jaga flash news

Friday 22 May 2015

தெய்வம் இருப்பது எங்கே?

இந்திய கலாச்சாரம் ஆன்மீக பின்புலத்தால் கட்டமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வழிபாடு என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பதால், வெவ்வேறு மதத்தவரும் தத்தம் வழிபாட்டுமுறைகளை செய்து ஆன்மீக நிலை அடைய முயல்கிறார்கள்.
வேதகால கலாச்சாரம் இந்தியாவில் வேர் ஊன்றி இருப்பதால் வேறு நிலப்பரப்பில் தோன்றிய மதங்கள் ஆனாலும் இந்தியாவிற்கு வந்தவுடன் அவைகள் வேதகால ஆன்மீக தன்மையை பெற்றுவிடுகிறது. 
கிருஸ்துவம் பாரத தேசத்திற்குள் வந்தவுடன் தன் இயல்பை நமக்காக மாற்றி பூசாரிகளும், சடங்குகளும், ஒளி ஏற்றுவதுமாக தன்னை சரி செய்துகொண்டது. 
இஸ்லாமும் இறைவன் ஒருவனே, அவனே வணங்கத்தக்கவன் என சொன்னாலும், நம் நாட்டிற்கு வந்தவுடன் பல இஸ்லாமியர்கள் நபியையும், இஸ்லாமிய ஞானிகளையும் வணங்க துவங்குகிறார்கள் என்பதை பார்க்கிறோம்.  அதனாலேயே இங்கே வேர்விடும் எந்த மதமும் தன்னை வேத மதமாக மாற்றுகிறது என்கிறேன்.
பலர் காப்பாற்ற துடிக்கும் இந்து மதத்திற்கும் வேதமதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறியவேண்டும். நம் கலாச்சாரத்தில் பலவேறு மதங்கள் வேதமதமாக மாற்றம் அடைந்தாலும், நம்மில் பலருக்கு வேத கால ஆன்மீக நிலை என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.
கோவில்கள் மற்றும் ஆகம சாஸ்திரம் இவை தோன்றி அதிகபட்சம் 3000 ஆண்டுகளே ஆகிறது. அதற்கு முன் வேதகால ஆன்மீக நிலையில் மனிதன் இயற்கையையே வழிபட்டான். மஹாசக்தி, அக்னி, வருணன், வாயு மற்றும் இந்திரன் என அவனின் வழிபாடு இயற்கையை நோக்கியே இருந்தது. பிற்காலத்தில் இவை மாற்றம் அடைந்து தெய்வ வழிபாடு என்ற நிலைக்கும், ஆலய வழிபாடு என்ற நிலைக்கும் மேம்பட்டது.
ஆதி சனாதான தர்மத்திலிருந்து தற்சமயம் இருக்கும் சனாதான தர்ம நிலைக்கு வழிபாடுகள் மாற்றம் அடைந்ததும்  கோவில்களின் தோற்றம் உருவானது. 
