jaga flash news

Wednesday 20 May 2015

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?
23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு திருட்டுமுழியோடு இந்த விடுகதையைக் கேட்கும்போது, தலையைப் பிய்த்தவர்கள் நாம்! சரி, இந்த விடுகதையின் விடை தான் என்ன?
அதற்கு முன்பு, திருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமனாவதாரத்தின் கதையை உங்களுக்கு சொல்லியாக வேண்டும்.
எதைக் கேட்டாலும் தட்டாமல் கொடுக்கும் மகாபலிச் சக்கரவர்த்தி, இந்திரப்பதவிக்காக மிகப் பிரமாண்டமாக அசுவமேத யாகம் செய்துகொண்டிருந்தான். அவனைத் தடுத்தாட்கொள்ள, காசிபர் - அதிதி தம்பதியர்க்கு மகனாக, "வாமனன்" எனும் பெயரில் அவதரிக்கும் திருமால், அவனிடம் போய் இரந்து நிற்கிறார், "மூன்றடி மண்ணுக்காக"!
வந்திருப்பவர் யாரென்று உணர்ந்துகொள்ளும் அசுர குலகுருவான சுக்கிரரோ, மாவலியைத் தடுத்தும், சொன்ன சொல் மீறாதவனான மகாபலி, கெண்டியைத் தூக்கி நீர்வார்த்து வாக்குத் தத்தம் செய்கிறான்.
கோபமுற்ற சுக்கிரர், வண்டாய் மாறி, நீர் வரும் துளையை அடைக்க, நீர்வரத்து தடைப்படுகிறது. தர்ப்பைப் புல்லால் அத்துளையில் குத்திப் புன்னகைக்கிறான் வாமனன். தர்ப்பைப் புல் கண்ணில் குத்தி குருடான வண்டு வெளியே பறக்க, நீர் தடைப்படாது வழிய, வாக்குத் தத்தம் நிறைவேறுகிறது.
பிறகு வாமனன், விசுவரூபம் எடுத்து விண்ணளந்தது, மகாபலி தலையில் மூன்றாவது அடியை வைத்ததெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
சரி, அந்தக் கதைக்கும் இந்த விடுகதைக்கும் என்ன சம்பந்தம்?
தட்டான் = சொன்ன சொல் தட்டாதவன் = மகாபலி
சட்டை போட்டால் = உடம்பை சட்டை மறைப்பது போல, (நீர்வழியை மறைத்து)தடுத்தால்,
குட்டைப் பையன் = குள்ளனான வாமனன்
கட்டையால் அடிப்பான் = தர்ப்பைக் குச்சியால் (கட்டையால்) அடிப்பான்!
அவ்ளோதாங்க!

No comments:

Post a Comment