jaga flash news

Saturday, 30 January 2016

ஆகாச கருடன் கிழங்கு

ஆகாச கருடன் கிழங்கு :
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன.
வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.
பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை, என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் “ஆகாச கருடன் கிழங்கு” என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.
இம் மூலிகை காடுகள்இவனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும். சுமார் 40 – 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு, நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.
நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்?
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.
உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. “சாகா மூலி” என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது. முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.
வளரியல்பு
ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது.
காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும். இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.
மருத்துவப் பயன்கள்
பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும். விடம் முறிந்து நோயாளி குணமடைவான். விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.
மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.
இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.
இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணையை விலக்க வேண்டும்.
ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்தவுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன் வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.
ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண், சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து, குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.
ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி, அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வாதத்துக்குப் பற்று போட்டு வந்தால் வாத வலி குறையும்.
அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.
கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும்.கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.
துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு.
கொல்லன் கோவைக் கிழங்கால் மஹா விஷம், தேக வெளுப்பு, சுரம், வாதசூலை, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, திரி தோஷம் ஆகிய நோய்கள் தீரும்.
செய்கை:-வியதாபேதகாரி(ALTERNATIVE){வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கிச் சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்து},
பலகாரி(TONIC){தாதுக்களுக்கு பலம் கொடுக்கும் மருந்து}.
உபயோகிக்கும் முறை:- இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று. இதனில் இரண்டொரு கடலைப் பிரமாணமுள்ள துண்டுக் கிழங்கை வெற்றிலையுடன் கூட்டிக் கொடுக்க தேள்,நட்டுவக்காலி இவைகளினால் உண்டான விஷமும் நெறி கட்டுதலும் போகும்.
கருடன் கிழங்கு,குப்பை மேனி, அவுரி, ஆவாரை, கீழ்காய் நெல்லி(இலைக்கு கீழ் காய் காய்ப்பதால் இவ்வாறு அழைப்பார்கள்.கீழாநெல்லி என்பதும் கீவா நெல்லி என்பதும் இதுவே),இவ்வைந்து இலைகளையும் இடித்து சாறு பிழிந்து உள்ளுக்குள் கொடுத்து,உடம்பில் துவாலையிட(உடம்பில் மேற்பூச்சாக பூச)அஷ்ட நாக விஷங்களும் போகும்.
கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்ய வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.நோயாளரை ஒரு 24 மணி நேரத்திற்கு தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து(வஸ்திர காயம் செய்து) எடுத்துக் கொண்டு பேய்ச் சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிட குட்டம்,மண்ணுளிப்பாம்பின் நஞ்சு, தீரும்.உடல் காயசித்தியாகும்.
இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும்.இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ,பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.ஏனெனில் ஆகாயம் சிதம்பரம்.சிவனாகிய சிவன் அதனால்தான் அங்கே சிவ பாகமான வலது கால் தூக்கி ஆடுகிறான்.

No comments:

Post a Comment