jaga flash news

Monday, 25 March 2013

குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?


குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?



குழந்தைக்கு நிறம் தரும் சக்தி, குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை. ஒருசிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு மசக்கை நேரத்தில், இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும். அதனால்தான் மாறுதலான மணம்-சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது.
அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையை சொல்லி, அந்த காலத்தில் குடிக்க வைத்திருப்பார்கள் போலும். மற்றபடி, குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரை மரபணுக்கள்தான்! கர்ப்பம் உறுதியானதுமே டாக்டர்கள் பட்டை பட்டையாக இரும்பு சத்து மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து தொடர்ந்து சாப்பிட சொல்கிறார்கள்.
ஆனால், `இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும்’ என்கிறார்களே? கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதை நம்ப வேண்டாம். ரத்த விருத்திக்காக கொடுக்கப்படுவதுதான், இரும்பு சத்து மாத்திரைகள். இதனால் கர்ப்பிணிகளுக்கு போலிக் ஆசிட் பற்றாக்குறையால் ஏற்படும் ரத்தசோகை நோயை, முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
ஒரு கர்ப்பிணி சரிவிகித உணவுகளை தவறாமல் சாப்பிடுபவராக இருந்தாலும், மேற்கொண்டு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை-மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா?
பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தில் வரும் காய்ச்சல், தலைவலிக்குகூட, `வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ?’ என்கிற பயத்தில், மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள். மருந்து கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறேதவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை.
காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள். ஆகவே தேவையற்ற பயம் வேண்டாம்.

No comments:

Post a Comment