jaga flash news

Saturday 16 January 2021

ஏகாதசி விரதம் தோன்றிய கதை - உத்பன்ன ஏகாதசி...

உத்பன்ன ஏகாதசி


நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட. 



கார்த்திகை மாதத்தில், தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "உத்பன்ன ஏகாதசி" என்று அழைக்கப்படுகின்றது.  

மேலும் இது 'மிருகசீர்ஷ கிருஷ்ண பட்ச ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. 

"பவிஷ்ய புராணத்தின்" உப புராணமான "உத்தர புராணத்தில்" (இதுவே 'பவிஷ்யோத்ர புராணம்' என்றும் அழைக்கப்படுகிறது)  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் நடைபெற்ற  சம்பாஷணையில், 'ஏகாதசி' தோன்றிய விதம் பற்றி எடுத்துரைக்கிறார்.
எப்பொழுதுமே, ஒரு விஷயத்திற்கு உரியவர் (அ) உடையவர் (அ) காரணகர்த்தா  ஒருவரே அதனைப் பற்றி கூறும் பொழுது அதன் முழு மகிமையும் முக்கியத்துவம் பெறுகிறது அல்லவா ?
ஆகவே தான், இதனை நாம் அனைவரும்  கண்டிப்பாக   தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது. 

அர்ஜூனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் :
ஓ, ஜனார்த்தனா, ஏகாதசி விரதம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும் ? கண்டிப்பாக அதனை கடைபிடிக்கும் அளவிற்கு அதில் என்ன சிறப்பு உள்ளது ? மேலும் ஒருவர், ஏகாதசி முழுவதும் உண்ணாமல் இருந்தாலோ, அல்லது மாலை வரை விரதம் கடைப்பிடித்து இரவு உணவு மட்டும்  உண்டால் அதற்கு என்ன பலன் உண்டு என்று கூறும்படி கேட்கிறார்...


ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:
ஓ, பார்த்தா, சத்ய யுகத்தில், மிருகசீரிஷ மாதத்தில் (November - December) கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய 11ம் நாள் தான் உலகில் முதன்முதலில் 'ஏகாதசி' விரதம் தோன்றிய தினம் ஆகும்.

அதனைப் பற்றி கூறுகிறேன் கேள் என்று கூறி  மேலும் விவரிக்கிறார்...

முன்னர் சத்ய யுகத்தில், 'முரா' என்ற அரக்கன் ஒருவன் தனது பராக்கிரமத்தால், இந்திர லோகத்தை கைப்பற்றி, இந்திரன் மற்றும் பஞ்சபூத தேவர்களையும் அடித்து விரட்டி விட்டு, தானே இந்திர லோகத்தை ஆட்சி புரிந்தான். இதனால், தேவர்கள் மற்றும் இந்திரன் பயந்து, ஒளிந்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அவனை, எதிர்கொள்ள வழியற்ற சூழலில், பகவான் விஷ்ணுவிடம் தஞ்சமடைந்து தமது நிலையை எடுத்துக்கூறி இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள், தங்களை இந்த துயரத்தில் இருந்து காப்பாற்றுமாறு  வேண்டினார்கள். 

மேலும், இந்திரன் கூறுகையில்,
ஓ, பகவானே, 'சந்திரவதி' என்ற இடத்தை தலைமையாக கொண்டு, ப்ரம்ம வம்சத்தில் தோன்றிய 'நதிஜங்கன்' என்பவனது புதல்வனான 'முரா' மிகுந்த பலம் பொருந்திய காரணத்தால் எங்கள் அனைவரையும் அடித்து விரட்டி விட்டு, இந்திர லோகத்தை கைப்பற்றி கொண்டான், ஆகவே அவனை தாங்கள் தான் வென்று தேவர்களது சிம்மாசனத்தை மீட்டு தர வேண்டும் என்று வேண்டுகிறான். 


உடனே, ஸ்ரீ ஹரி வெகுண்டெழுந்து, இந்திரன் மற்ற தேவர்கள் அனைவருக்கும் உதவுவதற்காக  'முராவுடன்' போர் புரிய கிளம்பிச்சென்றார். அவனது சேனைகள் பலவற்றையும் அழித்தார். ஆனால் முரா எந்த வித அச்சமும் இன்றி ஸ்ரீ ஹரியுடன் போர் புரிந்தான். ஸ்ரீ ஹரியின் அஸ்திரங்கள் 'முரா' வினை ஒன்றும் செய்யவில்லை. இதனால், அஸ்திர யுத்தம் முடிந்து மல்யுத்தம் தொடங்கியது. ஆண்டுகள் பல ஆகியும் (1000 ஆண்டுகள்) யுத்தம் முடிந்த பாடில்லை. 'முராவோ' மிகவும் தீவிரமாக சண்டையிட்டு வந்தான். 

ஒரு கட்டத்தில், ஸ்ரீ ஹரி, மிகவும் சோர்வுற்ற காரணத்தால் போரை நிறுத்தி விட்டு   'பத்ரிகாஷ்ரமம்' என்ற இடத்திற்கு சென்று, அங்குள்ள 'ஹிமவதி' எனும் 96 மைல் விட்டமும் ஒரே ஒரு வாசல் மட்டும் கொண்ட அழகிய  குகைக்கு சென்றார்.  அங்கு அவர் யோகநித்திரையில் ஆழ்ந்தார்.

