ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் !.........
“தகுதி உள்ளவர்களுக்கு இந்த செய்தி சேரவேண்டும் என்கிற அரிய நோக்கில், ஜீவ நாடி பற்றிய அருமையான கட்டுரையை தனது இணையத்தில் பகிர்ந்துகொண்ட திரு. ரமணன் அவர்களுக்கு ,மனமார்ந்த நன்றி. ஜீவ நாடி பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இவர்களைத் தொடர்பு கொள்ளவும். தவறான நோக்கத்தில் தயவு செய்து யாரும் பயன்படுத்த வேண்டாம்...... நமது வாசகர்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இத்தகவல் இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது... “
ஜீவ நாடி என்றால் என்ன?
ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.
தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர்.
ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.
இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.
பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்.
இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம்,சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.
சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி : தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.
மற்றொரு வழி : பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.
முக்கியமான விஷயங்கள்:
அது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.
பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.
சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
சித்தர்கள் திருவடிக்கே சரணம்
===================================================================
சென்னை அருகில் - காகபுஜண்டர் ஜீவநாடி
ஜீவநாடியில் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குவது காகபுஜண்டர் ஜீவநாடி. இந்த நாடி மூலம் நாடி பார்த்துப் பலன்கள் கூறி வருபவர் ரமணி குருஜி. ‘சக்தி அருட்கூடம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இவரது ஆசிரமம் சென்னை தாம்பரம் அருகில் உள்ள சேலையூரில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
நாடி பார்க்கும் முறை
இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. விரல் ரேகை எடுக்கப்படுவதில்லை. பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. அனைவரையும் உட்கார வைத்துப் பொதுவில் நாடி படிக்கப்படுகின்றது. பலன்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து பாடலாகவே படிக்கப்படுகின்றது. தினமும்,மாலை நேரத்தில், ஏழு மணிக்கு மேல், இறை வழிபாட்டை முடித்து விட்டுப் பலன் கூறத் தொடங்குகிறார் ரமணி குருஜி.
ஸ்ரீ ரமணி குருஜி
குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ரமணி குருஜி இரவு ஏழு மணி அளவில் தமது இடத்தில் அமர்கின்றார். பின்னர் சோழிகளை எடுத்துக் குலுக்கிப் போடுகின்றார். அதில் விழுந்திருக்கும் சோழிகளின் தன்மைக்கேற்ப ஓலைக்கட்டிலிருந்து குறிப்பிட்ட ஓலையைத் தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் சுவடியைப் படிக்க ஆரம்பிக்கின்றார். அங்குள்ள ஒலிபெருக்கியில் அவர் அவற்றைப் பாடல்களாகப் பாடுகின்றார். அவை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. ஒலிபெருக்கியில் அவர் பாடல்களைப் பாடப் பாடத் தேவையானவர்கள் ஒலிப்பதிவுக் கருவி மூலம் அவற்றைப் பதிவு செய்து கொள்கின்றனர். ஏனெனில் அவர் பாடலுக்கு விளக்கம் எதுவும் கூறுவதில்லை. பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர் சந்தேகம் கேட்டால் ஆலோசனை வழங்குகிறார். பாடல்கள் அனைத்தும் பழங்கால வடிவில் விருத்தம் போன்று உள்ளது. நாடி பார்க்க வந்திருக்கும் நபர்களின் பெயர் போன்ற விவரங்கள் மற்ற நாடிகளைப் போல வெளிப்படையாக வருவதில்லை. ஆனால் தனிநபரின் பெயர்களும், வாழ்க்கைச் நிகழ்வுகளும், பாடல் வடிவில், யாருமே எளிதில் கேட்டு உடனே புரிந்து கொள்ளாத வண்ணம் பாடல்களாக வருகின்றன. குறிப்பாக உணர்த்தப்பெறும் இவற்றை நன்கு கவனித்துப் பொருள் கொள்ள வேண்டியது தேவையாகின்றது.
நாடி பார்க்க வந்து தம்மிடம் குறைகளைக் கூறுபவர்களுக்கு ரமணி குருஜி சோழிகளைக் குலுக்கிப் போட்டு பலன்கள் மற்றும் பரிகாரங்களைக் கூறிவருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் இருக்கிறார்.
சித்தர்களில் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர் காகபுஜண்டர். இவரது பெருமையினை ‘ஞான வாசிட்டம்’என்னும் நூல் மூலம் அறியலாம். பெரிய காகத்தினைப் போன்ற உருவம் கொண்டவராதலால் அவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் எனக்கூறுகின்றனர்.
ஒருமுறை, ரமணி குருஜி, 1962-ம் ஆண்டில் கங்கைக்கு நீராடச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மகானால் ஆசிர்வதிக்கப்பெற்ற அவர், அம்மகானிடம் குரு உபதேசம் பெற்றிருக்கிறார். மேலும் அவரிடம் சோதிடக் கலையையும் பயின்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் அம்மகான் தம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளை ரமணியிடம் தந்து ஆசிர்வதித்து, மக்கள் சேவை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படியே மக்களுக்குப் பல வழிகளிலும் இதுகாறும் உதவி வருகிறார் ரமணி. ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல வெளிநாட்டைச் சேர்ந்த அன்பர்களும் இவரது ஆன்மீகப் பணிக்கு உறுதுணையாக உள்ளனர்.
காகபுஜண்டருக்கென்று தனியாகக் கோயில் எழுப்பியுள்ள அவர் ஆண்டு தோறும், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அதன் அருள் விழாவினைச் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்.
ரமணி இதனை ஒரு சேவையாகத் தான் செய்து வருகின்றார். யாரிடமும் பணம் எதுவும் அவர் வாங்குவதில்லை. மேலும் அவர் சுவடியைப் படித்துப் பலன் கூறும் இடம் ஓர் ஆலயம் போல் விளங்குவதால்,அங்கு செல்பவர்கள் மிகவும் சுத்தமாகச் செல்ல வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment