jaga flash news

Tuesday 25 September 2018

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு ஏன் வேண்டும்

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு ஏன் வேண்டும்

முன்காலங்களில் கர்ப்பம் உறுதியானதுமே நான்காம் மாதம் புக்ககத்தில் ஸ்ரீமந்தம் செய்வார்கள். அதன் பின்னரே பெண் தாய் வீட்டிற்குப் போவாள்.   மேலும் மசக்கை நேரத்தில் தாய்வீட்டில் ஓய்வில் பெண் இருக்கவும் முடியும்.  தற்காலங்களில் இது கொஞ்சம் மாறுபட்டு எட்டாம் மாதம் தான் ஸ்ரீமந்தம், வளைகாப்பு போன்ற எல்லாவற்றையும் சேர்த்துச் செய்கின்றனர். பொதுவாக ஐந்தாம் மாதம் நல்ல நாள் பார்த்து, தாய் வீட்டிற்குச் சென்று மருந்துகள் போட்டுக் காய்ச்சப்பட்ட எண்ணெயைப் பெண்ணுக்குக் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்வது உண்டு. தற்காலங்களில் அந்த வழக்கம் முற்றிலும் தடை செய்யப் பட்டிருக்கிறது. வெகு சிலரே ஐந்தாம் மாதம் தாய் வீடு செல்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தற்காலங்களில் வேலைக்கும் செல்வதால் பிரசவத்திற்கு முன்னரே விடுப்பு கிடைக்கும்.

ஐந்தாம் மாதம் பிறந்த வீடு செல்லும் முன்னர் நல்ல நாள் பார்த்துப் பொதுவாக மாமியார் வீடான புக்ககத்தில் பெண் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாள் என்பதைக் குறிக்கும் வண்ணம் அரும்புகளாக இருக்கும் பூக்களை வாங்கி மருமகளின் தலையில் மாமியார் சூட்டுவார். நாத்தனார் இருந்தால் அவரும் சூட்டி விடுவார். அன்றைய தினம் பெண்ணின் பிறந்தகத்தவரையும் அழைத்து இருப்பார்கள். அவர்களும் பெண்ணை மசக்கைக்குப் பிறந்தகம் அழைத்துச் செல்ல வருவார்கள். ஆகவே அதற்கு ஒத்திசைவான நாளே பார்ப்பார்கள். அநேகமாய் மொட்டுப் பூச்சுட்டல் முடிந்த அன்றே பெண்ணைப் பிறந்தகம் அழைத்துச் செல்வது உண்டு. அன்றைய தினம் விருந்து இருக்கும். ஆனால் கலந்த சாத வகைகள் இருக்காது. வளைகாப்பு முடிந்தாலே கலந்த சாத வகைகள் போடுவார்கள்.

ஆறு அல்லது ஏழாம் மாதங்களுக்குள் குழந்தைக்கும் தாய்க்கும் ரத்தப் பரிசோதனை செய்து தாயின் ரத்த வகையோடு குழந்தையின் ரத்த வகை இரண்டாலும் பாதிப்பு இல்லாமல் இருக்குமா என்பதைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். தாய்க்கு நெகட்டிவ் வகை ரத்தமும், குழந்தைக்கு பாசிடிவ் வகை ரத்தமும் இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே இதைக் கண்டறிய வேண்டும். ஸ்ரீமந்தம் ஆறாம் மாசமும், செய்யலாம், எட்டாம் மாசமும் செய்யலாம், அவரவர் வசதிப்படி. வளைகாப்பும் சேர்த்தே செய்கின்றனர்.
வளைகாப்பு:

வளர்பிறையில் நாள் பார்த்து அதிகாலையில் வளை அடுக்குவார்கள். வளை அடுக்குகையில் பொதுவாக முன் காலங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்துவிட்டுக் குளிப்பதற்கு முன்னர் வளை அடுக்குவார்கள். முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், பின்னர் நேர்ந்து கொண்ட தெய்வங்களுக்கும் எடுத்து வைப்பார்கள். அதன் பின்னர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள். ஒரு கையில் பனிரண்டு வளை அடுக்கினால் மறு கையில் பதினொன்று அல்லது பதின்மூன்று என ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். கைகள் கொள்ளும்வரையில் அடுக்கிக் கொள்ளலாம். முன்னர் அரக்கு வளையைக் கங்கணமாகப் போடுவதுண்டு.

