jaga flash news

Thursday, 14 May 2015

"க்ரொனாலாஜிகள் ஏஜ்" "பயாலஜிகல் ஏஜ்"

இளமையாக ஜொலிக்கலாம் வாங்க!
நாம் பிறந்ததிலிருந்து வருடங்கள் போகப்போக நமக்கு வயதும் கூடுகிறது. மருத்துவ இயலில் இதை "க்ரொனாலாஜிகள் ஏஜ்" (Chronological age) என்கிறோம்.
ஒவ்வொரு நாளும் நம் வெளித்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் போல, நம் உடலுக்குள்ளிருக்கும் நாளமில்லா சுரப்பிகள், ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம், மூளை, இதயம் போன்ற உறுப்புகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இவை இயங்கும் விதத்தை வைத்து, இவற்றுக்கும் வயதை நிர்ணயிக்கிறார்கள். இந்த வயதை "பயாலஜிகல் ஏஜ்" (Biological age) என்கிறோம். உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம், இந்த "பயாலஜிகல் ஏஜை" கட்டுக்குள் வைத்து, நம்மை இளமையாக ஜொலிக்க வைக்க முடியும். சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான் இதை சாதிக்கும் எளிய வழி!
சரியான வாழ்க்கை முறை என்பது...
நமது தாத்தா, பாட்டி வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையைக் கூட சொல்லலாம். நேரத்துக்கு சத்தான உணவு, நல்ல பழக்கவழக்கங்கள், அரைத்தல், ஆட்டுதல், துவைத்தல், நடத்தல் என அன்றாடப் பணிகள் மூலம் கிடைத்த உடற்பயிற்சி, எல்லாவற்றுக்கும் மேலாக நல்லதையே நினைக்கும் மன ஒழுக்கம், எதற்கும் பதறாமல் நிதானமாக யோசித்து முடிவெடுப்பது என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இன்றைய வாழ்க்கை முறை அப்படியா இருக்கிறது? நேரம் கெட்ட நேரத்தில் உணவு, நிதானமாக எதுவும் செய்ய முடியாத அவசரம், குறைந்துவிட்ட உடல் உழைப்பு, எதற்கும் டென்ஷன், கோபம், பகைமை என உடல், மனம் இரண்டுமே கெட்டுப் போய்க்கிடக்கிறதே!
நமது எளிமையான வாழ்க்கை முறையை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டாலும், வெளிநாட்டினர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு "ஏஜ் மேனேஜ்மென்ட்" (Age Management) கருத்தரங்கில், "கட்டுப்படுத்தப்பட்ட கலோரி அளவில் உணவு உட்கொண்டு வந்தால் நீண்ட நாள் வாழலாம்" என்று ஒரு மருத்துவர் ஆய்வு முடிவுகளை சமர்ப்பித்தார்.
இது ஒன்றும் புதிய கருத்தல்ல! நம் யோகிகளும், முனிவர்களும் முன்பே சொல்லிவிட்டு போனதுதான் அதன்படியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். மேலும் ஜீரண மண்டலம் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு "லங்கணம் பரம ஒளஷதம்" என்பது நமது சான்றோர் மொழியாயிற்றே!
சரி, முதுமையைத் தள்ளிப்போட வேறென்ன வழிகள் இருக்கின்றன?
எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சிலவற்றை ஒழுங்காக பின்பற்றினாலே போதும், 80 சதவீதம் முதுமையை தள்ளிப் போடலாம்.
இதில் முக்கியமானது, மன அழுத்த மேலாண்மை. இந்த காலத்தில் சிறிய குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்குமே "ஸ்ட்ரெஸ்" இருக்கிறது. வாழ்க்கையில் சுவாரஸ்யம் வேண்டுமானால், ஆரோக்கியமான ஸ்ட்ரெஸ் அவசியம்தான். ஆனால் அதை கட்டுக்குள் வைத்திருக்கத் தெரியவில்லை என்றால் சிக்கல்தான். உப்புப் பெறாத விஷயத்துக்கும் பதற்றம் அடைவது, நடந்து முடிந்ததையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பது என்றிருக்கும் பெண்கள் ஏராளம். இப்படி கவலைப்படுவதால் ஒரு பலனும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
பிடிக்காத ஒரு சினிமாவை திரும்பப் பார்க்க விரும்பாத நீங்கள், பிடிக்காத சம்பவங்களை மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் மனதில் திரையிட்டுப் பார்த்து கஷ்டப்பட வேண்டும்? வேண்டாத பழைய விஷயங்களை திரும்பத் திரும்ப அசை போடுவது மன அழுத்தத்தைத்தான் அதிகப்படுத்தும்.
இது போன்ற மன அழுத்தம் காரணமாக, நம் மனதிலும், உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ஸ்டீராய்டு ஹார்மோன்கள் எனப்படும் அட்ரீனலின், நார் அட்ரீனலின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால், அதிகமான வியர்வை, படபடப்பு, நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைக்கு அதிக ரத்தம் பாய்வதால், தலைவலிப்பது போலிருக்கும், தசைகள் இறுகும். மூச்சு வேகமாக வெளிப்படும், இதன் விளைவாக உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு முதுமைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.
இவற்றிலிருந்து ரிலாக்ஸ் ஆக என்ன வழிமுறைகள்
யோகப் பயிற்சிகளும், தியானமும் முக்கியமான வழிகள். ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த வேலைகளைப் பொறுத்து தனித்தனி பயிற்சி முறைகள் இருக்கின்றன. வேலை பிஸியில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து யோகப் பயிற்சி செய்ய முடியாமல் போனாலும், யாருமே ஐந்து நிமிடங்கள் செலவழித்து "மூச்சுப் பயிற்சி" மூலம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்!
நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, கவனத்தை சில நொடிகள் மூச்சில் வைத்து, ஆழ்ந்து கவனிக்க வேண்டும். பின்னர் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, பின் நிதானமாக வெளியே விடவேண்டும் இது தான் மூச்சுப் பயிற்சி. இதை சில நிமிடங்கள் செய்தாலே, உடனடி ரிலாக்ஸ் கிடைக்கும்.
இந்தப் பயிற்சிகளால் சமச்சீரான ஹார்மோன் சுரப்பு, சீரான ரத்த ஓட்டம், எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவம், எப்போதும் புத்துணர்ச்சி, எதிலும் ஈடுபாடு, தன்னம்பிக்கை என பல்வேறு சுகங்களை நீங்கள் அனுபவிக்கலாம். அப்போது முதுமை தன்னால் தள்ளிப் போடப்படுகிறது.
"முதுமையைத் தள்ளிப் போடுவதில் உணவுப் பழக்கத்தின் பங்கு பற்றி சொல்லுங்களேன்...."
இதில் உணவுப் பழக்கம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. நாம் எப்படியும் வாழ்நாள் முழுவதும் தினமும் 3 நேரம் சாப்பிட போகிறோம். அதை ஒழுங்காக சாப்பிட்டாலே இளமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இன்றைய தலைமுறையினர், குளிர்பானங்கள், பீட்ஸா, பாஸ்ட் ஃபுட், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற கலோரிகள் அதிகம் உள்ள உணவுப் பொருள்களை அதிகமாக உண்பதால், சிறுவயதிலேயே உடல் எடை கூடி, சிரமப்படுகிறார்கள். இதனால், ஹார்மோன்கள் சமச்சீராக இல்லாமல், இளம் வயதிலேயே சிறுமிகள் பருவமடைதல் போன்றவையும் அரங்கேறுகின்றன. பள்ளியிலேயே டயட்டை ஒரு பாடமாக வைத்தால் இனிவரும் தலைமுறைக்கு உணவு பற்றிய சரியான விழிப்புணர்வு கிடைக்கும்.
எப்படிப்பட்ட உணவுப் பழக்கம் இருக்க வேண்டும்?
"ஓல்டு கிரான்னீஸ் டயட்" எனப்படும் நம் பாட்டி காலத்து உணவுதான் சிறந்தது. ஆனால் இப்போது எல்லோருமே நோய் வந்தபின்தான், உணவுப் பற்றி சிந்திக்கிறோம். இது தவறு நாம் உண்ணும் உணவு சமச்சீராக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின் சுகமாகத் தூக்கம் வருகிறது என்றால், நீங்கள் சாப்பிட்ட உணவு, "தவறான டயட்" என்று அர்த்தம்!
நமது உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்றும்தான் முக்கியமானவை. இதில் மாவுச்சத்து 40%, புரதம் 20%, கொழுப்பு 40% என்று இருப்பதைத்தான் சமச்சீரான உணவு என்கிறோம். இப்படி சாப்பிட்டால்தான் ஹார்மோன் சுரப்பு இயல்பாக இருக்கும். புரதம் மிக அதிகமாக உள்ள உணவோ, கொழுப்பு, அறவே இல்லாத உணவோ உடலுக்கு நல்லதல்ல, ஏனெனில் மேற்கூறிய மூன்றுமே நமக்கு அவசியம்.
