அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் பொழிப்பு (மு வரதராசன்): பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.இழுக்கா இயன்றது அறம் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:35) |
மணக்குடவர் உரை: மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பரிமேலழகர் உரை: அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. வ சுப மாணிக்கம் உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே அறம். |
பொருள்கோள் வரிஅமைப்பு: பதவுரை: |
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: 'பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கும்' என்று அனைத்து பழம் ஆசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்நான்கினையும்', 'பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல், ஆகிய நான்கையும்' 'பொறாமையும், ஆசையும், சினமும், கடுஞ்சொல்லுமாகிய நான்கினையும்', 'பிறர் உயர்வு கண்டு பொறாமையும், பெரு விருப்பமும், சீற்றமும், கடுஞ்சொல்லும் எனப்படும் இவை நான்கினையும்' என்றபடி உரை தந்தனர். பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கினையும் என்பது இப்பகுதியின் பொருள். இழுக்கா இயன்றது அறம்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: 'ஒழித்து நடப்பது அறம்' என்று மணக்குடவரும் 'குற்றமாகக் கொள்வது அறம் (அல்லதூஉம் இவை நான்குங் குற்றமாகக் கொள்ளாது, மேற்கொண்டொழுகுமாயின், மற்றிவன் செய்யப்பட்டதோர் அறமும் ஐயப்படத்தகும்)' என்று காலிங்கரும் 'கடிந்து இடையறாது நடந்தது அறம்' என்று பரிமேலழகரும் பொருள் கொள்வர். இன்றைய ஆசிரியர்கள் 'நீக்கி நடப்பதே அறம்', 'நீக்கிவிட்டுச் செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்களேயாகும்', 'தவிர்த்து நடைபெறுவதே அறவினை எனப்படும்', 'நீக்கிச் செய்கின்ற செயலே அறச்செயலாகும்' என்றபடி உரை செய்தனர். நீக்கி நடப்பது அறம் என்பது இப்பகுதியின் பொருள். |
நிறையுரை: |
தீயகுணங்களை நீக்குவது அறமாம். அறம் நடைபெற வேண்டுமானால் அதற்குக் கேடாய் அமைந்தனவற்றை அகற்றாமல் இயலாது. மாசிலா மனத்திலேதான் அறம் நிலைபெறும், மனமாசுக்கு ஏதுவாக அமைபவற்றை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கில் சுருக்கிக் காண்கிறார் வள்ளுவர். இழுக்கா என்ற சொல் இழுக்கி அதாவது விலக்கி என்ற பொருள் தருவது. ஒழுக்கத்திற்கு எதிர்ச்சொல் இழுக்கம். இழுக்குதல்-வழுக்குதல், தவறுதல். எனவே இழுக்கா என்பதற்கு இழுக்காக அதாவது குற்றமாக என்றும் பொருள் கூறுவர். |
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் என்ற இவை நான்கு மட்டும்தாம் அறமற்றவைகளா? அறம் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது எளிதன்று. எவை எவை அறம்/அறமற்றவை என்று தொகுக்கப்பட்டாலும் அது முழுமையானதாக இருக்காது. அறத்திற்குரிய பண்புகள் இவை என விதந்து கூறாமல், எவற்றை நீக்கிவிட்டால், அறவழிகளில் நின்றதாக ஆகிவிடுமோ, அவற்றையே வள்ளுவர் இக்குறளில் சொல்கிறார். அப்படியென்றால் இங்கு குறிக்கப்பட்ட நான்கு மட்டும்தாம் அறமற்றவைகளா? |
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கையும் நீக்கி நடப்பது அறம் என்பது இக்குறட்கருத்து |
jaga flash news
Tuesday 14 April 2020
கடுஞ்சொல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment