திருமண பொருத்ததில் கவனிக்கப்பட வேண்டியவை
நட்சத்திர ரீதியாக 10 பொருத்தங்கள் பார்ப்பது எவ்வளவு அவசியமோ, அது போல ஜாதக ரீதியாகவும் கிரகங்களின் ஆதிக்கத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் பார்ப்பதும் மிகவும் முக்கியம். தம்பதியர் மன ஒற்றுமையுடன் வாழ்வார்களா, அனுசரித்துச் செல்வார்களா, புத்திரபாக்கியம் சிறப்பாக இருக்குமா, உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை இருக்குமா? என பலவிதமான பொருத்தங்களையும் ஜாதக ரீதியாக ஆராய்ந்து திருமணம் செய்து வைப்பது மிகவும் நல்லது. அதனைப் பற்றிய பல்வேறு முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
செவ்வாய் தோஷம்
குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஸ்தானங்களான 2,4,7,8,12 ல் செவ்வாய் அமைவது செவ்வாய் தோஷமாகும். ரத்த காரகன், காம காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய் ஒரு உஷ்ண கிரகமாவார். செவ்வாய் பெண்கள் விஷயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியவராகவும், களத்திர காரகனாகவும் விளங்குகிறார்.
மேற்கூறிய இடங்களில் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், அவருக்கு அதே மாதிரியான ஜாதகப் பலன் அமையப் பெற்றவரை திருமணம் செய்து வைப்பது தான் நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும், கட்டில் சுகவாழ்வு திருப்தியானதாகவும் இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து வைத்தால் உடலுறவில் திருப்தியற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அது மட்டுமின்றி செவ்வாயின் திசை அல்லது புக்தி காலங்களில் வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு, எதிர்பாராத விபத்து, பிரிவு, வாழ்க்கைத் துணையையே இழக்கக்கூடிய அவலநிலை உண்டாகும்.
செவ்வாய் 7,8 ல் அமையப் பெறுவது கடுமையான தோஷமாகும். 2,4,12 ல் இருந்தால் தோஷத்தின் தன்மை சற்று குறையும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சிறிது தோஷம் இருந்து அவருக்கு செவ்வாய் திசையே வராது என்றால் திருமணம் செய்யலாம். 2,4,12 ல் செவ்வாய் அமைந்து பரிவர்த்தனை அல்லது குரு பார்வை இருந்து செவ்வாய் திசை வராமல் இருந்தாலும் பார்க்கலாம். செவ்வாய், மேஷம், விருச்சிகம், கடகம், மகரத்தில் அமைந்தால் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் நமக்கு திருமணமே ஆகாதோ என பயப்பட தேவையே இல்லை. ஏனென்றால் நாட்டில் 40% பேருக்கு செவ்வாய் தோஷம் இருக்கத்தான் செய்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்துக்குரிய ஜாதகங்களை தேர்வு செய்து திருமணம் செய்வதும், உரிய பரிகாரங்களை மேற்கொள்வதும் நற்பலனை உண்டாக்கும்.
சர்ப தோஷம்
சர்ப கிரகங்களான ராகு கேது 7,8 ல் அமைகின்ற போதும் 7ம் அதிபதி ராகு கேது சேர்க்கைப் பெற்றோ, சாரம் பெற்றோ அமைகின்ற போதும், ராகு கேது பிடிக்குள் அனைத்து பிரதான கிரகங்களும் அமைகின்ற போதும் கடுமையான சர்ப தோஷம் உண்டாகிறது. அது போல திருமண வயதில் ராக கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெற்றாலும் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெற தாமத நிலை ஏற்படுகிறது. இப்படி சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு சர்ப தோஷம் உள்ளவரனாக பார்த்து திருமணம் செய்து வைத்து நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். இல்லை என்றால் வாழ்க்கை கீரியும், பாம்பும் போல போராட்டகரமானதாக இருக்கும்.
