jaga flash news

Wednesday 8 July 2015

பகவத் கீதையில் சாதி.

நான்கு வர்ணங்கள்-ஒரு தெளிவு!!!
1)பிராம்மண (அந்தணன்), 
2)க்ஷத்ரிய (அரசன்), 
3)வைஷ்ய (வணிகன்), 
4)சூத்திரர் (வேளாளன்)!!!
------------------------------------------------
கடந்த நூற்றாண்டு வரை இந்தியா சந்தித்த மிகவும் மட்டமான, சாபக்கேடான ஒன்று சாதிப்பாகுபாடுகளும், சாதிக்கொடுமையும். இன்னமும் பல இடங்களில் மனிதன் சாதியின் பெயரால் துன்புறுத்தப்படுவது நம் நாட்டின் துர்பாகியம். இந்தியாவில் மட்டுமல்ல, மேலைநாடுகளிலும் கருப்பு வெள்ளை, போன்ற நிற வெறி, மதரீதியான பிரிவினை போன்ற கொடுமைகள் நடந்து தான் வருகின்றன.
உண்மையில் இந்த வர்ணாஸ்ரம பிரிவுகள் மக்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்க உண்டாக்கப்பட்டதா?
உயர்வு தாழ்வு காட்டி ஒருவரை ஏய்த்து இன்னொருவர் வயிறு வளர்க்க உண்டாக்கப்பட்ட சூழ்ச்சியா?
வர்ணாஸ்ரம கொள்கை ஏன்?? பார்ப்போம்.
பண்டைய காலங்களில் வர்ணங்கள் ஒருவனின் பிறப்பால் கருதப்படவில்லை. அவனின் குணத்தாலும் அவன்செய்யும் தொழிலாலும் கருதப்பட்டது. ஒரு நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர், அவருக்கு கீழிருக்கும் மேலாளர், வருக்கு அடிபணியும் உதவி மேலாளர், இவர்களுக்கு வேலை செய்யும் தொழிலாரர்கள் இருப்பதைப்போன்று, அன்று 
ஒன்றை ஒருவருக்கு கற்பிப்பவர்கள் - பிராமணன்.
மக்களை காக்கும்பொருட்டு போர் செய்பவன் - க்ஷத்ரியன்.
வாணிபம் செய்பவன் - வைஷ்யன். 
மேலுள்ள மூவருக்கும் பணிசெய்பவன் - சூத்திரன். 
ஆக அன்றுமட்டும் இல்லை, இன்றும் ஆசிரியர், நம்மைக்காக்க போர் செய்யும் போர்வீரர்கள், தொழில் செய்பவர்கள், இவர்களுக்கு பணிசெய்பவர்கள் என்று உள்ளது. ஆனால் இதில் ஏற்றத்தாழ்வு காண்பது மகா மகா முட்டாள்தனம்.
*திரு.B.R.அம்பேத்காரின் கருத்து. 
நம் இந்திய அரசியல் சாசனத்தி முன்னின்று இயற்றிய திரு.B.R.அம்பேத்கார் வர்ணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்து, ஹிந்து மதத்தை வெறுத்து புத்தமதம் புகுந்தவர். அவர் ஒரு இடத்தில் வர்ணாஸ்ரமம் எப்படி உருவாயிற்று என்று கூறுகின்றார்., "வரலாற்றுக் காலங்களில் ஒருவனின் பிரம்மனனா, க்ஷற்றியனா, வைச்யனா, சூத்திரனா? என்பது அவன் பிரப்பைவைத்து நிர்ணயிக்கப்படவில்லை. முதலில் ஐந்து வயது நிரம்பிய குழந்தையை ஒரு நல்ல குருகுலத்தில் கொண்டு சேர்ப்பார். பிறகு அந்தக் குழந்தை குறிப்பிட்ட வருடங்கள் கண்காநிக்கப்டும். அவனுக்கு பொதுவாக அனைத்து கல்விகளும் கற்பிக்கப்டும். வேதம், போர்க்கலைகள், கணிதம், குயவு, விவசாயம், வானவியல்...... போன்ற பொதுக்கல்வி அளிக்கப்படும். குறிப்பிட்ட வயது ஆனவுடன் அக்குழந்தைகளுக்கு அவர்கள் கற்ற அனைத்திலிருந்தும் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் ஒருவருக்கு புத்திக்கூர்மை, பொறுமை, பணம் பொருள் மீது ஆசை இன்மை, உண்மை, வாய்மை, தயை, ஒருவருக்கு