jaga flash news

Wednesday, 15 November 2023

நேர்காணல்! சிறுகதை!



நேர்காணல்!
சிறுகதை!

'அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க' அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது. எதிரே வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவர். மேஜை மேல் குறிப்பெடுக்க பேப்பர் பேனா. குப்புசாமியைப் பற்றிய பைல் மூன்று பிரதிகள் மூவரிடமும். குப்புசாமி 'வணக்கம்' சொல்லி அமர்ந்தார்.

பொருளாளர், குப்புசாமி பைலைப் பார்த்துப் படித்தார். 'பெயர் குப்புசாமி, வயது 40, 3 வருடம் கவுன்சிலர், கட்சியில் சேர்ந்து 10 வருடம் ஆகிறது. தலைவரைக் கைது செய்தபோது போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் ஆறு மாசம். குடும்பம், மனைவி, இரண்டு மகன்கள், பத்தாவது, எட்டாவது, சொந்தக் கிராமம் மணல்குடி.. அதை விட்டு சென்னை வந்து 15 வருடம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் மளிகைக் கடைப் பையனாக. இப்போது சிறிய மளிகைக் கடை வைத்திருக்கிறார் உள்ளூரில். மனைவி பார்த்துக்கொள்கிறார். இவர் முழு நேர கட்சித் தொண்டு' நிமிர்ந்தார் பொருளாளர்.

'சொல்லுங்க குப்புசாமி இந்தப் பாராளுமன்ற தேர்தலில் நிற்கிறதுக்கு உங்களுக்கு எப்படி தோணுச்சு.'

'மூணு வருடம் கவுன்சிலராக இருந்த அனுபவம் இருக்கு அண்ணே. மக்கள் பிரச்னைகளை பற்றி நேரடி அனுபவம் இருக்கு. இதோடு பாராளுமன்றம் போனா கட்சி சார்பாக மக்கள் குறைகளை எடுத்துச் சொல்லலாம். அது மத்திய சர்க்கார் மூலமாக மாநில சர்க்கார் உதவியாக வந்து சேரலாம்.'

'ஏன் அதை அடுத்த சட்டசபை எலக்சன்லே நின்னு சாதிக்க முடியாதா'.

'அதுக்கு இன்னுமும் ரெண்டு வருஷம் இருக்குண்ணே. அதுக்குள்ள வர்ற இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாமேன்னு.'

செயலாளர் ஆரம்பித்தார்.

'கவுன்சில் கூட்டத்தில் நீ ஒரு தடவை கூட பேசின மாதிரி தெரியல. பாராளுமன்றத்தில் போய் என்னலே பேசி சாதிக்கப் போறே.'

'இது நம்ம கட்சி கவுன்சில் கூட்டம். இங்கே பேசுறதுக்கு என்ன இருக்குண்ணே . எல்லாத்துக்கும் 'ஆமாம்' சொல்ல வேண்டியதுதானே. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியா இருக்கும். அங்கே நிச்சயம் பேசுவேன்.'

அடுத்து தலைவர் 'சரி, என்ன பேசுவே உன் ஏரியாவில் இருக்கிற பிரச்னைகளை எடுத்து பேசு. பார்க்கலாம்.'

குப்புசாமி 'மதிப்பிற்குரிய அங்கத்தினர்களே, எனது பாராளுமன்றத் தொகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமி. அங்கே விவசாயம் ஒரு வருஷம் விளைவதும் அடுத்த ரெண்டு வருஷம் விளையாமல் போவதுமாக மக்கள் பசி பட்டினியோடு வாடுகிறார்கள். குடும்பம் குடும்பமாக அடுத்த மாவட்டத்திற்குக் குடிபெயர்கிறார்கள். இப்படியே விட்டுவிட்டால் இந்த தொகுதியே மக்கள் இல்லாத தொகுதியாக மாறிவிடலாம்'.

பொருளாளர் குறுக்கிட்டு, ' உமக்கு ஓட்டு போட ஆளே இருக்க மாட்டங்கங்கிறீரு' என்று சொல்லி கிண்டல் செய்தார்.

அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 'இப்படிப்பட்ட விதத்தில் இருக்கும் இந்த எங்கள் தொகுதியில் ஒன்றிரெண்டு பெரிய தொழிற்சாலைகள் அமைத்தால் மக்களின் வறுமைப் பணி தீரும். வாழ்க்கைக்கு வழி திறக்கும். தொழிற்சாலைகள் நன்கு வளர்ந்து நாட்டிற்கும் நலம் பயக்கும்.'

'என்ன தொழிற்சாலை வைக்கணும்வே' சீண்டினார் செயலாளர்.

'அருகில் கடல் இருப்பதால் உப்புத் தொழிற்சாலை வைக்கலாம். மற்றும் நூல் தொழிற்சாலை வைக்கலாம்' என்று தொடர்ந்தார் குப்புசாமி. .

'போதும் நிறுத்துவே' என்று தடுத்தார் தலைவர்.

'சரி, இப்ப எவ்வளவு டெபாசிட் கட்டுவே கட்சிக்கு'

'ரெண்டு லட்சம் கொண்டு வந்து இருக்கேன் அண்ணே'

'என்ன சொல்லுதே, அவனவன் ரெண்டு கோடி, மூணு கோடின்னு கொண்டு வந்திருக்கான், இடத்தைக் காலி பண்ணுவே, நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு’ என்றபடி கூல் ட்ரிங்க்ஸை உறிஞ்ச ஆரம்பித்தார் தலைவர்

சிறு கதை:ஆக்ஸிடென்ட்...!



ஆக்ஸிடென்ட்...!
ஆக்ஸிடென்ட்...!                                                  

‘ஹலோ... நாங்க ஜி.ஹெச்.லேர்ந்து பேசறோம்ங்க... ரோடுல அடிபட்ட ஒருத்தரை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்காங்க... அவர்கிட்ட இந்த போன் இருந்துச்சு... கடைசியா இந்த  நம்பர்லதான் அவர் பேசியிருக்கார். அதான் உங்களைக் கூப்பிட்டோம்... நீங்க யாரு... இவர் பேர் என்ன...‘ 

ஆடிப்போனாள் விஜயா. மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் ரிடையர் ஆனார் ராமன், அவளது மாமனார்.  கடைவீதிக்குப் போய்விட்டு வருகிறேன் என்று போயிருந்தார். இப்போது திடீரென்று இப்படி.

எதிர்முனையில், ‘ஹலோ ஹலோ’ என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள்.  சட்டென சுயநினைவுக்கு வந்தவள், ‘ஸாரிங்க... பதட்டத்துல பேச முடியலை... அவர் பேரு ராமன்... எந்த ஆஸ்பிடல்னு சொன்னீங்க...’ என்றாள்.

‘ஜி ஹெச் மா... கலெக்டர் ஆபீஸ் பக்கத்துலே இருக்கில்லே... அதான்.. சீக்கிரம் வந்துடுங்கம்மா... ’ என்றுவிட்டு போனை வைத்துவிட்டார் பேசியவர்.

‘ச்ச்சே... இவரை யார் வெளியே போய் அலைலயச் சொன்னது... சாப்பிட்டு அக்கடா படுத்துக் கிடக்க வேண்டாமா... இந்த லட்சணத்துல மத்தியானத்துக்கு சாம்பார் வைக்க காய் ஏதும் வேணுமாம்மா போன் வேற... நானும் வெண்டைக்காய் இருந்தா கால்கிலோ வாங்கிட்டு வாங்கா மாம்மானு சொன்னேன்... இப்போ இப்படி... எங்கே அடிபட்டாரோ... காரோ, பஸ்ஸோ, ஆட்டோவோ... கடவுளே...’  புலம்பியபடி அவசர அவசரமாய் ரவிக்கு போனைப் போட்டு விஷயத்தைச் சொன்னாள்.

‘விஜி... நான் ஒரு கான்பாரன்ஸ்ல இருக்கேன். ஆன்லைன்ல மீட்டிங் போயிட்டிருக்கு. இடையில கட் பண்ணிட்டு வரமுடியாது. கொஞ்ச நேரம் ஆகும். அப்படியே கிளம்பினாலும்  அங்கே போய்ச் சேர டைம் ஆகும். அதுக்குள்ளே நீ ஒரு ஆட்டோ பிடிச்சி அங்கே போயிடு. முதலுதவி சிகிச்சைக் கொடுத்துட்டாங்கன்னா அப்புறமா நாம பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு  மாத்திக்கலாம். நீ உடனே கிளம்பு. நான் வந்து சேர்ந்துடறேன்...’ என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டான் ரவி.

‘ச்சே... இப்போ, தேவை இல்லாத செலவு. இவர் பேசாம ரிடையர் ஆனோமா, ஈஸி சேர்ல உட்கார்ந்து கிடந்தோமானு இல்லாம... கடவுளே...’ புலம்பியவாறே போட்டது போட்டபடி கிடக்க, புடவையை மாற்றிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டாள். முன்னெச்சரிக்கையாக கையில் இருந்த பணத்தை எடுத்துக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு போய்ச் சேர இருபது நிமிடங்கள் ஆகிவிட்டன. வழியில் டிராஃபிக் ஜாம் வேறு. பதற்றத்துடன் முன்னால் இருந்த கவுண்டரில் விசாரித்தாள்.

‘பேர் என்ன சொன்னீங்க...’

‘ராமன்...‘

ரிஜிஸ்டரைப் பார்த்துவிட்டு, ’அப்படி யாரும் இல்லையே...  என்றார்கள்.

‘எனக்கு போன் வந்துச்சுங்க... ஒரு ஜென்ட்ஸ்தான் பேசினாங்க... பேர் கேட்கலை... ஆக்ஸிடென்ட்னு சொன்னங்க’ என்றாள்.

‘ஓ... அப்போ எமெர்ஜென்சி வார்டுல போயி பாருங்க... ’ என்று பதில் வந்தது.

எமெர்ஜென்சி வார்டை நோக்கி ஓட, எதிர்பட்ட நர்ஸிடம் கேட்டாள் விஜயா.

‘ஆமாம்மா...  ஆக்ஸிடென்ட் ஆனவர்தானே. டிரெஸ்சிங் பண்ணிட்டிருக்காங்க. இப்போ நீங்க உள்ளே போகக்கூடாது. தோ டாக்டர் இப்போ வந்துடுவாரு. அவர்கிட்டே பேசிக்கங்க...’  

அந்த நர்ஸ் சொல்லிவிட்டு நகர, அதேசமயம் போனில் பேசிக்கொண்டே வெளியே வந்தார் ஒருவர். பார்க்க டாக்டர் மாதிரிதான் தெரிந்தது.

‘அப்படியா... எந்த ஸ்டேஷன்... ஓ... ஆமா... ஆட்டோல அடிப்பட்டுட்டார்னு ஒருத்தரைக் கொண்டு வந்து அட்மிட் பண்ணினாங்க. இப்போத்தான் டிரெஸ்சிங் பண்ணி இன்ஜெக்ஷன் கொடுத்துட்டு வெளியே வர்றேன். ஆமா... நான் டாக்டர் ராஜமாணிக்கம்... சரி ஸார்... சொல்லிடறேன்...’  அவர் பேசிக்கொண்டே போய்விட்டார்.

இவள் யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அடுத்த நிமிடம் அவளது மொபைல் அலறியது.

‘ஹலோ...யாருங்க...’

‘அம்மா நாங்க ஜி.ஹெச்.லேர்ந்து பேசறோம்...’

குறுக்கிட்டு, ‘நான் இங்கதாங்க இருக்கேன்... நீங்க யார் பேசறீங்க...’

‘அம்மா நான் டாக்டர்மா. என் பேரு ராஜமாணிக்கம்...’

சட்டென நினைவு வந்தது. பேசிக்கொண்டே போனாரே அதே டாக்டர்.

‘என்னங்க ஆச்சு அவருக்கு...’  என்று இவள் குறுக்கே கேட்டாள். அப்படியே எழுந்து அவரது அறை எங்கே இருக்கும் என்று தேடிக்கொண்டே போனைக் காதில் வைத்தபடியே நடந்தாள்.

‘என்னைக் கொஞ்சம் பேச விடுங்கம்மா.. இப்போதான் பி டூ ஸ்டேஷன்லேர்ந்து போன் வந்தது. இந்த போன் ராமன்ங்கறவரோடதாம். அவர்  ரோடுல போயிட்டிருக்கும் போது யாரோ அவரோட மொபைலை பிடுங்கிகிட்டு ஒடியிருக்காங்க. அப்படி ஓடினவர் ஆட்டோல அடிபட்டு விழுந்திருக்கார். அவரை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க... மொபைலை பறிகொடுத்தவர் போலீஸ்ல புகார் கொடுத்திருக்கார். அவங்க மொபைலை டிராக் பண்ணறதுக்காக போன் பண்ணியிருக்காங்க... நர்ஸ் எடுத்து என்கிட்டே கொடுத்துட்டாங்க... கடைசி நம்பர் உங்க நம்பரா பதிவாகியிருக்கவும் உங்களுக்கு தகவல் சொல்லலாம்னு உங்களைக் கூப்பிட்டேன்...’ 

அதற்குள் யாரோ ஒருவர் அவளது தோளைத் தொட பதறிப்போய் திரும்பினால், ரவி பரபரப்புடன் நின்றான். பின்னாலேயே ஒரு போலீஸ்காரரும் ராமனும் வந்து சேர மாமனாரைப் பார்த்த விஜயாவுக்கு அழுகை வெடித்தது.




சிறு கதை:கெட்டவர் நால்வர் யார் தெரியுமா?


கெட்டவர் நால்வர் யார் தெரியுமா?
ஒரு குருகுலத்தில் கற்று தேர்ந்த இளைஞன் விடை பெற்று திரும்பும்போது குருவிடம் "எனக்கு கல்வியுடன் பல வித்தைகளையும் புத்திமதிகளையும் சொல்லி என்னை மனிதனாக்கினீர்கள். ஆனால், இவ்வுலகில் முழு மனிதனாக நான் வாழ என் மனதில் பதியுமாறு தகுந்த அறிவுரையை தயை கூர்ந்து சொல்லுங்கள்" என வணங்கி கேட்டான்.

"நீ விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மறக்காமல் நடந்துகொள். நல்லவனாக வாழ்வாய்" என்றார் குரு.

குரு சொன்னதை கேட்டு அந்த இளைஞன் குழம்பினான்.

"குருவே சற்று விளக்கமாக சொல்லுங்கள் அதன்படி நடந்து கொள்கிறேன்" என்றான்.

குரு விளக்கினார்.

"திருமால் வாமன வடிவெடுத்து மூன்று அடி நிலம் கேட்டபோது எதை வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, ஒரு அடிக்கு பூமியையும் மறு அடிக்கு விண்ணுல கத்தையும் மூன்றாவது அடிக்கு தன்னையே கொடுத்தும் கெட்டுப்போனவன்தான் மகாபலி. இவனை நீ மறக்கக் கூடாது. வாக்கு கொடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். பிறர் என்ன கேட்பார்கள் என்பதை அறியாமலேயே வாக்கு தருவது தவறு. எனவே ஆராய்ந்து, அறிந்து வாக்கு கொடு.

அடுத்து, விடாது கெட்டவன் பற்றி சொல்கிறேன். பாண்டவர்களின் தூதுவனாக கண்ணன் துரியோதனிடம் சென்று ஐந்து காணி நிலமாவது தருமாறு கேட்டான். துரியோதனன் ஒரு அடி மண்கூட தர மாட்டேன் என சொல்லிவிட்டான். தனது சகோதரருக்கு ஒரு சிறு இடத்தைக்கூட விட்டுத் தராமல் போனதால் துரியோதனனும் அவனது சுற்றத்தாரும் மாண்டனர். எனவே, இந்த மண்ணில் வாழ்பவர்களுடன் விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்துகொள். அது உன் வாழ்க்கையை வளமாக்கும்.


   தொட்டுக் கெட்டவன் யார் தெரியுமா? பத்மாசுரன் என்று அரக்கன்  ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் செய்து தன் கை யார் தலைமீது படுகிறதோ அவர்கள் உடனே பஸ்பம் ஆகிவிட வேண்டும் என்ற வரத்தை பெற்று இஷ்டப்பட்டவர்களை எல்லாம் கொன்றான். ஒருமுறை ஈஸ்வரனின் தலையிலேயே கை வைக்க முயன்றான். ஈஸ்வரன் தப்பி ஓடுவதுபோல் நடித்து எல்லா ஆயுதங்களையும் இழந்துவிட்டவர் போல் பாவனை காட்டினார். அவனது அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். விஷ்ணுவும் அவரும் இணைந்து ஒரு தந்திரம் செய்தனர். விஷ்ணு அழகிய மோகினி ரூபம் எடுத்து பத்மாசுரனிடம் சென்றார். அவரது அழகில் மயங்கிய அசுரனிடம் நீ என்னைபோல் நடனமாட வேண்டும். அவ்வாறு செய்தால் உன்னை மணந்துகொள்கிறேன் என்றார். பத்மாசுரனும் மோகினி போலவே நடனம் ஆடினான். ஒரு கட்டத்தில் மோகினி தன் தலைமீது கை வைக்கவே, மோகத்தில் பத்மாசுரனும்  அவ்வாறே தன் தலைமீது கைவைத்தான். அந்த இடத்திலேயே பஸ்மமும் ஆனான். இது போல பெண்களின் மீது மோகம் கொண்டு உன் தலையில் நீயே மண்ணை போட்டு கெட்டுப் போகாதே. 

       தொடாமல்  கெட்டவன் பற்றிக் கேள். சீதையின் மீது ஆசைகொண்டு அவளை  சிறை எடுத்துச் சென்றான் ராவணன். பிற பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொட்டால் ராவணனுக்கு அழிவு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாகவே அவள் மீது தன் கைவிரல் நகம் கூடப்படாமல் தொடாமலேயே அவளை தன் இச்சைக்கு வற்புறுத்தினான். இதனால் ராமனின் பாணத்திற்கு பலியானான் ராவணன். இவனைப் போல் பிறன்மனை நோக்காமல் உன் மனைவியுடன் ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்திடு” என்றார் குரு. 

     இளைஞனின் மனம் தெளிவு பெற்றது. குரு சொன்னபடியே விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மனதில் நிறுத்தி நல்லவனாக வாழ முடிவு செய்தான்.




சிறு கதை:சகோதர தர்மம்!


சகோதர தர்மம்!



சவுங்க மகரிஷியும், விகித மகரிஷியும் உடன் பிறந்தவர்கள். தர்ம சாஸ்திரத்தைத் தொகுத்து வழங்கிய இவர்கள், துளியும் தர்மம் பிசகாமல் தனித்தனியே குடில் அமைத்து வாழ்ந்தனர். ஒருமுறை தமையனைப் பார்க்க அவர் இருப்பிடம் சென்றார் விகிதர். அவர் வெளியே சென்றிருந்தார். வெகுநேரம் காத்திருந்த தம்பிக்கு, பசி வயிற்றைச் சுருட்டியது.

பர்ணசாலையைச் சுற்றி உலாவிய அவர் கண்களில், பழுத்துத் தொங்கிய மாங்கனிகள் ‘பறி பறி’ என்றன. கவண்கல் எறிந்தார். ஒரு பழம் விழ, சுவைத்து உண்டார். அந்நேரம் பார்த்து சங்க மகரிஷி வந்தார். வந்தவர், “இந்தக் கனி ஏது? தானாக விழுந்ததா?” என்று கேட்டார்.

“இல்லை. நானே பறித்தேன்” என்று பதிலுரைத் தார் இளவல். “சொந்தக்காரரின் அனுமதியின்றி பழம் கொய்வது தவறென்பதை நீ அறியாயா?” என்றவர்,

“விகிதா! அரசனிடம் சென்று உன் தவறை எடுத்துரைத்து தண்டனை பெற்று வருவதே தர்மம். குற்றத்துக்கு உரிய தண்டனையை அனுபவித்துவிட்டால் ஒருவன் புனிதனாகிறான். நரக வாசலைக் கூட அவன் மிதிக்க வேண்டாம்” என்றார். அரசவைக்குச் சென்ற தம்பி, வேந்தரிடம் தன் செயலைக் கூறி உரிய தண்டனை வழங்குமாறு வேண்டினார். மன்னர் புன்னகையுடன், “தாங்கள் பசியில் பழம் பறித்து சாப்பிட்டது எப்படிப் பிழையாகும்? அதுவும் சகோதரர் தோட்டத்துக் கனியைத்தானே உண்டிருக்கிறீர்கள்! எனினும், தவறென்று தாங்கள் எண்ணினால் அதை நான் மன்னிக்கிறேன்” என்றார்.

“கொற்றவனே! தர்ம சாஸ்திரப்படிதான் தாங்கள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனது தூய்மையைத் தக்க வைக்க, தண்டனை அளியுங்கள்” என கம்பீரமாக மொழிந்தார் விகிதர். வேறு வழியில்லாமல் அரசர், “பழம் பறிக்க உதவிய இரு கரங்களையும் உடலிலிருந்து நீக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

ரத்தம் சொட்டச் சொட்ட மூளியான கைகளுடன் வந்த இளவலைக் கண்டதும் சங்க முனிவர் கண்களில் நீர் பெருகிறது. ஓடிவந்து தம்பியை ஆலிங்கனம் செய்து கொண்டவர் பிறகு மனம் தேறி, “தம்பி! மதிய நேர வழிபாட்டுக்கு நதிக்குச் செல்வோமா? நீ மந்திரங்களை மட்டும் சொல்லு. உனக்காக நான் நீர் விடுகிறேன்” என்றார்.

இருவரும் நீராடினர். மெய்மறந்து விகிதர் மந்திரத்தைச் சொல்லி மொண்ணைக் கையால் நீரை இறைக்க முற்படும்போது, கைகள் முழுமை பெற்றதை அறிந்து மெய்சிலிர்த்தார்.

“அண்ணா! எனக்காக, தங்கள் புண்ணியத்தைத் தத்தம் செய்து தரும தேவதையைப் பிரார்த்தித்தீர்களா?” என்று தம்பி உருக, “குற்றம் கண்டபோது, கண்டிக்க மட்டுமே செய்வது உடன் பிறந்தவனின் கடமையல்ல! உன் ஊனமுற்ற கைகள் முழுமையடைய நான் முயற்சியும் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்” என்றார்.

“அப்படியானால், தாங்களே தண்டனை கொடுத்து நிவர்த்தியும் அளித்திருக்கலாமே” என விகிதர் வினவ, “குற்றவாளியைத் தண்டிக்கும் கொற்றவனை, பாவம் பற்றாது. சட்டத்தை நான் கையில் எடுத்துக் கொண்டால், அது உன்னைத் துன்புறுத்துவதாகும்” என விளக்கினார் சங்க மகரிஷி. அவர்கள் வாழ்ந்தது கிருதயுகம்!




சிறு கதை:பழிகாரி


பழிகாரி!
பழிகாரி!


வைகறைப்பொழுதினில் வெட்ட வெளிச்சத்தினை உணர்ந்த யாழ் அரைகுறைத் தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள். யாரோ அவள் கையைப் பிடித்து இழுத்து தேவலோகத்தில் கொண்டுபோய் விடுவது போன்ற மெய்யுணர்வினால் நெகிழ்ச்சியில் கண் திறக்க முடியாமல், தூக்கத்தையும் கலைக்க விரும்பாமல் உளறிக்கொண்டிருந்தாள். உறக்கத்திலேயே எழுந்து சென்றாள். தேவலோகத்திற்கு வழி தெரியாமல் அரவமன்றி நடந்துசென்றவளை, ஒரு ஆடல் அழகி கையைப்பிடித்து வேகமாக அழைத்துச் சென்று இந்திர சபையில் அமர வைத்தாள்.

“இதென்ன சபை...? நான் இதுவரை பார்க்காத இடம்; பழகாத மனிதர்கள்; உணராத உணர்ச்சிகள்; மிகவும் பிரம்மிக்கத்தக்க அழகிகள்! நான் எப்படி இங்கு வந்தேன்?” என்று வியந்து சபையில் சங்கமித்தவாறு இருந்தாள். இந்திர சபையில் விழா தொடங்கியது. மன்னனை மகிழ்விக்க பதினெட்டு வாத்தியங்களும் முழங்கின. அதனை, ஆச்சர்யத்துடன் கண்டு இதன் பெயரென்ன என்று ஒருவரிடம் கேட்டாள் யாஷ். அவரோ ‘நாராயண.. நாராயண...’ என்று சிரித்தவாறு அதன் பெயரை முற்றிலும் வினவ, யாழ் வியந்துபோனாள். தேவலோகக் கன்னிகளில் புகழ்பெற்ற வாகினியும், நர்த்தினியும் ஆடலைத் தொடங்கினர். சரியான போட்டி அரங்கேறியது. இருவருக்கும் மத்தியஸ்தம் பண்ண முடியாமல் தவித்த நடுவர்களுக்கு நாரதர் ஒரு வழி கூறினார். “இருவரும் கையில் ஒரு பூச்செண்டினை ஏந்தி ஆடுங்கள். அதை கீழே விழாமல் எவர் இறுதிவரை ஆடுகிறாறோ, அவரே சிறந்த ஆடலரசி” என்று கூறினார்.

“இதென்ன பெரிய ஆட்டம் நம்ம ஊரு ஆட்டத்துக்கு மேல” என்று நினைத்தபடியே அதிர்வின்றி கண்திறக்க முயன்றாள் யாழி. முடியவில்லை... மறுபடியும் தொடர்ந்தாள்... விழா நிகழ்வு தொடங்கியது. இருவரின் பூங்கொத்திலும் ராஜா தேளும், ராணித் தேளும் வைக்கப்பட்டு இருந்தன.

நர்த்தினி ராணித் தேளுடன் ஆட்டத்தை ரம்மியமாக ஆடினாள். வாயாடி வாகினி ராஜாத் தேளின் கொட்டில் கைகள் அரிதாரம் பூசியதைவிட மூன்று பங்கு சிவந்துபோக, பூங்கொத்தினை பொத்தென்று கீழே போட்டாள். இரண்டு நாட்களாகத் தொடர்ந்த ஆட்டத்தில் தோற்ற வாகினியை பூலோகத்தில் போய் வாழுமாறு இந்திரன் கட்டளையிட்டுச் செல்ல, அவரை பின்தொடர்ந்து கூந்தல் பூக்கள் தெறிக்க ஓடிய வாகினி “மன்னரே... சிறு வேண்டுகோள்!” என்று கூறி நின்றாள்.

       “நடன மங்கையே! கூறு, நும் வேண்டுதலைக் கேட்போம்.”

   “இல்லை மன்னா, எமக்கு பூலோக வாழ்வு வேண்டவே வேண்டாம். அதற்கு நான் நரகம் செல்வேன் மன்னா! பொய் பேசும் மாந்தர்களும், புறங்கூறும் மாந்தர்களும் நிறைந்த அவ்வுலகு எனக்கு வேண்டாம்” என்றாள் வாகினி.

       “பூலோகம் செல்வதற்கு நீ மனிதப்பிறவியாக செல்லப்போவது இல்லை. அகிலத்தையும் இயக்கும் இயக்கியாவாய்” என்று மீறமுடியாத கட்டளையை விடுத்து சென்றான் இந்திரன். நர்த்தினியும், மேனகையும் நமட்டுச் சிரிப்புடன் சென்றனர். ஆனாலும், தன் சகோதரியின் பிரிவை எண்ணி உள்ளூர வருந்தினாள் நர்த்தினி.  ராஜாத் தேளின் விஷம் தலைக்கேறிய  பாரத்தில் சற்று கண்ணயர்ந்தாள் வாகினி. இதெல்லாம் பார்த்திருந்த யாழ், வாகினியை துயில் எழுப்பி பூலோகத்திற்கு வழிசொல்லிவிட்டு, தனது வீட்டிற்குச் சென்றாள்.

இதுவரை நனவிலி மனதில் அகக்கண் கனவில் வாகினியுடன் பயணித்த யாழ், தானும் துயில் எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டாள். யாழிற்கு  அதிகாலை கனவு மனவோட்டமாக  சென்றது. யார் இந்த வாகினி? இவளின் கனவில் ஏன் வந்தாள்? சரி ஏதோ புத்தக பிரம்மையாக இருக்கும் என்று எண்ணி தோழிகளுடன் உணவகம் சென்றாள்.

       மையிருட்டுக் கூடியது. நிலவு வானின் உச்சத்தை தொட்டது. யாழின் கனவு தொடர்ந்தது. பழையனூரில் தாசிக்குலத்தில் ஆண்களின் பரிகாச ஆசைகளை தீர்க்கும் தாசியின் மகள் லெட்சுமியாகவும், சிறந்த தேவநாட்டியக்காரியாகவும் மறுஜென்மமெடுத்தாள் வாகினி. யாழின் கண்கள் இறுகின. கண் திறக்க முற்பட்டு தோற்று, கதையில் ஆர்வமானாள் யாழ்.

     தாசியின் மகளானாலும், கோவலனைக் கண்டு தாசி வேடம் கலைத்து பத்தினியாக நிலைத்த மாதவிபோல, லெட்சுமி தன் தாயின் பேச்சை மீறி (கோயில்) பட்டனை விரும்பினாள். அவனோ, ‘இவள் என்னதான் இருந்தாலும் கணிகைதானே! இவள் நமக்கு வேண்டாம்’ என்று அவளை விட்டு நீங்கி நெடுந்தூரம் சென்றான். .

      லெட்சுமி மகாலட்சுமி போல் அணிகலன் அணிந்து  அவனின் கால்தடம் பார்த்து, அவன் சென்ற வழி அறிந்து, அவனிடம் சென்றாள். இவளைக் கண்ட பட்டன்,

     “ஆஹா  இவள் நம்மை விட மாட்டாள்போல.  இவளை இந்தக் கள்ளிக்காட்டிலே சமாதி செய்து நகையை கழற்றிகொண்டு, நம் நாடு செல்ல  வேண்டியதான்” என்று திட்டமிட்டான்.

     அதன்படி, அவளும் “அத்தான் உங்கள், மடியில் சற்று நேரம் உறங்கிகொள்ளவா? தூக்கம் வருகிறது” என்றாள். அவனும் கண்ணசைக்க, அவன் மடியில் லெட்சுமி.  ஆற்று மணலை மடிதலையணை போல் பரப்பி அவளின் தலையை வைத்தான். அருகில் கிடந்த கருங்கல்லை அவளின் தலையில் தொப்பென்று போட்டான்.

     பட்டனின் முகத்தில் குருதி தெளித்தது. உயிர் போகாமல் துடிதுடித்த நிலையில், “இந்தக்  கள்ளிச்செடியும், கடவுளுமே இக்கொலைக்கு  சாட்சி.  அம்மை அப்பனும் சாட்சி” என்று சாபமிட்டு கண்மூடினாள் லெட்சுமி. 

        அயர்ந்து போன பூசாரி பட்டன் கிணற்றடியில் இளைப்பாறி தண்ணீரை இறைந்தான். அம்மை அப்பனின் மாற்று உருவ கருநாகம் தீண்டி இறந்து விட்டான்.


இவர்களின் கணக்கை ஏற்ற சித்திரகுப்தனின் கட்டளைக்கு இணங்க  சோழ அரசனின் மகளாகப் பிறந்தாள் லெட்சுமி.

        பிறந்ததுமே, “தாய்ப்பால் ஒரே நாற்றமடிக்குது. வெளியே போய் ஆடு, கோழியை அடித்து சாப்பிடுவோம்” என்று கூறி ஓடினாளாம் முன்பிறவியில் லெட்சுமியாகிய நீலி.”

       சோழ வம்ச மரபினர்  இது குழந்தையல்ல… அசுரப்பிறவி என்று அஞ்சி நீலியை காட்டில் விட்டனர். கள்ளிச் செடிகள் தழைத்த காட்டில், பட்டனின் மறுபிறவியை அறிந்து அவனின் வரவிற்காக காத்திருந்தாள் நீலி. கொலைக்கு சாட்சியான கள்ளியை  ஒடித்து ஆண் பிள்ளையாக ஒக்கலில் அமர்த்தினாள். ஊராரை அழைத்து,  “ஐயா இந்த செடிதான் என் கணவன்.  இது அவனது குழந்தை" என்றாள். அதுவும் அப்பா என்று ஓடியது. “என்னை இப்பொழுது சிறு சண்டைக்காக விலகிச் செல்ல பார்க்கிறான்” என்று கூறினாள்.

       மறுபிறவி எடுத்த செட்டி “இவள் யார் என்றே எனக்கு தெரியாது ஐயா! இவள் என்னை கொல்ல பார்க்கிறாள் காப்பாற்றுங்கள்” என்றான்.  ஊரார் அவர்களை சந்தேகித்து செட்டியின் பாதுகாப்பை மனதில் கொண்டு அவனை கல்மண்டபத்தில் தங்க வைத்தனர்.

       நீலி கள்ளிப்பிள்ளையை தாலாட்டும் ஓசையில் ஊரே உறங்கியது. உறங்கும் செட்டியின் நடுநெஞ்சை கள்ளிச் செடியைக் கொண்டு பிளந்தாள் நீலி. பின்னர் ஊராரிடம் செட்டியின் தாய்போல் வேடமிட்டு சென்றாள்

       “ஐயா என் மகன் வணிகச்செட்டி உங்களை நம்பிதானே வந்தான். இப்படி அவன் உயிரை எடுத்தீயளே  என்று கதறினாள்.

       வணிகச் செட்டியிடம் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாத நாற்பது ஊரார் அக்னிகுண்டத்தில் இறங்கி உயிரை மாய்த்தனர். பின்னர் நாற்பது ஊர் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு கள்ளிச்செடியில் மோரையும், பாலையும் தயார் செய்தாள்.

         “பாலோ பால்... மோரோ மோர்... இந்த பாலை உங்க குழந்தை குடிச்சுதுன்னா வேற எந்த பாலையும் குடிக்காது என்று பாலையும், மோரையும் கொடுத்து பழி தீர்த்த கையுடன் ஈசனிடம் வரம்  கேட்கச் சென்றாள். ஈசனும் அவருக்கு அருள்பாலித்தார். “நினைத்த இடமெல்லாம் நீலி தேவதையாக கண்கண்ட இடமெல்லாம் காட்சி தந்திடுவாய்!” என்று வரமளித்தார்.

   யாரோ முகத்தில் தலையணையை எறிவது போன்ற உந்துதலில்  முழித்தாள் யாழ். “ஐயோ மணி 9.30 ஆகிடுச்சா” என்று அம்மாவின் அர்ச்சனையில் வேகமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.  செல்லும் வழியில் இசக்கி தேவி ஆலயத்தை கண்டு ஒரு கும்பிடு போட்டாள். அங்குள்ள பெண் யாழை அழைத்து “நீ என்னை தேடி இப்போதுதான் வந்தாய். ஆனால், நான் உன்னிடம் தினமும் வருகிறேன்” என்று கூறினாள். “கனவுக் கதையை நம்மிடம் கூறியது அம்பாளா!” என்று கூறி யாழ் திரும்பியதும் அப்பெண் மறைந்தாள். அதிலிருந்து இயக்கியம்மனின் (இசக்கி அம்மன்) குழந்தையாக தன்னை எண்ணி அவளை வலம் வருகிறாள் யாழ்.




ஆன்மிகக் கதை: அரங்கன் அருந்திய நழுவமுது!


ஆன்மிகக் கதை: அரங்கன் அருந்திய நழுவமுது!

ஸ்ரீ ரங்கம் அருகே, 'அகண்ட காவேரி' என்ற ஊர் உண்டு. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ஒரு விஷ்ணு பக்தை அங்கே வாழ்ந்துவந்தாள். ஸ்ரீ ரங்கநாதர் மீது அபார பிரேமைகொண்டு இரவும், பகலும் ஸ்ரீ ரங்கனையே ஆராதிப்பவள். ஆனால், பரம ஏழை. தனது ஒரே மைந்தனுக்கு, 'அரங்கன்' என்றே பெயர் சூட்டினாள். மாடு மேய்ப்பது அவனது தொழில். அரங்கன் காலையிலேயே மாடு கன்றுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்வான்.

பகல் வேளையில் அவனுக்கு நழுவமுது (கஞ்சி) எடுத்துச் செல்வாள் அன்னை. கூப்பிடு தூரத்தில் மாடுகள் மேய, ஒரு பூவரச மரத்தடியில் அமர்ந்துகொண்டு குரல் கொடுப்பாள். “இதோ வந்துட்டேன்" என்று பதிலளித்தபடி வருவான் அரங்கன். சருகு போன்ற இலையைப் பரப்பி அதில் நழுவமுதை வார்ப்பாள் தாய். கலையம் காலியானதும் சருகில் சொட்டிய கஞ்சியை எடுத்து உறிஞ்சுவான் மகன். பிறகு, சற்றே இளைப்பாறி விட்டு மீண்டும் மேய்ச்சலுக்குப் புறப்படுவான் அரங்கன்.

ஒருநாள், "அரங்கா... அரங்கா" என்ற தாயின் குரல் கேட்டு, பதில் குரல் வரவில்லை. தாயார் கண்ணீர் விட்டாள். மகனுக்கு என்ன நேர்ந்ததோ என்று அஞ்சினாள். சிறிது நேரத்தில் அரங்கன் வந்தான். “ஏன் இத்தனை நேரம்? என்னை இப்படித் தவிக்க விட்டு விட்டாயே” என்று கேட்டாள் தாய்.

"ரொம்ப தூரம் ஒரு கன்று போய்விட்டது. அதைப் பிடித்து வர ஓடினேன்" என்றபடி நழுவமுதைக் குடித்தான். "இன்று நேரமாகி விட்டது" என்றபடி இளைப்பாறாமல் ஒடி விட்டான். அன்னையார் சற்றே களைப்பாறி  புறப்படும் சமயம் மீண்டும் ரங்கன் வந்தான். என்னடா மறுபடி வந்திருக்கிறாய்? இந்தப் பக்கம் கன்று ஒன்றும் வரவில்லையே?" என்றாள் அன்னை.

"நான் அமுது அருந்த வந்திருக்கிறேன். இன்றைக்கு நேரமாகி விட்டது. ஒரு கன்று புதரில் சிக்கிக்கொண்டது. அதை மீட்டுத் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன். ஏன் எழுந்து விட்டாய்?" என்று கலவரமாகக் கேட்டான் மகன்.

"இப்போதுதானே நழுவமுது குடித்தாய்? திரும்ப வந்து கேட்கிறாயே! எப்படி வரும்?” என்று அம்மையார் கூற, "இதென்ன ஆச்சரியம்?  நான் பசியோடிருக்கிறேன். விளையாடாதீர்கள்" என தர்க்கித்தான் அரங்கன்.

"அப்போது உன்னைப் போலவே வந்து நழுவமுது உண்டவன் யார்?" தாயார் கலக்கமுற்றார். மறுநாள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இருவரும் தீர்மானித்தனர்.

மறுதினம்,  அம்மையார் அழைத்தபோது மகன் வராமல் ஒரு மரத்தடியில் ஒளிந்திருக்க, முந்தைய தினம் அமுதுண்ட ரங்கன் குதி போட்டுக்கொண்டு. வந்தான். தாயிடம் போலிச் சிறுவன் அமுதுண்பதைக் கண்டு பதைபதைத்து ஒடி வந்தான் உண்மையான மகன். "நான்தானம்மா நிஜம். இவன் பொய்யன்" என்றவனிடம், "யாரடா நீ?" என்று அதட்டினான் ஏற்கெனவே வந்தவன்.

அதோடு, "நான்தான் உண்மையான அரங்கன். நீ யார்?" என்று பதிலுக்கு அவன் அதட்ட, அம்மையார் கலக்கமுற்றார். யார் தம்முடைய மகன் என்று அவருக்குத் தெரியவில்லை! "ஸ்ரீ ரங்கநாதா! இது என்ன விளையாட்டு?" என்று அரற்றினாள்.


"விளையாடத்தான் வந்தேன் அம்மா" என்று கஞ்சியை நக்கிவிட்டுக் காட்சி கொடுத்தார் பெருமாள்.

"அம்மையே! உன் பக்தி கண்டு நெகிழ்ந்தோம். உம் கரத்தால் அமுதுண்ண விரும்பி வந்தோம். குறைவற இருவரும் வாழ்ந்து, முடிவில் வைகுண்ட பதவி அடைவீர்கள்" என அருளி மறைந்தார்.

இருவரும் பரவசமடைந்தனர். இது ஊருக்கெல்லாம் தெரிந்தது. ராமானுஜர் இதைக் கேட்டு மெய்சிலிர்த்து அந்த அம்மையார் வாழ்ந்த இடத்துக்கு ஜீயர்புரம் என்று பெயர் சூட்டினார். அங்கேயே ஒரு மண்டபமும் கட்ட ஏற்பாடு செய்தார்.

பங்குனி பிரம்மோத்ஸவத்தில் ஒருநாள் அரங்க நாதர் அங்கே எழுந்தருளுவார். மண்டபத்தில் அம்மையார் திருப்பந்தல் சேவை தரும்படியும், அன்று நழுவமுது நிவேதனமும் ஏற்பாடு செய்தார்.




சிறுகதை - கலிகாலம்!


சிறுகதை - கலிகாலம்!
அழகான, கம்பீரமான, கனுக்காலில் தேவமணி எனும் சுழிகளையுடைய பஞ்சகல்யாணி குதிரைகளோடு நின்றிருந்தான் குதிரைக்காரன் உருவில் கலி புருஷன். அக்குதிரைகளின் கம்பீரத்திலும், அழகிலும் மயங்கிய பீமன், அர்ச்சுனன், நகுல, சகாதேவர்கள் அக்குதிரைகளின் விலை என்னவென்று கேட்டனர்.

“இந்தப் புரவிகள் விற்பதற்கல்ல; எனது வினாக்களுக்குச் சரியான விடையளிக்க வேண்டும். அதே நேரம் பதில் தவறாயிருந்தால் நான் போடும் வட்டங்கள், கூண்டாகி உங்களைச் சிறைபிடித்து விடும்” என்றான் கலிபுருஷன்.

“எங்களுக்குச் சம்மதம்” என்று அவர்கள் கூற, அவர்களைச் சுற்றி கலிபுருஷன் ஜபித்த மந்திர வட்டம் எழுந்தது. கலிபுருஷனின் வினாக்களுக்கு விடை தெரியாததால் நான்கு சகோதரர்களும் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதைக் கேள்வியுற்று விரைந்து வந்தார் தருமர்.

“நான் சரியாக பதிலைச் சொன்னால் இவர்களை விடுவிப்பாயா?” என்று தருமர் கேட்க, கலிபுருஷன் ஒப்புக்கொண்டு முதல் வினாவை எழுப்பினான்.

“நான் வரும் வழியில் ஒரு பெரிய கிணறு. அதன் விளிம்பில் பொற்காசொன்று தொங்கியது. அந்தக் காசைப் பற்றியபடி மிகப் பெரிய தொங்கும் மலை! அப்படியிருந்தும் காசு கிணற்றுக்குள் விழாதது என்ன விந்தை?”

“பாபமே மலை. புண்ணியமே பொற்காசு. சிறிய புண்ணியமே நரகக் கிணற்றுக்குள் விழாமல் காக்கிறது” என தருமர் கூற, பீமனிருந்த கூண்டு மறைந்தது.

“நடுவில் ஒன்றும், சுற்றி நான்குமாக ஐந்து கிணறுகளைக் கண்டேன். சுற்றியிருந்த வாவிகளில் ஒன்றில் நீர் வற்றினாலும் நடுவிலிருந்த கிணற்றிலிருந்து நீர் வரத்து நடக்கிறது. ஆனால், சுற்றியிருக்கும் நான்கு வாவிகளும் தளும்பத் தளும்ப நீர் நிரம்பியிருந்தும் மத்தியிலிருந்த கிணறு வற்றியபோது நீர் போகவில்லை. இதன் தாத்பர்யம் என்ன?” என்றான் கலிபுருஷன்.

“நடுவிலுள்ளது தந்தை. சுற்றியிருப்பது பிள்ளைகள். புதல்வர்கள் நலிந்தால் தகப்பன் கைதூக்கி விடுவான். ஆனால் கலிகாலத்தில் பிதா முதுமையில் நலிவுற்றால் புத்திரர்கள் பாராமுகமாயிருப்பர் என்பதே இதன் பொருள்” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் இருந்த கூண்டு மறைந்தது!


“ஓரிடத்தில் பசு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைப் பார்த்தேன். இப்படியும் நடக்குமா?” என்றான் கலிபுருஷன்.

“பிள்ளைகள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவர்கள் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் இருப்பார்கள் என்பதையே இது உணர்த்துகிறது” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் விடுபட்டான்.

“காட்டு வழியே வந்தேன். ஒரு விசித்திரமான விலங்கு, கேட்கச் சகிக்காத கேவலமான வார்த்தைகளைப் பேசியபடி தன் மலத்துவாரம் வழியே உணவு உட்கொண்டது. இது என்ன விபரீதம்?”

கண்களில் நீர் பெருக, “கலிபுருஷனே! உன்  ஆட்சி நடக்கும் கலியுகத்தில் வெட்கம், மானம், ரோஷம் இதெல்லாம் அரிதாகக் காணப்படும். வசதியாக வாழ்வது முக்கியமே தவிர, பொருள்வரும் விதம் பிரதானமாகாது. மழை பொய்க்கும். கொடிய நோய்கள் பரவும். பூலோகம் காடாயிருக்கும். ஆசிரம தர்மங்கள் சீர்குலையும். பண்பில்லாமல் பேசுவதே சொற்சாமர்த்தியமாகக் கருதப்படும். குலப் பெருமை காலில் மிதிபடும்” என்று தருமர் கூற, சகாதேவன் விடுபட்டான்.

கலிபுருஷன் தருமரை வணங்கி, “தங்களது ஆட்சி நடைபெறும்வரை பூலோகம் வரமாட்டேன்” என்று கூறி மாயப்புரவிகளோடு மறைந்தான்.




சிறு கதை:பவித்ரம் மிக்க பாதுகைகள்...


பவித்ரம் மிக்க பாதுகைகள்!



ஒரு சமயம் பகவான் மஹாவிஷ்ணு தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாத ரக்ஷைகளைத் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று ஓய்வெடுக்க எண்ணி அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்து, "பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் நாங்கள் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறோம். நீங்கள் பாவம் தரையில் கிடக்கிறீர்கள்! எங்களைப்போல் எந்நாளும் நீங்கள் அரியாசனத்தில் அமர முடியாது" என்று எள்ளி நகையாடின.

பகவான் திரும்பி வந்ததும், பாதரக்ஷைகள் அவரிடம் அதுபற்றி முறையிட்டன. அதைக் கேட்ட பகவான், ''கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்க்கப்படும். இப்போது உங்களைக் கண்டு நகைத்தவர்களையே, உங்களுக்குச் சேவை செய்ய தலைமேல் சுமக்கச் செய்வேன்!' என்றார் கருணையுடன்.

பகவான் அன்று சொன்னதைப்போல, ஸ்ரீராமனாக திருஅவதாரம் செய்தார். பரதன் முடிசூட வேண்டி கைகேயி செய்த சதியால் ஸ்ரீராமன் வனவாசம் சென்று விட, விஷயம் தெரிந்த பரதன், ஸ்ரீராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான். தனது தாய் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கோருகிறான்.

மீண்டும் அயோத்தி திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, ஸ்ரீராமன் மறுத்துவிடுகிறார்.

பிறகு, 'உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்து, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்” என்று வேண்ட, மனமிரங்கிய அண்ணல் ஸ்ரீராமன் தமது பாதரக்ஷைகளைக் கொடுத்தனுப்புகிறார்.

பகவான் மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமனின் பாதரக்ஷைகளை, சங்கு, சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கிச் சென்று, அதை சிம்மாசனத்தில் அமர்த்தி, அதன் பிரதிநிதிகளாகவே ஆட்சி புரிந்தனர்.


பவித்ரம் மிக்க பாதுகைகள்
ராம ராஜ்ஜியத்தைவிட, பரதனின் மேற்பார்வையில் நடைபெற்ற ஸ்ரீ ராமனின் பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால், ஸ்ரீராமனின் பாதுகைகள் எந்தளவு புனிதமும் சக்தியும் மிக்கது என்பதை யூகித்து அறியலாம். இதனைப் போற்றும் விதமாகவே, இன்றும் பெருமாள் கோயில்களில், சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட கிரீடத்தின் மீது அமர்ந்த பாதுகைகள் பக்தர்களின் தலை மீது, 'ஸ்ரீ சடாரி' எனும் பெயரில் சாத்தப்படுகிறது.

பெருமாள் தரிசனத்துக்குப் பிறது தரப்படும் துளசித் தீர்த்தம், மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன், ஸ்ரீ சடாரியை சிரசில் தரித்துக்கொள்ளும்போதுதான், வழிபாடு பூர்த்தியானதாகக் கருதப்படுகிறது. காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. அதைத்தான் 'ஸ்ரீ சடாரி நமக்கு உணர்த்துகிறது.




சிறுகதை - ஓர் இல்லத்தரசியின் தீபாவளி...


சிறுகதை - ஓர் இல்லத்தரசியின் தீபாவளி...
தீபாவளி வந்தாச்சு.
சுதாவுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி பண்டிகைகள் வரும்போதெல்லாம் சுதாவுக்கு இந்த பட்டாம்பூச்சிகள் பறக்கும். பண்டிகை காலம் முடிந்தவுடன் பட்டாம்பூச்சிகள் போய்விடும். அப்படி என்ன பண்டிகைக்கும் பட்டாம் பூச்சிகளுக்கும் சுதாக்கும் தொடர்பு? சுதாவுக்கு மட்டும் இல்லை. இன்னும் பல இல்லத்தரசிகளுக்கும் இப்படித்தானே?

இந்த வருட தீபாவளிக்கும் சுதா வழக்கம் போல் மனதுக்குள்ளே புலம்ப ஆரம்பித்துவிட்டாள்… "எல்லாம் சரியா நடக்கணும் அன்னபூரணி தாயே!" வேண்டினாள்.

மாமியார் மங்களம் குரல் கொடுத்தார் "அம்மாடி சுதா முறுக்குக்கு எப்ப தயார் பண்ண போற?" பறக்க ஆரம்பித்தது பட்டாம்பூச்சி.
"அத்த நீங்க எப்பன்னு சொல்லுங்க நாம செஞ்சிடலாம்."

"இந்த தடவை நம்ம பொண்ணு அகிலா வீட்ல தீபாவளி கொண்டாடல இல்லையா… அதனால அவளுக்கு தனியா ஒரு படி போட்டு சுட்டுடு. அப்புறம் நமக்கு ஒரு ரெண்டு படி போடு. ரெண்டு படி கூட போடலைன்னா எப்படி?  அக்கம் பக்கம் எல்லாருக்கும் கொடுக்கணும் இல்லையா?"
கல்யாணம் ஆகி 35 வருஷமா இதே பேச்சுதான்... யாரும் மாறவில்லை. நானும் அப்படியேதான் இருக்கேன். மனசுக்குள்ளதான் எனக்கும் வயசாச்சு. அப்படி பண்ணனும், இப்படி பண்ணனும்னு சொல்லிக்கலாம். ஆனா வெளியே "சரிங்க அத்தை பண்ணிடலாம்"தான்.

மங்களத்தின் குரல் மீண்டும் கேட்டது. "அப்படியே மைசூர் பாகுக்கு ரெண்டு தம்ளர் மட்டும் போடு. பிள்ளைங்க வருவாங்க இல்லையா. அதனால குலோப்ஜாமூன் ரெண்டு பாக்கெட் மறக்காம  தீபாவளிக்கு  முதல் நாள் போட்டு உள்ள எடுத்து வச்சிடுமா. புள்ளைங்க சாப்பிடட்டும்..." 
 "சரிங்க அத்தை. நீங்க சொன்னபடியே பண்ணிடலாம்.” மீண்டும் அதே பதில்.

அத்தை  சொன்னபடியே முறுக்குக்கு ஊறப்போட்டு,  மிளகாய் எண்ணிப் போட்டு, ஆட்டி எடுத்து, பொட்டுக் கடலை மாவை அரைத்து சலித்து, உப்பு, எள்ளு, வெண்ணெய், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து பக்குவமாக மாவு பிசைந்து மூடி வெச்சாச்சு.
வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு உட்கார்ந்து முறுக்குகளை பிழியும் வேலையைத் தொடங்கியாச்சு… மங்களம் வந்து முதல் ஈடு மட்டும் போட்டு முறுக்கு சுடும் படலத்தை துவங்கி வைக்க, தொடர்ந்து  6 மணிநேரம் ஆச்சு சுட்டு எடுக்க.

நடுவுல பதம் பார்க்க ஒரு முறுக்கு எடுத்து கடிச்ச அத்தையோட குரல் கேட்டுச்சு “சுதா முறுக்கு கொஞ்சம் வின்னுனு இருக்கு பாரு.  இன்னும் கொஞ்சம் தளர செஞ்சு சுடு..” கையில் எடுத்த முறுக்க வெச்சிட்டு அத்தை சொன்ன மாதிரியே செய்ய, எல்லாரும் சாம்பிளுக்கு சாப்பிட்டு ஆஹா சூப்பர்னு பாராட்ட...  அப்பாடா!
முறுக்கு எல்லாம் எடுத்து காற்று வராத ஒரு டப்பாவில் அடச்சு வெச்சாச்சு. அந்த முறுக்கு எடுத்து வைக்கிற பக்குவம் இருக்கே. ஒண்ணு மேல ஒண்ணு அடி படாமல் சாய்த்துவைக்கணும். இல்லன்னா அதுக்கு மாமியார்கிட்ட ஒரு பாடம் கேட்கணும். முறுக்கு சுட்டு எடுத்து வெச்சாச்சு;  சுதாவுக்கு இடுப்பும் பிடிச்சாச்சு.. இரவு கண்ணை மூடியதுதான் தெரியும்... அவ்வளவு அலுப்பு.
அடுத்து மைசூர் பாகை காய்ச்சி கீற்று போட்டு எறும்பு வராமல் இருக்க தண்ணீர் மேல அந்த டப்பாவை வெச்சாச்சு. குலோப்ஜாமூன் மட்டும் தீபாவளிக்கு முதல் நாள் செய்ய பிளான்.

இதுல அக்கம் பக்கத்து வீட்ல இருந்தெல்லாம் வந்த மிக்சர் பாக்கெட்டுகளும் லட்டுகளும் கண் சிமிட்டுது சாப்பிட சொல்லி… ஆனா நேரம் எங்க இருக்குது? அவங்க கொடுத்ததெல்லாம் மாத்தி மாத்தி பேக் பண்ணி தேவைப்படுறவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சாச்சு.
தீபாவளிக்கு முதல்நாள் குலோப்ஜாமூன்  செஞ்சாச்சு. வர வேண்டியவங்க எல்லாம் வந்தாச்சு. தீபாவளிப்பண்டிகையும் களை கட்டியாச்சு.

சுதாவுக்கு மட்டும் கண்ண கட்டிட்டு வந்தது. இருந்தாலும் நாத்தனார் குழந்தைங்கனு வீடு ஃபுல்லா ஒரே குதூகலம்தான். கண்ண கட்டிட்டு வந்தாகூட சுதா சுதாரிசுப்பா! தனிமையில கொண்டாடுற எந்த பண்டிகையும் அவளுக்குப் பிடிச்சதே இல்ல. வீடு ஃபுல்லா உறவுகளோட கூட்டத்தோட  கொண்டாடுவதே சுதாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

சாம்பார் வடைக்கு பருப்பு கொதிச்சிட்டு இருக்கு. அதுல ரெண்டு பள்ளி சீரகம் மிளகு தேங்காய் வறுத்து தனியா தேங்காய் வறுத்துபோட்டு வீடே கமகமன்னு இருக்கு. சாம்பார் ரெடி. அடுத்து எண்ணெயில வடைய போட ஆரம்பிச்சுட்டா சுதா. அதுவும் வடையில அவ போடுற அழகான அந்த ஓட்டை பல உறவுகளோட வாயை அடைக்கும். ஏன்னா டேஸ்ட் அப்படி. அவளோட கைபக்குவம் அருமையா இருக்கும்.
       

"சுதா வாம்மா நீயும் சாமி கும்பிடு. பிறகு எல்லோரும் சாப்பிடலாம்"…

பூஜையறையில் நங்கை நாத்திகம் பிள்ளைகள் என எல்லோரும் இருந்தார்கள். கலகலவென்று அனைவரும் சுவாமியை வழிபட்டு ஒருவருக்கொருவர் விழுந்து கும்பிட்டு ஆசிகளுடன் பணம் பரிசுகளை பெற்றுக் கொண்டதும் சுதா "அத்தை நான் போய் எல்லாம் எடுத்து வைக்கிறேன் எல்லாரும் சாப்பிட வந்துருங்க" என்றபடி தான் செய்த சாம்பார் வடை, வெண்பொங்கல் இட்லி இத்தியாகிகளை எடுத்து ஸ்வீட்  உடன் இலை போட்டு தயாராக வைத்தாள்.

இலை போட கீழே குனியும்போது சுதாக்குள் எப்படியோ இருந்தது. ஆனால், அவள் அதை கண்டுகொள்ளவில்லை. பசி மயக்கம் என்று நினைத்து சிறிது தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் அனைவரையும் உபசரிக்க ஆரம்பித்துவிட்டாள்.


இதோ பட்டாசு வெடித்து, அறுசுவை உணவு எல்லாம் உண்டாயிற்று. மங்களம், "எங்க சுதாவை காணோம்? ரொம்ப நேரமா ஆளையே காணோமே,  அவ சாப்பிட்டாளா இல்லையா?" என்று சுதாவைத் தேடிப் போக,  சமையலறை நாற்காலியில் மயங்கி போய் அமர்ந்திருந்தாள் சுதா.

பிள்ளை
"என்னம்மா ஆச்சு உனக்கு?” வீடே பரபரப்பு ஆனது. தன் கணவனுடன் சுதா மருத்துவமனைக்கு சென்றாள். சுதாவை பரிசோதித்த மருத்துவர் "என்னம்மா வேலை அதிகம்போல. இருந்தாலும் உடம்ப கவனிச்சுக்கணும் இல்லையா… இப்ப பாருங்க பிபி அதிகமா இருக்கு. நீங்க இனிப்புகள், எண்ணெய் பதார்த்தம் எல்லாம் எடுத்துக்காதீங்க. சத்துள்ள ஆகாரமா சாப்பிடுங்க.  சரியா போயிடும். முக்கியமா ஓய்வு எடுங்க..."
மருத்துவமனைக்கு சென்று வந்ததும் கண் அயர்ந்த சுதா மதியம் புத்துணர்வுடன் மீண்டும் சமையல் அறைக்கு சென்று வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் சுட்ட முறுக்குகள் பரிதாபமாக அவளைப் பார்த்து சிரித்தன. "நீ மட்டும் இன்னும் என்னை வாயிலேயே வைக்கவில்லையே."

"எல்லாம் அடுத்த வருஷம் பாத்துக்கலாம். மத்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்க இல்லையா. அது போதும் எனக்கு." சத்து மாவு கஞ்சியை குடித்துக்கொண்டே சுதாவின் மனசு பேசியது.




சிறுகதை - கரும்புப்பால்!


சிறுகதை - கரும்புப்பால்!
அதிகாலை வெயில் போலவே இல்லை. 12 மணி உச்சி வெயில்போல விடியற்காலையிலேயே சூரிய பகவான் வெகுண்ட பார்வையை பூமியின்மீது வீசினார். தண்ணீர் குடிக்க...  குடிக்க தீராத தாகம். உஷ்ணமான பருவமாக ஐப்பசி வெயில் ஐயத்தை அளித்தது. 

கமலினி அதிகாலையில் எழுந்து வேகவேகமாய் அடுப்பு வேலையைப்  பார்க்க மும்முரமானாள். தினமும் எந்திர உலகில் பயணம் செய்யும் கமலினிக்கு  எல்லாம் அவசரத்தாபம். பாலை காய்ச்சிய  அடுப்பில் சாதம், குழம்பு என்று அத்தனையும் உணவு உண்ணும் மேசைக்கு ஏறியது.  

 “ஏய் ரத்னா எழுந்திரிடா... ஆட்டோ வந்திடும். சீக்கிரம் எந்திரி என்று குழந்தையை உலுக்கினாள். தூக்கத்தில் அரைக்கண் பார்வையால் ஏறிட்ட குழந்தை “ம்மா.....  இன்னும் டூ  மினிட்ஸ் மா” என்றது மழலைக் குரலில்....

குழந்தையை வேகமாக கிளப்பி பள்ளிக்கு அனுப்பியவள் தானும் வேலைக்குச் சென்றாள்.  வெயிலின் தாக்கத்தால் அயர்ந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கினாள். அங்கு ஒரே கூட்டம். என்னவென்று எட்டிப் பார்த்தாள். ‘கரும்புப்பால் ரூ.10’ என்ற பலகையைக் கண்ட மனிதர்கள் அங்கு நின்று  சாறு அருந்த காத்திருந்தனர்.  கரும்புச்சாறு கடை ஐஸ்கட்டி உடைக்கும் பெண்ணை சன்னமாக திட்டி தீர்த்துக்கொண்டிருந்தான் அவன்.  அக்கடையின் உரிமையாளன் போலும்.   இந்த பைபாஸ்லையே அந்த ஒரு கடைதான் உள்ளதால், கூட்டம் எப்போதும்  அலைமோதும். (அதனால், வேலையாட்களும் பழமண்டியும் சேர்த்து அவ்விடத்தில் உள்ளது.) ஐஸ்கட்டி உடைக்கும் பெண் ஒரு பெரிய வாளியில் இருந்த ஐஸ்மலையை தூக்கி மூடுபெட்டியில் நங்கென்று போட்டாள். நெருப்புபட்ட கைபோல்  செக்கச்செவேர்னு  சிவந்த கையுடன் சிறு துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு குவளைக்குள்ளும் போட்டாள்.
குழவி பிராயத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கின தருணம்போல, தாங்க முடியாமல் இரண்டு கைகளையும் உதறினாள். என்னவா இருக்கும்?  இந்த பெண்ணிற்கு என்று அவள் அருகில் சென்றாள் கமலினி.  

“ஏம்மா உங்களுக்கு ஏன் கண்கள் கலங்கி, கை உதறுகிறது?”

அவளோ கைகளின் கதகதப்பை அதிகப்படுத்த அருகில் கிடந்த சூடு கல்லில் கையினை தேய்த்தவாறு பதில் கூறினாள். “எனக்கு மூன்று நாளாக உடல்நிலை சரியில்லையம்மா.  நான் இங்கு வரவில்லை என்றால் என்னிடத்தில் வேறொருவர்! அதனால், வேறுவழியின்றி வந்து வலியை வாழ்க்கையாக்கி பழகிவிட்டேன்” என்று கூறியபடி அவளிடம் கரும்புப்பாலை நீட்டினாள்.  

குளிரில் துடித்த அவளின் கைகளுக்கு கருங்கல்லின் சூடு இதமாக இருந்தது.  கல்லிற்கு காணிக்கையாக இரண்டு சொட்டு கண்ணீரை விட்டு வேலையை பார்க்கத் துவங்கினாள். ஐஸ்கட்டி உடைக்கும் அப்பெண்ணின் நிலையை கண்ட கமலினியின் மனதிற்குள், கரும்புப் பாலின் குளிர்ச்சி செல்லாமல், மாறாக, நெருப்பு துண்டை விழுங்குவதுபோன்ற உணர்வு இத்தனை நாள் தன் மனதை ஆட்படுத்திய காழ்ப்புணர்ச்சி என்ற நெருப்பு கரும்புப் பாலில் அடித்து நொறுக்கப்பட்டது. சற்று நேரம் அலுவலகம் சென்று பணியை தொடராமல் நனவிலி மனதில் செல்லத் துவங்கினாள்.


தன் மனம் தன்னுடன் பேசுவதை உணர்ந்தாள் கமலினி. “எனக்கு கீழ் வேலை பார்ப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயந்தியை நான் எவ்வளவு துன்பப்படுத்தி விட்டேன். இன்று கரும்புச்சாறு கடையில் உள்ள பணிப் பெண் வருந்துவதுபோல அன்று கொட்டும் மழையில் அவள் நனைய நனைய, அவளை ஜுரத்தில் வேலை செய்ய வைத்து எனது காழ்ப்புணர்ச்சியை காட்டி அறியாமையில் இருந்ததை எண்ணி வெட்கமாக உள்ளது” என்று மனதினுள் வருந்திட்டாள்.

பெண்ணுக்கு எவ்விடத்திலும் பெண்ணே முதல் எதிரியாக இருக்கும் இழிநிலையை எண்ணி மனம் வருந்தி ஒற்றைக் கரும்புச்சாறு, தன் காழ்ப்புணர்ச்சியை கரைத்தது எண்ணி நெகிழ்ச்சியுற்றாள் கமலினி.