தெய்வீக செயல்களுக்கு உருவங்கள் அளித்து மனிதன் வழிபடத்துவங்கிய காலக்கட்டம் ஆரம்பித்தது.தெய்வ வழிபாடு என்பது ஏதோ ஆலயம் தொழுதல் சாலவும் நன்று என்பதை போல நன்னெறி அல்லது ஒழுக்கம் சார்ந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் வழிபாடு என்பது கடமை சார்ந்தது, உரிமை சார்ந்தது மற்றும் வாழ்வியல் சார்ந்த ஒரு அறம் என பலருக்கு தெரிவதில்லை.
தெய்வ வழிபாடு இவ்வாறாக மூன்றாக பிரிக்கப்படுகிறது. நம் மொழி வழக்கில் சொல்வதானால் குலதெய்வம், ப்ரார்தனை தெய்வம், இஷ்ட தெய்வம் என வகைப்படுத்தலாம்.
வழிபாட்டு முறைகளை நாம் சிறு வயது முதல் கற்றுக்கொண்டாலும் நம் நம்பிக்கை மற்றும் மனதுக்கு அருகாமையில் ஒரு தெய்வத்தை வைத்திருப்போம். இதுவே இஷ்ட தெய்வம் என்பதாகும். மிக சிக்கலான காலத்திலும், எதிர்பாராது ஏதேனும் நடக்கும் சமயம் உங்கள் உதடு முனுமுனுக்கும் தெய்வம் இஷ்ட தெய்வம் என்று கூறலாம். சிலருக்கு பிள்ளையாரப்பா , பலருக்கு முருகா என்றும் ஜூசஸ் என முனுமுனுப்பதையும் நாம் பார்த்திருக்கலாம்.
ப்ரார்த்தனா தெய்வம் என்பது நம் செயல்களுக்கு எதிர்பார்த்து வணங்கும் தெய்வத்தை குறிப்பிடலாம். பரிட்சைக்கு போகும் முன் நம் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் அல்லது சரஸ்வதியின் ஞாபகம் வரும் அல்லவா? அது போல தேவைக்கு ஏற்ப வணங்கும் தெய்வத்தை ப்ரார்தனா தெய்வம் என்கிறோம். இஸ்லாமியர்கள் பழனிக்கு வருவதும், இந்து மதம் சார்ந்தவர்கள் நாகூர் அல்லது வேளாங்கன்னி போவதும் ப்ரார்த்தனா தெய்வத்தை வணங்க என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இஷ்ட தெய்வம், ப்ரார்த்தனா தெய்வம் என்பது என்ன என உங்களுக்கு புரிந்திருக்கும். எனக்கு பிடித்த தெய்வத்தை வணங்குவேன் என நீங்கள் உரிமையுடன் சொன்னால் அது இஷ்ட தெய்வம். என வாழ்க்கை முறைக்கு இது தேவை அதனால் வணங்குகிறேன் என்றால் அது ப்ரார்த்தனா தெய்வம். குலதெய்வம் என்பது என்ன தெரியுமா? உங்கள் கடமை..!
 
குலதெய்வம் என்பது என்ன என இயல்பு மொழியில் கூறுகிறேன். உங்களின் பிறப்பின் மூலமே குலதெய்வம் என்பதாகும். ஒரு மரத்தின் விதையை எடுத்துக்கொண்டால் அந்த விதை வேறு ஒரு மரத்தில் தோன்றி இருக்கும் அல்லவா? அந்த விதை தோன்றிய மரத்தின் விதை? என பின்னோக்கி போனால் முதல் விதை எங்கே தோன்றி இருக்கும்? 
முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கதையாக இருக்கிறதா? நம் முன்னோர்களை நீங்கள் வரிசைப்படித்தினால் அதிகபட்சம் 3 தலைமுறை தாண்டி பெயர் சொல்ல  நமக்கு தெரியாது. அப்படி நம் வந்த வழிகளை ஆதி முன்னோர்கள் வரை பின்னோக்கி பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டு முறையே குலதெய்வ வழிபாடு.
எத்தனையோ நூற்றாண்டுக்கு முன் இருந்தவர்களை பற்றி நமக்கு என்ன கவலை என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அவர்கள் எப்பொழுதோ இருந்தவர்கள் இல்லை. இன்னும் நம்முடன் இருப்பவர்கள். கண்ணாடியில் உங்கள் உடலை பாருங்கள். உங்கள் கண், காது மூக்கு , உடல் அமைப்பு இவை எல்லாம் யார் சாயலில் இருக்கிறது? உங்கள் ஒவ்வொரு அங்கமும் அதன் வடிவமும் உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு அளித்தவையே என உணருங்கள்.
நம் உயிர் தாங்கி நிற்க தேவையான உடலை அளித்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவது கடமை அல்லவா? 
குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.
நியாயம் தானே? வந்த வழியை மறந்தவனுக்கு போகும் வழி எப்படி புலப்படும்?
குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பலருக்கு தெரிவதில்லை. ஒரு மனிதன் தன் வழிபாட்டு கடமையான குலதெய்வத்தை மறந்துவிட்டால் என்ன நடக்கும்? 
மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.
குலதெய்வ வழிபாட்டை பற்றி நிறைய கூறலாம், முதலில் நம்மில் பலருக்கு குலதெய்வ வழிபாடு பற்றி இருக்கும் கேள்விகளை பார்ப்போம்.
கேள்வி : ஐயா, என்னக்கு முன் இரண்டு பரம்பரையாக என் குடும்பத்தார் குலதெய்வ வழிபாட்டை ஏதோ காரணத்தால் விட்டுவிட்டார்கள். எனக்கு குலதெய்வமே எது என தெரியாது. அப்படி இருந்தும் நான் குலதெய்வத்தை வழிபட வேண்டுமா?
பதில் : உங்களின் இரண்டு பரம்பரை முன்னால் உங்கள் பாட்டனாருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்ததாக ஒரு சிறிய முத்திரை தாள் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?  அந்த நிலம் எங்கே இருந்தது. யாருகெல்லாம் விற்கப்பட்டது என ஆராய்வீர்கள்.உங்கள் பூர்வீக சொத்தில் ஒரு சதவிகிதம் கிடைத்தால் கூட போதும் என அலைந்து திரிந்து கை பற்றுவீர்கள் அல்லவா? அதுபோல உங்களின் உறவினர்கள், பூர்வ குடிகளை தொடர்புகொண்டு தேடுங்கள். பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் கடமைக்கும் கொடுங்கள்...! கண்டிப்பாக உங்களுக்கு குலதெய்வம் எது என கண்டறிய முடியும்.
கேள்வி : எங்கள் பூர்வீகம் சேலம் பக்கம் ஒரு கிராமம். அங்கே எங்கள் குலதெய்வம் இருக்கிறது. பிழைப்புக்காக எங்கள் தாத்தா கோவையில் இடப்பெயர்ச்சி அடைந்தார். எங்களின் பணிச்சுமையால் எங்களால் பூர்வீக கிராமத்திற்கு போக முடியவில்லை. எங்கள் பங்காளிகள் எல்லாம் முடிவு செய்து எங்கள் பூர்வீக கிராமத்தில் இருக்கும் கோவிலில் இருந்து மண் எடுத்து கோவையிலேயே ஒரு கோவிலை கட்டி குலதெய்வமாக வழிபடுகிறோம். இதை பலர் விமர்சிக்கிறார்கள்.எங்கள் வழிபாடு முறை சரியா?
பதில் : நீங்கள் கோவையில் வசிக்கிறீர்கள். உங்கள் மகன் சென்னையில் படிக்க சென்று விட்டார் என வைத்துக்கொள்ளுங்கள். அவரை சென்று பார்ப்பீர்களா? இல்லை அவரின் போட்டோ அல்லது சட்டையை பார்த்தால் போதும் என நினைப்பீர்களா? 
சேலம் என்ன அமெரிக்காவிலா இருக்குக்கிறது? 150 கிலோமீட்டர் இடைவெளிக்கே சிலர் புதிய குலதெய்வத்தை ஏற்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. தற்கால வாகன யுகத்தில் மின்னலைவிட வேகமான சென்றுவரும் தூரத்தில் குலதெய்வம் இருந்தும் நம்மால் வழிபடமுடியவில்லை என்றால் சோம்பேறித்தனத்தை விட வேறு என்ன இருக்க முடியும்? குலதெய்வம் கோவில் முற்றிலும் அழிந்து அதன் பல மேல் வருடங்களாக  பல குடியிருப்புகள் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே அப்பகுதி மண் எடுத்து புதிய கோவிலை கட்ட வேண்டும். அது இல்லாமல் குலதெய்வம் கோவில் இருக்கும் சூழலில் மீண்டும் கட்டுவது நம் ஆணவமும், சோம்பேறித்தனமும் தான் பக்தியும் கடமையும் அல்ல...!
 
வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?
நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...! தெய்வ வழிபாட்டால் இறப்பு நிகழும் என்பது மிகவும் வேடிக்கையானது. குலதெய்வ வழிபாட்டு செய்ய சோம்பேறித்தனம் கொண்ட சிலர் பரப்பும் வதந்தி இது. மேலும் குலதெய்வ வழிபாட்டில் குடும்ப உறவு முறையில் சிலருக்கு போட்டி பொறாமை வரும்பொழுது பரப்பும் செய்தியாகவும் இருக்கிறது. உண்மையில் குலதெய்வ வழிபாட்டால் உடல் உபாதைகள் தீர்ந்து மற்றும் அந்திம காலத்தில் இருப்பவர்களில் ஆயுள் மேம்படுதல் ஆகியவையே ஏற்படும். ஆகவே ஒன்றை உணருங்கள் குலதெய்வம் மரணத்தை கொடுக்காது மரணமில்லா பெருவாழ்வையே கொடுக்கும்.
நான் வழிபடும் முறையும் என் ஆன்மீக விருப்பமும் வேறாக இருக்கிறது. அகிம்சையையும், சைவத்தையும் நான் விரும்புகிறேன். ஆனால் என் குலதெய்வ வழிபாட்டில் மிருக பலி இருக்கிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குலதெய்வ வழிபாட்டை நான் எப்படி செய்வது?
நீங்கள் நாகரீகம் அடைந்து நூடுல்ஸ், பிசா என சாப்பிட்டாலும் உங்கள் வீட்டில் இருக்கும் முதியவருக்கு என்ன பிடிக்கும் என நினைக்கிறீர்கள்? அவருக்கு எப்பவும் சாம்பார் ரசம் கொண்ட சாப்பாடு தானே? அதுபோலத்தான் நம் குலதெய்வ வழிபாட்டில் என்ன சொல்லுகிறார்களோ அதை நம் சித்தாந்தத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளாமல் செய்து வர வேண்டும். நம் தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்டது குலதெய்வ வழிபாடு என்பதை அறிக. மேலும் அவ்வாறு நீங்கள் சீர்திருத்தம் கொண்டுவர நினைத்தால் ஆன்மீக பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் வழிகாட்டுதலில் பலியிடுவதை மாற்றம் செய்யலாம். 
அதை விடுத்து குலதெய்வ வழிபாட்டை செய்ய மாட்டேன் என பலர் விட்டு விடுவது நல்லது அல்ல.
இவ்வாறு பல கேள்விகள் நமக்கு இருக்கிறது. குலதெய்வத்தை வழிபடுவேன் என்ற ஆர்வம் மற்றும் ஆழ்ந்த பக்தி இருந்தாலும் நாம் பல கேள்விகளையும், காரணங்களையும் கூற மாட்டோம்.
நேப்பாள மன்னரின் குலதெய்வம் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதஸ்வாமி என்றும், இராமநாதபுரம் சமஸ்தான ராஜாவுக்கு நேப்பாள பசுபதி நாதர் தான் குலதெய்வம் என்றும் நான் கேள்விப்ப்பட்டதுண்டு.
சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்லவே நாம் கஷ்டப்பட்டுக் கொண்டு பிடி மண் எடுத்து வீட்டுக்கு அருகில் கோவில் கட்டிவிடுகிறோம். இவர்களை நினைத்துப்பாருங்கள். குலதெய்வத்தால் வடக்கும் தெற்கிலும் இருந்து இணைந்தவர்கள்....!
பழனி திருப்பதி போன்ற கோவில்கள் குலதெய்வமாக இருக்க வாய்ப்பு மிகமிக குறைவு. குலதெய்வம் தெரியாத காரணத்தால் இஷ்டதெய்வத்தையே குலதெய்வமாக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.
உதாரணமாக சபரிமலை விரதம் இருந்து பள்ளிக்கட்டு பூஜை நேரத்தில் முதலில் வழிபடும் தெய்வம் குலதெய்வம். இது எல்லா ஆன்மீக பூஜைகளிலும் முதன்மையானது. இதை விடுத்து செய்யும் ஆன்மீக பூஜைகள் செயல்படாது.
முற்றிலும் குலதெய்வமே எங்கே இருக்கிறது என்பது தெரியாது. என் குடும்பத்தில் மூத்தவர்கள் இல்லை அதனால் குலதெய்வத்தை அறியமுடிய வில்லை என்றாலும் கூட ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம். தேவப்பிரசன்ன முறைகளில் குலதெய்வ பிரசன்னம் ஒருவகையாகும்.
நம் கலாச்சாரமும் சாஸ்திரமும் பல்வேறு வழிகளில் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நம் சோம்பேறித்தனத்தை விடுத்து, நம் குல தெய்வத்தை கண்டறிந்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவோம்.
 

No comments:

Post a Comment