மாவுச்சத்தை எடுத்துக் கொண்டால், அதில் சுத்திகரிக்கப்பட்டது, சுத்திகரிக்கப்படாதது என்று இரண்டு வகை உண்டு. இதில் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து, உடலுக்கு நல்லதல்ல. பாசுமதி அரிசி, பாலீஷ் செய்யப்பட்ட கோதுமை, பீட்ஸா, மைதாமாவு, பாஸ்தா, நூடுல்ஸ், உருளை போன்ற கிழங்கு வகைகள் ஆகியவற்றில் இந்த வகை மாவுச்சத்து உள்ளது. இவற்றை அதிகமாக உண்ணும்போது, ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. அதனால் எடையும் கண்டபடி கூடுகிறது.
சுத்திகரிக்கப்படாத மாவுச்சத்து, கைகுத்தல் அரிசியிலும், தீட்டப்படாத கோதுமையிலும், பழங்களிலும், காய்கறிகளிலும் அதிகமாக உள்ளது. இவைதான் உடலுக்கு நல்லது.
முட்டையின் வெள்ளைக்கரு, சோயா, பனீர், பருப்பு மற்றும் பயறு வகைகள், சிக்கன், மீன் ஆகியவற்றில் புரதம் அதிகமாக உள்ளது.
கொழுப்புச் சத்திலும் இரண்டு வகை உள்ளது. அவை ஸாச்சுரேட்டெட், அன்ஸாச்சுரேட்டெட், இதில் தேங்காய் எண்ணெய், நெய், டால்டா போன்ற ஸாச்சுரேட்டெட் வகை எண்ணெய்களை தவிர்ப்பது நல்லது. அன்ஸாச்சுரேட்டெட் வகையான நல்லெண்ணெய் உபயோகிக்கலாம்.
முக்கியமான இந்த மூன்று சத்துக்களுடன், வைட்டமின் சத்துக்களும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக அருந்தவேண்டும்.
பொதுவான சில டயட் டிப்ஸ்...?"
நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடவேண்டும். நான்கு மணி நேரத்துக்கு மேல் வயிற்றைக் காயப்போடக்கூடாது? குறிப்பாக பெண்கள் தங்கள் கணவர் வந்து சாப்பிட்ட பின் தான் சாப்பிடுவோம் என்று காத்திருப்பது ரொம்ப தவறு. நல்ல பசி வரும்வரை விட்டு விட்டால், நாம் அளவு தெரியாமல் நிறைய சாப்பிட்டு விடுவோம். மிஞ்சிவிட்டதே என்று எல்லாவற்றையும் தன் வயிற்றில் போட்டுக் கொள்வதும் தவறு.
உணவுக்கு அடுத்ததாக கவனிக்க வேண்டியது என்ன?
உடற்பயிற்சி! தினமும் 45 நிமிடங்கள் அனைவரும் "பிரிஸ்க் வாக்கிங்" போக வேண்டும். வயதாக ஆக ஹார்மோன்கள் சுரப்பு குறையும். முறையான உணவு, யோகாசனம், தியானம், உடற்பயிற்சி போன்றவை ஹார்மோன்களை எப்போதும் பாலன்ஸ்டாக வைக்கும். தினமும் 20 நிமிடம் யோகா செய்தால், "மெலட்டனின்" என்கிற வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும். உள் உறுப்புகளுக்கு ரத்தம் சீராகப் பாயும், உடலும் மனதும் ஒருமுகப்படுத்தப்படும். இதை தவிர 6-லிருந்து 8 மணி நேர தூக்கமும் அவசியம்.
வெளித்தோற்றத்தில் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும்?
நம் மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுக்குத் திருமணமாகி, ஒரு குழந்தை பிறந்து விட்டால், உடனே எல்லாமே முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். அந்த மனப்போக்கை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போதுகூட, சுத்தமான புடவையை அழகாகக் கட்டிக்கொண்டு, முடி திருத்தி, சின்னதாகப் பொட்டிட்டு, "பளிச்" சிரிப்புடன் வளைய வரலாம். அப்போதுதான் அவர்களுக்கே ஒரு தன்னம்பிக்கை வரும். அந்த தன்னம்பிக்கையே அவர்களுக்கு இளமைப் பொலிவைக் கொடுக்கும்.
அதோடு வயது 70 ஆனாலும் 20 வயதுக்கான சிந்தனைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் தூய்மையானதாக இருக்க வேண்டும் எண்ணத்தில் இளமை இருந்தால், நமக்கு வயதானதே தெரியாது. தினம் தினம் அன்றைய கால மாறுதலுக்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். "மாற்றம் ஒன்றே நிலையானது" என்பதை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.
இவை எல்லாவற்றையும் ஒருமுகமாக ஒருங்கிணைத்து நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்திப் பாருங்கள். அப்புறம் நீங்கள், "என்றும் பதினாறு"தான்!

No comments:

Post a Comment