jaga flash news

Sunday 29 October 2023

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி!



குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி! செவ்வாய்க்கிழமை புக் செய்வது வேலைக்காகாது
விமானத்தில் டிக்கெட் புக் செய்யும் போது குறைந்த விலையில் எப்படி புக் செய்யலாம்.. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.


இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் போட்டி, வருமானம் அதிகரிப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.


விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைவருக்கும் குறைந்த விலையில் டிக்கெட் கிடைப்பதில்லை. ஆனால், குறைந்த விலை டிக்கெட் புக் செய்ய சில டிரிக்குகள் இருக்கவே செய்கிறது.. அது குறித்து நாம் பார்க்கலாம்.

விமான டிக்கெட்: விமான டிக்கெட் விலை எப்போதும் ஒரே ரேஞ்சில் இருக்காது. அவை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் விமானங்களை புக் செய்தால் குறைந்த செலவில் பயணிக்க முடியும் என்பார்கள். மேலும், , நள்ளிரவு நேரத்தில் குறிப்பாகத் திங்கள்கிழமை இரவு புக் செய்தால் குறைவாக இருக்கும் என்பார்கள். ஆனால், இதில் பெரும்பாலும் உண்மை இல்லை என்கிறது ஹாப்பர் நிறுவனம்.

அது சரி அப்போது ஏன் செவ்வாய்க்கிழமைகளில் விமானம் டிக்கெட் ரேட் குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள் எனத் தெரியுமா.. இப்போது விமான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டிக்கெட்களை மெஷின் லேர்னிங் மூலமாகவே விற்பனை செய்கிறார்கள். அதாவது இத்தனை காலமாக டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த டேட்டா அடிப்படையில் விமான நிறுவனங்கள் டிக்கெட்களை விற்கிறார்கள்.


என்ன காரணம்: இந்த டேட்டா மூலம் எந்த ரூட்டில், எப்போது தேவை அதிகமாக இருக்கும் என்பதை அவர்களால் ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டறிய முடியும். மேலும், எத்தனை பேர் குறிப்பிட்ட ரூட்டில் விமான டிக்கெட்களை தேடுகிறார்கள். விமான பயணம் எப்போது என்று பல்வேறு விஷயங்களை வைத்தே இப்போது டிக்கெட் ரேட் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த மேஷின் லேர்னிங் உள்ளே வருவதற்கு முன்பு, விமான ஊழியர்கள் தான் டிக்கெட் விலையை செட் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை டிக்கெட் ரேட்டை நிர்ணயம் செய்யும் அவர்கள், வார விடுமுறை முடிந்து திங்களன்று பணிக்குத் திரும்புவார்கள். அப்போது குறிப்பிட்ட ரூட்டில் டிக்கெட் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றால் விலையைக் குறைப்பார்கள். அந்தக் கால செட்அப்பில் இதற்குக் கொஞ்ச நேரம் பிடிக்கும். இதன் காரணமாகவே திங்கள் நள்ளிரவு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது.


நிலைமையே வேறு: ஆனால், மெஷின் லேர்னிங் வந்த பிறகு நிலைமையே வேறு.. இதனால் கடந்த 15 ஆண்டுகளாகச் செவ்வாய்க்கிழமைகளில் குறைந்த ரேட் என்பது இல்லாமல் போய்விட்டது. மெஷின் லேர்னிங் உள்ளே வந்த பிறகு டிக்கெட் விலையில் அடிக்கடி மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஒரு ரூட்டில் இப்போது ஒரே வாரத்தில் 12க்கும் மேற்பட்ட முறை டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் செவ்வாய் அன்று புக் செய்தால் குறைந்த விலை என்பதில் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது. டிக்கெட் ரேட் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதே உண்மை.



அப்போ வேறு எப்படி தான் குறைந்த விலையில் டிக்கெட் புக் செய்யலாம் என கேட்கிறீர்களா.. அதற்கும் சில ஆப்ஷன் இருக்கவே செய்கிறது. செவ்வாய்க்கிழமை புக் செய்தால் குறைந்த விலை இல்லை என்றாலும், செவ்வாய்க்கிழமை நீங்கள் பயணத்தைத் திட்டமிட்டால் அப்போது குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. செவ்வாய், புதன்கிழமைகளில் பயணித்தால் டிக்கெட் விலை 8 முதல் 15% வரை குறைவாகக் கிடைக்கும்.

பிரத்தியேக தளங்கள்: விமான நிறுவனங்கள் அடிக்கடி விமான ரேட்டை மாற்றும் நிலையில், அதைத் தெரிந்து கொள்ளவும் கூட தனியாக சில சைட்கள் இருக்கிறது. கூகுள் பிளைட்ஸ் உள்ளிட்ட சில தளங்களில் நீங்கள் எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்பது போன்ற தரவுகளைப் பதிவிட வேண்டும்.


பயண தேதியில் சற்று தளர்வாக இருக்கலாம். அதாவது அடுத்த மாதம் 15ஆம் தேதி பயணிக்க வேண்டும் என்று இல்லாமல், 10 முதல் 15 வரை எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று பதிவிட்டுத் தேடுங்கள். அப்போது உங்களால் மிகக் குறைந்த ரேட்டில் விமான டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது


No comments:

Post a Comment