ஆனால் முராவோ, அவரை விடாமல் பின் தொடர்ந்து அங்கும் சென்றான். அங்கு அவர் உறங்கி கொண்டிருக்கிறார் என்றெண்ணி அவரை தாக்க முற்படுகையில் ஸ்ரீ ஹரியின் உடலில் இருந்து உருவான ஒரு அழகிய பெண் தனது கையில் வெவ்வேறு ஆயுதங்களுடன் முரா முன் தோன்றி அவனை போருக்கு அழைக்கிறாள். முரா இதனை சற்றும் எதிர்பாராதவனாக இருப்பினும், உடனே அவனும் போரிட தொடங்குகிறான். ஆனால், மிக எளிதாகவும், லாவகமாகவும் அதே நேரம் ஆக்ரோஷமாக போரிட்டு முராவின் தலையை கொய்து விடுகிறாள் அந்த அழகிய இளம்பெண். 


பின்னர்  சில மணி நேரங்கள் கழித்து யோகநித்திரையில் இருந்து வெளிவந்த 'ஸ்ரீ ஹரி' ஆச்சரியத்துடன் தன் முன் தலை கொய்து கிடக்கும்  முரா-வையும் மற்றும் அந்த அழகிய இளம்பெண்ணையும் காண்கிறார். அந்த பெண்ணை நீ யாரம்மா என்று ஸ்ரீ ஹரி வினவுகிறார்...?

அந்த பெண், இரு கை கூப்பி வணங்கி 'பிரபு',  தாங்கள் யோகநித்திரையில் இருந்த நேரத்தில் தங்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த அரக்கனை கொள்வதற்காக, நான் தங்களின் உடலில் இருந்து தோன்றியவள் என்று கூறுகிறாள். 

ஸ்ரீ ஹரி கூறுகிறார்...
பெண்ணே, நீ செய்த காரியத்தால் இந்திர லோகம் மற்றும் அனைத்து தேவர்களும் மிகுந்த மனமகிழ்ச்சியுறுவர். நானும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். ஆகவே, நீ வேண்டும் வரம் கேள் என்று கூறுகிறார்... 


அந்த கன்னிகையும் மகிழ்ந்து, ஓ, பிரபு ஸ்ரீ ஹரி, நீங்கள் ஒரு வரம் வழங்க விரும்பினால், நான் தோன்றிய இந்த நாளில் உங்களை நினைத்து, உண்ணாமல் விரதம் இருக்கக்கூடிய அனைவரது பாவங்களையும் முழுமையாக  போக்கக்கூடிய வல்லமையை தாருங்கள்.
மேலும், 
காலை, மதியம் உண்ணாமல் இருந்து இரவு மட்டும் உண்ணும் ஒருவருக்கு அதில் பாதி புண்ணியத்தை வழங்குங்கள். (அரிசி மற்றும் தானிய உணவுகள் தவிர்த்து)  
அவ்வாறு விரதம் இருக்கக்கூடியவர்கள் அனைத்து பாவங்களும் நீங்கி, இக வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்ந்தும், அதன் பின்பு  பர வாழ்வில் உங்கள் பரமபதம் அடையும் படி எனக்கு ஒரு வரம் அளியுங்கள் என்று வேண்டுகிறாள்...

இதனைக் கேட்ட ஸ்ரீ ஹரி,
ஓ கன்னிகையே, நீ கேட்ட வரம் வழங்கினோம். எனது பக்தர்கள் அனைவரும் இந்த நாளில் விரதம் இருந்து அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவர், மேலும் நீ 11-வது திதியில் தோன்றியதால் உனது பெயர் 'ஏகாதசி' என்று அழைக்கப்படும் (ஏக் (அ) ஏகம் என்றால் ஒன்று, தசம் என்றால் 10,  ஆகவே {1+10=11} ஏகாதசி). இந்த 'ஏகாதசி' நாளில் விரதம் இருக்கும் அனைவரது பாவங்களையும் நான் எரித்து சாம்பலாக்கிவிடுவேன் என்று கூறுகிறார்.   அன்று முழுவதும் விரதம் இருப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலன்களை பெறுவார்கள் என்று கூறுகிறார். 

அதனோடு, மேலும் கூறுகையில், எப்படி வளர்பிறை மற்றும் தேய்பிறையில், த்ருதியை (3-ம் நாள்), அஷ்டமி (8-ம் நாள்), நவமி (9-ம் நாள்), சதுர்த்தசி (14-ம் நாள்) எனக்கு ப்ரியமான நாட்களோ அந்த வரிசையில் 'ஏகாதசி'யும்  (11-ம் நாள்) எனக்கு ப்ரியமான நாள் ஆக இருக்கும் என்று கூறி ஆசி வழங்கினார்.  

இவ்வாறாக, ஏகாதசி தோன்றிய கதையை அர்ஜுனனிடம் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் சொல்கிறார்...

அன்று செய்யக்கூடாத விஷயமாக கூறுகையில்,

அன்று, மதியமோ (அ) இரவோ உணவு உண்பவர்கள், (அரிசி / தானியம் தவிர்த்து)  (வெளி இடங்களில்) ஏகாதசி விரத மகிமை பற்றி உணராதவர்கள் (அ) கடவுள் மறுப்பாளர்கள் (நாத்தீக கொள்கை)  தயாரித்த உணவை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்.  


விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், ஒரு பசுவினை ஒரு அந்தணருக்கு தானம் செய்த புண்ணியம் பெறுகிறார்கள்

No comments:

Post a Comment