புத்தி கூறி அவரை நல்வழிக்கு நடத்தும் திறம் இருந்தால் அவன் பிராம்மணன் எனவும், மனதில் அபார தயிரியமும், வீரம் மிகுந்தும், அனைவரையும் காக்கும் பொருட்டு தன் இன்னுயிரையும் தியாகம் செய்யும் குணம் இருந்தால் அவன் க்ஷத்ரியன் எனவும், பணத்தில் ஆசை அதிகமாய், வியாபார உக்திகள் நிறைந்தவனாய், இருப்பவன் வைஷ்யன் எனவும், உடல் உழைப்பு மிகுந்தவன், இயற்கையை நன்கு அறிந்து மழை, புயல், போன்றவற்றை கணிக்கும் திறம் மிகுந்து இருக்கும் ஆற்றல் பல மிக்கவர் சூத்திரர் எனவும் கூறப்பட்டனர். ஆனால் அன்று ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை. ஏற்றத்தாழ்வு காலப்போக்கில் வந்தது" என்று அருமையாக கூறுகின்றார். 
இந்த கருத்து நிச்சயம் ஏற்கப்பட வேண்டியதே.
பாரதத்தில் ஒரு சுலோகம் உள்ளது. அது கூறுவதாவது, 
"பிறப்பால் அனைவருமே சூத்திரர் தான்.
அவனுக்கு தகுந்த சம்ஸ்காரங்கள் செய்வித்தால் அவன் துவிஜன் என்றாவான். 
வேதங்களை படித்தான் அவன் விப்ரன் ஆவான்.
எப்பொழுது ஒருவன் வேற்றுமைகளை கடந்து, அனைத்தும் ஒன்றே என்னும் பிரம்ம தத்வத்தை அறிகிறானோ அப்பொழுதே அவன் பிராம்மணன் ஆவான்"
வேதத்தில் புருஷ சூக்தம் என்ற மகத்தான துதி உள்ளது. அதன் கூற்றாவது, "பிராம்மணன் இறைவனின் முகத்தில் இருந்து தோன்றியவன். தோள்களில் இருந்து ராஜாக்கள் (அ) க்ஷத்ரியர் வந்தனர், தொடைகளில் தோன்றியவர் வைஷ்யர், இறைவனின் திருப்பாதங்களில் இருந்து வந்தவர் சூத்திரர் ஆவார்" 
இங்கு முகம் என்பது அறிவையும், தோள் என்பது வலிமையையும், தொடை என்பது சாமர்த்தியத்தையும், பாதம் என்பது உழைப்பையும் குறிக்கும். 
இதன் உட்பொருள் ஆவது, "அறிவுள்ளவன் அந்தணன், வலிமை மிக்கவன் அரசன், சாதுர்யம் மிக்கவன் வாணிகன் , உழைப்பு மிக்கவன் வேளாளன்" என்பது.
மறைகளின் கூற்றும் பிரிவுகள் பிறப்பால் வருவது அல்ல என்பதுதான்.
நம் மத நூல்களை பார்க்கும்போதும் முதலில் இந்த வேறுபாடுகள் இருந்ததாக தெரியவில்லை. வேதங்களை இயற்றிய வியாசர் "ஸ்ரீமத் பாகவதம்" என்னும் மகத்தான புராணம் ஒன்றை இயற்றியுள்ளார். அதில் அவர், "சத்யவ்ரதன் மகாதவம் செய்து பிறகு ஸ்ரார்ததேவ மனுவாகப் பிறந்து, மனுவில் இருந்து உலகம் சிருஷ்டி ஆன போது அனைவருமே பிராமணர்களாக இருந்தனர்" என்று கூறுகின்றார். இங்கு பிராமணர் என்பது "ஞானிகள்" என்பதனை குறிக்கும். வியாசரைப்பொருதவரை, உலகத்தில் ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவருமே ஜாதி, குல, வர்ண வேறுபாடின்றி அனைவருமே ஞானிகளாக இருந்தனர் என்பதுவே. 
பிறகு மனிதர்களின் குணமும் ஸ்வபாவமும் மாற, உலகின் போக்கு சீர்குலைய, இன்று, நாட்டை இயக்கம் மந்திரிகள், அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் I.A.S.அதிகாரிகள், அவர்களுக்கு அடிபணியும் காவல்துறை, அரசுக்கு கீழ்படியும் அரசு ஊழியர்கள் இருப்பதைப்போன்று, அன்று ரிஷிகள், பிராம்மண க்ஷத்ரிய வைஷ்ய சூத்ரர் என்னும் பிரிவாக மக்களை பிரித்து உலகின் போக்கை சீர்செய்தனர். ஆனாலும் பிறப்பால் ஒருவன் பிராம்மனனாக்வோ, க்ஷத்ரியனாகவோ, வைஷ்ய சூதிரராகவோ கருதப்படவில்லை. அவர்களின் குணமே ஒருவரின் வர்னாஸ்ராமத்தை நிர்ணயித்தது. 
அதற்க்கு ஆதாரம், 
வேதங்களை இயற்றிய வியாசரின் தாய் ஒரு மீனவப்பெண்.
ஆதிகவியாக விளங்கும் வால்மீகி முற்காலத்தில் ஒரு திருடன்.
மிகவும் உயர்ந்த "காயத்ரி" மந்திரத்தை உலகோருக்கு தந்த விஸ்வாமித்ரர், பிறப்பால் கௌசிகன் என்னும் ஒரு க்ஷத்ரிய ராஜன். 
பிறப்பால் இவர்கள் பிராமணர்கள் இல்லையானாலும் இவர்களின் குணத்தால் இவர்கள் பிராமணர்கள் ஆனார்கள். 
பரசுராமரும், ராஜகுரு துரோணாச்சாரியாரும் பிறப்பால் அந்தணர்கள். அவர்களின் போர் செய்யும் குணத்தால் க்ஷத்ரியராக கருதப்பட்டனர். 
இராவணன் பிறப்பால் பிராம்மணன். ஆனாலும் அவனது மோகத்தாலும், வெறியாலும், ஆசையின் மிகுதியாலும், அதர்மத்தாலும் அவன் அசுரனாக ஆனான்.
பாகவதத்தில் "ரிஷபதேவர்" என்னும் மகா ராஜஞானியின் சரித்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் பிறப்பால் க்ஷத்ரியர். ஆனாலும் அவரின் ஞானத்தால் அவர் பிராம்மனராகவே கருதப்படுகிறார். அவருக்கு நூறு ஆண் பிள்ளைகள். அவர்களில் 81 பிள்ளைகள் தவம் செய்ய இச்சைபூண்டதால் அவர்கள் பிராமணர்கள் ஆனார்கள். ஒன்பது பேர் நாட்டை ஆளும் க்ஷத்ரியர் ஆனார்கள். மற்றயோர் வர்ணங்கள் அனைத்தையும் துறந்து, பெயர், ஊர், ஜாதி, கோத்திரம் ஏதும் அற்ற அவதூதர்கள் ஆனார்கள். 
இவைகளை ஆதாரமாககொண்டே, பிரிவுகள் பிறப்பால் வருவது இல்லை என ஆணித்தனமாக கூறலாம். 
குணத்தால் ஒருவர் அங்கீகரிக்கப்பட வேண்டுமே தவிர பிறப்பால் அல்ல. 
இன்றைய காலகட்டத்தில் வர்ணங்கள், ஜாதிகள் ரீதியாக வித்தியாசம் பார்ப்பது மகா முட்டாள்தனம். இன்று மட்டும் அல்ல என்றுமே ஒருவனை பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது மிகவும் பாவமான, மனிதத்தன்மை அற்ற ஒரு செயல். அவரவர் திறமைக்கு ஏற்ப அவனவன் உயர்வான். பிறக்கும்போது அனைவருமே சமம் தான். நீ பிறந்தாற்போல தான் நானும், அனைவரும் பிறந்தோம். இதில் ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வந்தது?? மனிதனின் மனதில் இருந்துதான். மனிதனின் சுயநலத்தில் இருந்துதான். 
எவ்வாறு அரசாங்கம் இயற்றும் சட்டத்தை அதில் உள்ள ஓட்டையை வைத்தே நமது சுயநலத்திற்காக சட்டத்தை மீறுகிறோமோ, அவ்வாறே வர்ணாஸ்ரம கொள்கைகளும் மீறப்பட்டன.
வர்ணாஸ்ரம கொள்கைகள், ஜாதி பாகுபாடுகள் ஏதோவொரு காலகட்டதிர்க்காக, அன்றைய சமூக சூழலை சீர்செய்ய உருவாக்கப்பட்டவை. ஆனால், அவைகளே இன்றைய சமூக நிம்மதியை சீர்குலைத்து, மக்களிடையே பிரிவினையை உண்டக்குமேயனால் அவைகள் நிச்சயம் குப்பையில் போடப்படவேண்டியவையே. கல்வியாலும், அறிவாலும் அனைவருமே சமாக கருதப்படும் இன்றைய சூழலில், அன்றைய கொள்கைகள் பயனற்றவை!!!!

No comments:

Post a Comment