அதை வீட்டுக்கு வளைச்செட்டி வந்து வெட்டி நெருப்பில் காட்டி அரக்கை உருக்கி ஒட்டிக் கொடுப்பார். இப்போதெல்லாம் கங்கணம் என்ற ஒன்றே போடுவதில்லை. வளை அடுக்குவதில் வீட்டில் மூத்த வயது முதிர்ந்த பெண்மணியை விட்டு முதலில் போடச் சொல்லுவார்கள். பின்னர் வீட்டில் இருக்கும் மற்ற மூத்த பெண்மணிகள் எண்ணிக்கையில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற வரிசையில் வளை அடுக்குவார்கள். கர்ப்பிணிப் பெண்ணோடு கூடவே திருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் அடையாத ஒரு பெண்ணிற்குத் துணைக்காப்புப் போடுவார்கள். பின்னர் இரு பெண்களையும் உட்கார வைத்து மேலே சொன்ன வரிசையில் பெண்கள் அனைவரும், கெளரி கல்யாணம் வைபோகமே என்ற வாழ்த்துப்பாடலைப் பாடிக்கொண்டு கர்ப்பிணிப் பெண்ணிற்கும், துணைக்கு வளை அடுக்கிக்கொள்ளும் பெண்ணிற்கும் எண்ணெய் தொட்டு உச்சந்தலையில் வைப்பார்கள். அதன் பின்னர் ஆரத்தி எடுத்ததும் இருவரையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள்.
குளித்து முடிந்ததும், மீண்டும் கர்ப்பிணிப்பெண்ணை மணையில் அமர வைத்துப் புதுப்புடைவை தாய் வீட்டில் எடுத்தது, (இது அநேகமாய்க் கறுப்பில் இருக்கும். சில வீடுகளில் கறுப்பு கூடாது என்பார்கள். அப்போது ஆழ்ந்த நிறமாக வேறு நிறத்தில் எடுப்பார்கள்.) வைத்துக் கொடுத்து மீண்டும் பெண் அந்தப் புடைவையைக் கட்டிக்கொண்டு வந்ததும், அனைவரும் பெண்ணின் தலையில் பூச்சூட்டுவார்கள். (இதைத் தவிர ஸ்ரீமந்தத்தின் போதும் பூச்சூட்டல் எனப் புக்ககத்தில் நடக்கும். இது தாய்வீட்டுப் பூச்சூட்டல். தற்காலங்களில் காலை வளைகாப்பு, அதன் பின்னர் ஸ்ரீமந்தம், பின்னர் உடனேயே பூச்சூட்டல் என எல்லாம் அதி அவசரமாகக் காலை பத்து மணிக்குள்ளாக முடித்துவிடுகின்றனர்.) குறைந்த பக்ஷம் பத்து முழம் மல்லிகை, முல்லை போன்ற வாசனைப்பூக்கள் கொண்ட பூச்சரத்தைப் பெண்ணின் உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றாக ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டே வந்து பின்னலின் நுனியில் முடிப்பார்கள். அதன் பின்னர் அவரவர் இஷ்டத்திற்குப் பாடல்கள் பாடப் படும். இதற்கென மசக்கைப் பாடல்கள் உண்டு. வளை அடுக்குவதன் காரணம், கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்குத் தாயின் அசைவுகள், கைகளின் வளை ஓசை கேட்கும் என்பதாலேயே. அதுவும் தாயின் கைகளின் வளையல்களின் கலகலச் சப்தம் குழந்தைக்கு நன்கு கேட்கும்.  அதன் பின்னர் ஏழு வகைக் கலந்த சாதங்கள், அல்லது ஐந்து வகைக் கலந்த சாதங்கள் சமைத்துப் பரிமாறுவார்கள். 

விருந்தினர் அனைவரும் பெண்ணை வாழ்த்தி இயன்றவர் பரிசுகள் அளித்ததும் வளைகாப்பு நிறைவுறும்.  அடுத்து ஸ்ரீமந்தம் என்றால் என்ன என்று பார்க்கலாம்

1 comment: