jaga flash news

Wednesday 15 November 2023

வாடிய தாமரை! சிறுகதை!



வாடிய தாமரை!
சிறுகதை!



காலை ஏழு மணி. கும்பகோணத்திலிருந்து அரியலுரை நோக்கி மெல்லிய குளிர்க்காற்றை கிழித்துக்கொண்டு அதிவேகமாகச் சென்றது அந்த எக்ஸ்பிரஸ் ரயில். அந்த ரயிலில் தனது மனைவியோடும் தனது இரண்டு வயது பெண் குழந்தையோடும் பயணித்துக்கொண்டிருந்தான் நந்தகுமார். நல்ல அழகிய கம்பீரத் தோற்றத்தோடு கூடிய அவனுக்கு சுமார் இருபத்தேழு வயதிருக்கலாம். காலைப்பொழுதின் எதிர்க்காற்று முகத்தில் அறைய, இயற்கைக் காட்சிகள் வேகமாக பின்னோக்கி நகர அதை இனிமையான தருணத்தை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தான் நந்தகுமார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மனைவி, குழந்தையோடு ரயிலில் பயணிக்கும் இந்தப் பயணம் அவனுக்கு மட்டுமின்றி, அவனது மனைவி மற்றும் குழந்தைக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சி நந்தகுமாருக்கு நெடுநேரம் நீடிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அந்த ரயில் சித்தமல்லி ஸ்டேஷனில் ஒரு ஐந்து நிமிடம் நின்றது. அப்போது ஒரு பெண், இடுப்பில் ஆறு மாத பெண் குழந்தையுடன் வேகமாக அந்த ரயில் பெட்டியில் ஏறினாள். அவளது சேலை முந்தானையை பிடித்தபடி இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று.

பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருந்த அந்தப் பெண் கட்டியிருந்த சேலை சற்று கசங்கலோடு அழுக்காகத்தான் இருந்தது. அவளது சேலை மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் மனமும் மிகவும் கசங்கலோடுதான் இருக்கிறது என்பதை அவளது முகத்தில் தேங்கியிருந்த சோகம் அப்பட்டமாகக் காட்டியது. அதுமட்டுமல்ல, அவளுடன் கூட வந்த குழந்தைகளும் அழுக்கடைந்த உடைகளை அணிந்தபடி, நன்றாக சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருக்கும் எனும் தோற்றத்தோடு காணப்பட்டன. வேகமாக ரயிலில் ஏறிய அந்தப் பெண் நேராக நந்தகுமார் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பிடுவதுதானே இந்த உலகின் வழக்கம். அதற்கு நந்தகுமாரின் மனைவியும் விதிவிலக்கு இல்லையே. வறிய கோலத்தில் வந்து அமர்ந்த அந்தப் பெண்ணை பார்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்களின் மனதில் பரிதாபம் தோன்றாமல் இருக்காது. ஆனால், அந்தப் பரிதாப உணர்ச்சி நந்தக்குமார் மனைவிக்கு சற்றும் வரவில்லை. மாறாக அசூயையோடு, அந்தப் பெட்டியில் காலியாக இருந்த வேறு இருக்கைக்குப் போய் விடலாம் என்று தனது கணவன் நந்தக்குமாரிடம் கூறினாள். கணவன் எழுந்து வர காத்திராமல், தனது பெண் குழந்தையோடு வேறு இடத்துக்குச் சென்று அமர்ந்திருந்தாள்.

ரயிலில் ஏறிய அந்தப் பெண் அப்போதுதான் தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் நந்தக்குமாரைப் பார்த்தாள். மனதில் சிறிய ஆச்சரிய மின்னல் கீற்று. ஆனாலும், அவனுக்கு எதிரில் தான் இந்தக் கோலத்தில் அமர்ந்திருப்பது அவளை மிகவும் கூனிக் குறுகச் செய்தது. இருந்தாலும், அலைபாயும் தனது மனதை அடக்கிக்கொண்டு அவனிடம், “என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டாள்.

தனக்கு எதிரே வேகமாக வந்து அமர்ந்த அந்தப் பெண், ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டவுடன் நந்தகு மாருக்கு சற்று நேரத்துக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அவனது நிலைமையைப் புரிந்துகொண்ட அந்தப் பெண் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள். “நான்தான் தாமரை. காலேஜில் உங்களோடு ஒன்றாகப் படித்தேனே. ஞாபகம் இருக்கா? நல்லா இருக்கீங்களா?” என்று அடுத்தடுத்து தனது கேள்விகளை அடுக்கினாள்.

நந்தகுமாருக்கு அப்போதுதான் அவளை ஞாபகம் வந்தது. ஆனாலும் வியப்பில் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவன் ஆச்சரியத்தில் திகைத்துப்போய் இருந்தான்.

சட்டென சுயநினைவு வந்தவனாக, “ஆமாம்… ஆமாம்… காலேஜில் என்னுடன் படித்த தாமரையா நீ? ஏன்… ஏன் இப்படி? அப்பொழுது நீ எவ்வளவு ஆடம்பரமாகவும் அழகாகவும் இருந்தாய்? இப்பொழுது ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று மிகவும் ஆதங்கப்பட்டான். அது மட்டுமின்றி இருவர் மனதிலும் கல்லூரியில் படித்த அந்த நாட்களின் இனிய அனுபவங்கள் படம் போல் ஓடியது.

அடுத்த ஒரு கணம் நந்தக்குமாரை உற்றுப் பார்த்துவிட்டு தாமரை பேசத் தொடங்கினாள். “நந்தக்குமார், காலத்தின் கோலம் என்னை எப்படி மாற்றி இருக்கிறது பார்த்தாயா? கல்லூரி நாட்களில் என்னிடம் நெருங்கிப் பழகிய உன்னாலேயே என்னை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருக்கிறது எனது நிலைமை இப்போது. எத்தனை முறை உன்னிடம் நான் வெட்கத்தை விட்டு எனது காதலைச் சொல்லியிருப்பேன். என் மீது காதல் இருந்தாலும் நீ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நான் கேட்கும்போதெல்லாம் மழுப்பலாக ஒரு பதிலைச் சொல்லி என்னைக் கடந்து சென்றாயே.

ஒரு நாள் உன்னிடம் நான் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியபோது நீ என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா? ‘படிக்கிற வயதில் திருமணம் போன்ற எண்ணங்கள் எல்லாம் எனக்கு கிடையாது’ என்று கூறினாய். அன்று நீ அதை நகைச்சுவையாகக் கூறினாயா அல்லது என்னைத் தவிர்ப்பதற்காகக் கூறினாயா என்று தெரியாது. ஆனால், போன ஜென்மத்து சாபமோ அல்லது பாபமோ தெரியவில்லை, நீ அன்று கூறியபடியே ஒரு விவரமும் இல்லாத ஒருவனைத்தான் எனக்கு எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள்.


கல்லூரி வரைக்கும் படித்த என்னை, அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்தில் கல்யாணம் முடித்துக் கொடுத்தார்கள் எனது பெற்றோர். குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியவில்லை அல்லது வேறு ஏதாவது அவசரம் என்றாலும் கூட, பேருந்து வசதியே இல்லாத அந்த கிராமத்தில் இருந்து இந்த சித்தமல்லி ரயில் நிலையத்துக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்துதான் வர வேண்டும். அதுமட்டுமில்லை, எனது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என கனவு கண்டுகொண்டிருந்த எனக்கு, பள்ளிக்கூடமே இல்லாத அந்தக் கிராமத்தில் வாழ்க்கை அமைஞ்சது கொடுமையிலும் கொடுமை. எந்த அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், விவசாயத்துக்கு பஞ்சமில்லாத அந்த கிராமத்தில் பயிர் பச்சைகளுக்கு குறைவில்லை.

எனக்கு மாமியார் மட்டும்தான். மாமனார் இல்லை. என் வீட்டுக்காரருடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா ஒரு தங்கை. எல்லோரும் விடிஞ்சா வேலைக்கு ஓடி விடுவார்கள். குடும்பத்தைப் பற்றியோ, எங்களைப் பற்றியோ யாருக்கும் எந்த அக்கறையும், கவலையும் இல்லை. எனது கணவருக்கு ஆறு ஏக்கர் விளைநிலம் இருக்கிறது. விளைச்சலை பார்ப்பதற்கும் கடனை அடைப்பதற்கும் தான் அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. எங்களுக்கு சரியான சாப்பாடு கிடையாது; நல்ல துணி மணி கிடையாது. இதுபற்றி எனது கணவருக்கே எந்த அக்கறையும் இல்லாதபோது மற்றவர்களை குறைகூறி என்ன பயன்? கல்யாணம் ஆன நாள் முதல் இப்போது வரை எனது அம்மாதான் எங்களது நல்லது கெட்டதுகளை கவனித்து வருகிறாள். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பஞ்சாயத்து வைத்தும் எனது கணவர் கொஞ்சம்கூட திருந்தவில்லை.

எனது அம்மாவும் ஒருகட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகவும் மனவேதனையோடு, ‘இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு, நீ செத்தே தொலையலாம்’ என்று கூறிவிட்டாள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. எப்படி சாவது என்றுதான் தெரியவில்லை. என்னோட நிலைமை எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது நந்தக்குமார்” என்று சொல்லி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள் தாமரை.

என்ன ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றுவது என்று தெரியாமல் நந்தக்குமார் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மனம் கலங்கிப்போய் அமர்ந்திருந்தான். பிறகு ஒருவழியாக சமாளித்துக்கொண்டு, “சரி தாமரை… நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கப்போவதைத்தான் பார்க்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்காகவாவது நீ வாழத்தான் வேண்டும். எந்தத் தப்பான முடிவையும் நீ எடுத்து விடாதே. குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு தனது பர்சிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து அவளது கையில் வலுக்கட்டாயமாகத் திணித்தான்.

அதற்குள் அரியலூர் ரயில் நிலையம் வந்துவிட, அவசர அவசரமாக அவளிடம் விடைபெற்றுக்கொண்டு தனது மனைவி, குழந்தையோடு ரயிலை விட்டு கீழே இறங்கிச் சென்றான் நந்தக்குமார்.

ரயிலில் இருந்து இறங்கிய தாமரை தனது குழந்தைகளோடு, மனம் அலைபாய இலக்கின்றி நடந்தாள். அதைத் தொடர்ந்து வந்த சில நாட்களில் தாமரை தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனாள் என்ற செய்தி நந்தக்குமாருக்குத் தெரிய வந்தது.

அந்தப் பெண்ணின் இந்த நிலைமைக்கும் தற்கொலைக்கும் தானும் ஒருவகையில் காரணம்தானே என்ற குற்ற உணர்வு அவனை இன்றுவரை வாட்டத்தான் செய்கிறது!




No comments:

Post a Comment