jaga flash news

Wednesday 28 June 2017

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம் வந்தது எப்படி?

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம் வந்தது எப்படி?
------------------------------------------நாம் ஜோதிடத்தில் கூறியுள்ள நல்ல நேரத்தில் தான், எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். பொதுவாக ஜோதிடப்படி, ராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்கள். ஆனால் குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும். அதன்படி நாம் ஒரு காரியத்தை நல்ல நேரத்தில் செய்ய முடியவில்லை என்றால் குளிகை நேரத்தில் செய்யலாம். குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன் என்பதைப் பற்றி பார்ப்போம்.
குளிகை நேரத்தில் செய்யப்படும் நல்ல காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்று ஜோதிடக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகையால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு குளிகை நேரம் பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும்.
இதனால் அடகுவைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டுசெல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. அதேபோல, குளிகை நேரத்தில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அச்செயல்கள் எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும்.
நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த குளிகை நேரத்திற்குரிய குளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வைத் தொடங்குவதற்காகத்தான் உருவானது. குளிகன் உருவான கதை என்னவென்றால், ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ராவணன் தனது குல குருவான சுக்கிராச்சாரியாரை சந்தித்து, எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் நிலையில் உள்ளது என்றும், யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை சொன்னார். உடனே, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்து கொண்டனர். ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்.
இதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெரும் தவிப்பில் கிடந்தார். வலி அதிகம் இருந்தபோதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவகிரகங்களின் காதிற்கு எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர். இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரிவதற்கென்று இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றார்.
அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம் என்றார். அதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேகநாதன் என்று பெயர் சு+ட்டினர். தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், காரிய விருத்தி நேரம் என ஆசீர்வதிக்கப்பட்டது. இதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
LikeShow More Reactions
Comment

2 comments: