jaga flash news

Wednesday, 10 October 2012

4 சிலிண்டர் எஞ்சினை விட 3 சிலிண்டர் எஞ்சினுக்கு முக்கியத்துவம் ஏன்?


நம் நாட்டு கார் மார்க்கெட்டில் 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினை விட 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மாருதி ஆல்ட்டோ, ஆல்ட்டோ கே10, வேகன்-ஆர், எஸ்டீலோ, இயான் உள்ளிட்ட 800சிசி முதல் 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட கார்களில் 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளன.
போக்ஸ்வேகன் போலோ, ஸ்கோடா ஃபேபியா ஆகிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் 1.2 லிட்டர் எஞ்சின்கள் உள்ளன. ஆனாலும், இந்த கார்களின் எஞ்சின்கள் 3 சிலிண்டர்களை கொண்டதாக இருக்கின்றன.
பீட் டீசல் எஞ்சின் 3 சிலண்டர்கள் கொண்டதுதான். விரைவில் வர இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கூட 3 சிலிண்டர்களுடன் வருகிறது. ஆனால், இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இவ்வாறு, 4 சிலிண்டர்களுக்கு பதிலாக 3 சிலிண்டர்களுடன் கூடிய எஞ்சின்களை கார்களில் பொருத்துவதற்கு நிச்சயம் பல காரணங்கள் உள்ளன. இந்த நிலையி்ல், 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின்களின் வேறுபாடுகளையும், சாதக, பாதங்களையும் இங்கே காணலாம்.
3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின்:
மைலேஜ்:
3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினின் அடிப்படை பலமே அதிக மைலேஜ் தருவதுதான். உதாரணமாக, 1000சிசி திறன் கொண்ட எஞ்சினில் 4 சிலிண்டர்கள் மூலம் எரிக்கப்படும் எரிபொருளை விட 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினில் எரிக்கப்படும் எரிபொருள் குறைவாக இருக்கும். இதனால், 3 சிலிண்டர் எஞ்சின் அதிக மைலேஜ் தரும்.
உராய்வு:
3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுக்குள் பிஸ்டனின் இயக்கத்தின்போது உராய்வு குறைவாக இருக்கும் என்பதால் எரிபொருள் விரயம் குறையும்.
இலகு எடை:
4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினைவிட 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் எடை குறைவாக இருக்கும் என்பதால் காரின் கெர்ப் எடை குறையும். இதனால், கூடுதல் மைலேஜ் தரும் என்பதால் கார் நிறுவனங்கள் 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அடக்கமான வடிவம்:
3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் வடிவத்தில் அடக்கமாக இருப்பதால் அதிக இடத்தை அடைக்காமல் "எஞ்சின் பே" பகுதியில் கச்சிதமாக பொருத்த முடிகிறது. இதனால், பயணிகள் அமரும் கேபினுக்குள் தாராள இடவசதியுடன் வடிவமைக்க முடியும் என்பதால் கார் நிறுவனங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
உற்பத்தி செலவீனம்:
ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினை விட 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினின் உற்பத்தி செலவீனம் குறைவாக இருக்கிறது. கார் நிறுவனத்துக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் இதில் பயன் இருக்கிறது. காரின் அடக்க விலை குறைவதால் வாடிக்கையாளர்களும் குறைந்த விலையில் காரை வாங்க முடிகிறது.
4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின்:
ஸ்மூத் ரைடிங்:
3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினை விட 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மிகவும் ஸ்மூத்தாகவும், பவர் வெளிப்படுத்தும் திறன் அதிகமாகவும் இருக்கும். எரிபொருளை கிரகிப்பது, எரிப்பது, ஆற்றலாக மாற்றுவது ஆகியவற்றில் 4 சிலிண்டர்கள் எஞ்சின்கள் மிகவும் துரிதமாக செயல்படும்.
4 சிலிண்டர்கள் எஞ்சின் மற்றும் 3 சிலிண்டர்கள் எஞ்சினில் பிஸ்டன்கள் கிராங்சாப்ட்டில் பொருத்தப்பட்டிருப்பதில் வித்தியாசம் இருக்கிறது. இதனால், சுழற்சி வேகத்தில் 3 சிலிண்டர்கள் மெதுவாக செயல்படும் என்பதால் எரிபொருளை உள்ளிழுப்பது, எரிப்பது, ஆற்றலாக மாற்றுவது ஆகியவற்றில் தாமதம் ஏற்படும். இதனால், 3 சிலிண்டர் எஞ்சினில் சப்தம் சிறிது கூடுதல் இருக்கும்.
ஆற்றல் வெளிப்பாடு:
தற்போது 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுடன் வரும் கார்கள் 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலான புதிய தொழில்நுட்பங்களுடன் வருகின்றன. அதாவது, ஒரு சிலிண்டருக்கு 4 வால்வுகள்(2 இன்டேக் வால்வுகள், 2 எக்ஸாஸ்ட் வால்வுகள்) பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால், எஞ்சின் தங்கு தடையின்றி எரிபொருளை எரித்து ஆற்றலை வெளிப்படுத்தும். அதாவது, டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட எஞ்சின் போன்று அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
தேர்வு:
கேபினுக்குள் சத்தமில்லாமல் ஸ்மூத்தாக செல்லும் கார் வேண்டும் என்பவர்கள் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட காரும், அதிக மைலேஜ் வேண்டும் என்பவர்களுக்கு 3 சிலிண்டர் கொண்ட காரும் சிறந்த தேர்வாக இருக்கும்.

No comments:

Post a Comment