குறிப்பாக ராகு, கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் 7ம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரனும் அமையப் பெற்றால் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெறாத தாமத நிலையை ஏற்படுத்தும். உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தடைகள் விலகும்.
மாங்கல்ய தோஷம்
நம் நாட்டில் சுமங்கலி பெண்களுக்கு தனி மரியாதை உண்டு. ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 8ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், 8ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நீண்ட மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, கணவரின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஆணுக்கு ஆயுள் பாவம் பலமிழந்திருந்தால் மாங்கல்ய பலம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது.
அதுவே பெண் ஜாதகத்தில் 8ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாகும். இதனால் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழக்கக் கூடிய அவலநிலை ஏற்படும். இப்படி மாங்கல்ய பாவம் பலமிழந்த பெண்ணிற்கு நல்ல ஆயுள் பலம் கொண்ட வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் தீர்க்க சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியம் உண்டாகும். எனவே, பொருத்தம் பார்க்கும் போது 8ம் வீட்டையும் இருவரின் ஜாதக ரீதியாக ஆராய்ந்து பார்ப்பது உத்தமம்.
களத்திர தோஷம்
களத்திர ஸ்தானமான 7ம் இடமும் களத்திர காரகன் சுக்கிரனும் பாவகிரகங்களால் சூழப்பட்டிருந்தால் களத்திர தோஷம் உண்டாகிறது. இதுபோல தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு இதே போல கிரக அமைப்புகள் உள்ள வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் மணவாழ்க்கையானது போராட்டமின்றி அமையும்.
புத்திர தோஷம்
ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் இடமும், புத்திர காரகன் குருவும் பலமாக இருப்பது நல்லது. அப்படி புத்திர ஸ்தானம் பலமாக உள்ளவராகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஒருவரின் பலத்தாலேயே சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். அப்படி பலமிழந்த ஜாதகருக்கு பலமிழந்தவராக பார்த்து மணம் முடித்தால் புத்திர பாக்கியம் என்பது எட்டாகனியாக ஆகிவிடும்.
தசா சாந்தி
ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும் போது ஆண், பெண் இருவருக்கும் நடக்கக்கூடிய தசா புக்திகளையும் ஆராய வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் அப்படி ஒரே தசா புக்தி நடந்தால் திருமணம் செய்யக்கூடாது. குறைந்தபட்சம் 3 வருட இடைவெளி இருப்பது நல்லது. அப்பொழுது தான் மணவாழ்வில் ஒற்றுமை இருக்கும்.
வயசுப் பொருத்தம்
வயசு பொருத்தம் என பார்க்கின்ற போது கண்டிப்பாக ஆணைவிட பெண்ணுக்கு 3 வயது முதல் 6 வயது வரை குறைவாக இருப்பது நல்லது. ஆணைவிட பெண்ணுக்கு அதிக வயது இருக்கக்கூடாது. இப்படி வயசு பொருத்தம் பார்ப்பது சரியாக இருக்கும். மேலும் ஆணுக்குப் பெண்ணை விட 10, 15 வயது அதிகமாக இருப்பதும் நல்லதல்ல. அதிக வயதுள்ள ஆண்மகனாக இருந்தால் இல்வாழ்வில் இன்பம் இருக்காது.
சகுனப் பொருத்தம்
ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும் போதும் வரன் பார்க்கச் செல்கின்ற போது சகுனம் சிறப்பாக இருப்பது நல்லது. சகுனம் சரியில்லையென்றாலும் திருமணம் செய்யக்கூடாது.
மனப்பொருத்தம்
இத்தனைப் பொருத்தங்கள் பார்ப்பதெல்லாம் பெரியதில்லை. மிக முக்கியப் பொருத்தமான மனப்பொருத்தம் இருப்பது மிகவும் நல்லது. இருவருக்கும் மனரீதியாக பிடித்திருந்தால்தான் வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete