jaga flash news

Monday, 2 November 2015

குரு பக்தி....

குரு பக்தி....
அது ஒரு சிற்றூர். அங்கு மிகவும் அனுபவம் பெற்ற பல வித்தைகளும் வேதங்களும் அறிந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அனைவரும் அவரை குரு என்றே அழைத்தனர். அவரிடம் பத்து சிறுவர்கள் சீடர்களாக சேவை செய்து வித்தைகளையும் வேதங்களையும் கற்றுக் கொள்ள விரும்பினர். அதன்படி குருவும் அவர்களை ஏற்றுக் கொண்டு வழி நடத்திச் சென்றார்.
அந்த பத்து பேரில் ஒருவன் மட்டும் மிகவும் புத்திசாலியாக இருந்தான். அவன் பெயர் ராமன்.
ராமன் மற்ற சீடர்களை விடவும் அதிக குரு பக்தியுடயவனாக இருந்தான். குருவின் எல்லா கோரிக்கைகளையும் ஏற்று நடந்தான். அவனை குருவிற்கு மிகவும் பிடித்தது.
இவ்வாறாக ஒரு வருடம் அருமையாகக் கழிந்தது. குரு தான் அறிந்தவற்றில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே சீடர்களுக்கு கற்றுக் கொடுத்திருந்தார்.
அடுத்த நிலைக்கு சீடர்களை அழைத்துச் செல்லும் முன் குரு தன் சீடர்களைச் சோதிக்க விரும்பினார்.அதில் தேறியவர்களை மட்டுமே அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என முடிவெடுத்தார். அதன்படி அனைத்து சீடர்களையும் அழைத்துக் கொண்டு மலையடிவாரத்திற்குச் சென்றார்.
வில் வித்தை, ஈட்டி எறிதல் மற்றும் பலவற்றையும் குரு சொன்ன படியே வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். இறுதியாக குரு அனைவரையும் ஒரு செங்குத்தான மரத்தில் ஏறும்படி சொன்னார்.
அனைவரும் அவ்வாறே செய்தனர். சிறிது தூரம் ஏறியபின் குரு அனைவரின் கையையும் விட்டுவிடச் சொன்னார். நீங்கள் யாரும் கீழே விழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியும் அனைவரும் கையை விட மறுத்து விட்டனர். ஆனால் ராமனுக்கு , " இன்று முதல் குரு தான் உன் தந்தை , உன் குருவின் மீது முழு நம்பிக்கை வைத்து சேவை செய்தால் தான் உன்னால் முழுமையாக அனைத்து கலைகளையும் கற்றுணர முடியும்" என்று தன் தந்தை செய்த உபதேசம் நினைவுக்கு வந்தது.
எனவே குருவின் ஆணைக்கிணங்கி ராமன் தன் இரு கைகளையும் விட்டுவிட்டான்.
ஆனால் அங்கு நிகழ்ந்த அதிசயம் அனைத்து சீடர்களையும் அதிர்ச்சியுறச் செய்தது. கையை விட்ட ராமன் விழாமல் அந்தரத்தில் அப்படியே நின்றான். இறுதியில் அனைவரும் இறங்கி வந்தனர்.
குரு ராமனை மிகவும் பாராட்டினார். ஆனால் ராமனோ கையை விட்ட பின் தான் விழாமல் இருந்ததற்கு
காரணம் கேட்டான். அதற்கு குரு ராமா நீ என் மீது வைத்த முழு நம்பிக்கை தான் என்று கூறி , அடுத்த நிலைக்கு தகுதி பெற்றவன் ராமன் மட்டுமே என்று கூறி மற்றவர்களை அனுப்பி வைத்து விட்டார்.-----"ஆசார்யனைப் பெற்ற புருஷன் தான் ஞானத்தை அடைகிறான்"

No comments:

Post a Comment