இருக்கின்றன.
மற்றும் உமா சகித சிவன், இராமர், அனுமான் மற்றும் மிருகங்கள் லட்சுமி, அனந்த சயனன், பிரம்மாவுடன் சயன நிலையில் விஷ்ணுவின் உருவம் தண்ணீர் ஓடும் வழிகளிலும், ஆற்றின் கரைகளிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இச் சிற்பங்கள் 11-12ஆம் நூற்றாண்டில் முதலாம் சூரிய வர்மன் காலத்திலிருந்து இரண்டாம் உதயாதித்ய வர்மன் காலம் வரை, அப்பகுதியில் வாழ்ந்த துறவிகளால் செதுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
"எதற்காக இப்படி ஆற்றுப் படுகையில் செதுக்கினர் தெரியுமா? கங்கையைப் போல் தண்ணீரைப் புனிதப்படுத்த" என்று எங்கள் வழிகாட்டி கூறினார். லிங்கங்கள் வழியே பாயும் ஆறு, பின்னர் ஓர் அருவியாக விழுகிறது. அதில் மக்கள் குளிக்கின்றனர். புனிதப்படுத்தப்பட்ட ஆறு, நாட்டின் வழியே பாய்ந்து, வயல்களில் நெல் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டையும் புனிதப் படுத்தி, வளப்படுத்துவதாக அம்மக்கள் நம்புகின்றனர்.

1 comment:

  1. Very very super
    நீங்கள் தமிழில் கட்டுரை எழுதுவது பாராட்டத்தக்கது

    ReplyDelete