jaga flash news

Wednesday, 8 April 2020

கை கழுவுவது

கை கழுவுவது:

ஒவ்வொருவரிடத்தும் "கைகழுவ' வேண்டிய விஷயங்கள் எனப் பல இருக்கலாம். ஆனால் எவருமே "கைகழுவக்கூடாத' விஷயங்களில் ஒன்றுதான் "கை கழுவுவது'!

கை கழுவாமல் சாப்பிட்டால் அப்படியென்ன கைமீறிப் போய்விடும் எனக் கேள்வி எழலாம். உண்மைதான். கைகழுவாமல் சாப்பிட்டால் கண்டிப்பாக கைமீறித்தான் போகின்றனவாம், நோய் பரப்பும் கிருமிகள், நமது வாய்க்குள்.

அப்புறம், அவை கிடைக்கும் "வாய்'ப்புகளைப் பயன்படுத்தி குடலைப் பதம்பார்த்து "பின்விளைவுகளை' ஏற்படுத்திவிடுகின்றனவாம்!

சரி, கைகளைக் கழுவிவிட்டால் நோய்களைத் தடுக்க முடியுமா என சந்தேகம் ஏற்படலாம். ஆம், என்கின்றனர் மருத்துவர்கள்.

எண்ணற்ற பொருள்களை நம்மையறியாமல் நாம் தொடுவதால் கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் கைகளில் தங்குகின்றன. அவற்றைக் கழுவி நீக்காமல் உணவுப் பொருள்களை எடுத்து உள்கொள்வதால் நாம் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம். எனவே, கைகழுவுதல் மிக முக்கியம்.

பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி-மயக்கம், குடற்புண் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு கைகளைச் சுத்தப்படுத்தாததே காரணம்.

அதற்காக "கையை வைச்சுக்கிட்டு சும்மா இருடா' என அவர்களை அதட்டி, மிரட்டி உத்தரவு போடாமல், விளையாடச் சொல்லி ஆர்வமூட்டி, அதன் பிறகு கைகழுவக் கற்றுத்தரலாம். குறிப்பாக, சாப்பிடும் முன் கண்டிப்பாக கையைக் கழுவ சொல்லித்தர வேண்டும்.

ஆனால், கைகழுவாமல் சாப்பிடுவதில் பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினருமே ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஏனெனில், நூறு பேரில் முப்பத்து மூன்று பேர் கைகழுவாமல்தான் சாப்பிடுவதாகவும், அதனால் வயிற்றுக்கோளாறால் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணில் விளையாடிவிட்டு அப்படியே சாப்பிட உட்கார்ந்தால், வயிற்றுக்கோளாறு நிச்சயம். அதிகமான மக்கள் நடமாடுவதால் கடற்கரையோர, ஆற்றங்கரையோர மணல்களில் நமது வயிற்றைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கின்றன.

எனவே, மணல் வெளியில் கோலமிட்டு மகிழுவோர் சாப்பிடும் முன் மறக்காமல் கைகழுவ வேண்டும்.

கை சுத்தமாக வேண்டுமானால் மூன்று அல்லது நான்கு முறை கைகளை நீரில் முக்கி எடுத்தாலே போதும். அதிலேயே 95 சதவீத பாக்டீரியாக்களும், வைரஸ்களும் நீங்கிவிடுகின்றனவாம்.

பின்னர், (அதிக ரசாயனக் கலப்பில்லாத) சோப்பு அல்லது கிரீம்கள் போட்டுக் கைகழுவலாம் (நமது நல்வாழ்வுக்காக கிருமிகளுக்குக்கூட "சோப்பு' வேண்டியுள்ளதே!).

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில், வயிற்றுப்போக்கால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் என்றும், உலக அளவில் இறக்கும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 11 சதவீதம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு பாதிப்பால்தான் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் இறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த உயிரிழப்புக்கு சுத்தமின்மை மட்டுமல்ல தரமான குடிநீர் கிடைக்காததும் காரணம்.

அவ்வப்போது கைகளைச் சுத்தமாகக் கழுவி சுத்தத்தைப் பராமரிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு பாதிப்பை 45 சதவீத அளவுக்குக் குறைத்துவிட முடியும் என்றும், நிமோனியா பாதிப்பை 50 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் நோயின்றி இருக்க சுத்தமான கையும், உள்ளம் நோயின்றி இருக்க கைச்சுத்தமும் அவசியம். "கை' சுத்தமாக இல்லையெனில் அனைவருக்குமே பிரச்னைதான். சுத்தமில்லா கையால்தான் நாம் "பிற்போக்கு' பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி "கைகழுவும் தினமாக'க் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, தனியாகக் கைகழுவும் நாம் அன்றைய தினம் மட்டும் கூட்டணி அமைத்து கையைக் கழுவிவிடலாம்!

ஆக, "பல்வேறு நோய்களை ஏற்படுத்திவிடுவேன்' என "கை' நம்மை மிரட்டுவதற்கு முன்பு நாமே முந்திக்கொண்டு (கை அழுக்குகளை சுத்தமாகக்) கைகழுவி விடுவதுதான் புத்திசாலித்தனம்!

நன்றிகளும்
பிரியங்களும்.

No comments:

Post a Comment