jaga flash news

Wednesday 15 November 2023

சிறுகதை - ஓர் இல்லத்தரசியின் தீபாவளி...


சிறுகதை - ஓர் இல்லத்தரசியின் தீபாவளி...
தீபாவளி வந்தாச்சு.
சுதாவுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி பண்டிகைகள் வரும்போதெல்லாம் சுதாவுக்கு இந்த பட்டாம்பூச்சிகள் பறக்கும். பண்டிகை காலம் முடிந்தவுடன் பட்டாம்பூச்சிகள் போய்விடும். அப்படி என்ன பண்டிகைக்கும் பட்டாம் பூச்சிகளுக்கும் சுதாக்கும் தொடர்பு? சுதாவுக்கு மட்டும் இல்லை. இன்னும் பல இல்லத்தரசிகளுக்கும் இப்படித்தானே?

இந்த வருட தீபாவளிக்கும் சுதா வழக்கம் போல் மனதுக்குள்ளே புலம்ப ஆரம்பித்துவிட்டாள்… "எல்லாம் சரியா நடக்கணும் அன்னபூரணி தாயே!" வேண்டினாள்.

மாமியார் மங்களம் குரல் கொடுத்தார் "அம்மாடி சுதா முறுக்குக்கு எப்ப தயார் பண்ண போற?" பறக்க ஆரம்பித்தது பட்டாம்பூச்சி.
"அத்த நீங்க எப்பன்னு சொல்லுங்க நாம செஞ்சிடலாம்."

"இந்த தடவை நம்ம பொண்ணு அகிலா வீட்ல தீபாவளி கொண்டாடல இல்லையா… அதனால அவளுக்கு தனியா ஒரு படி போட்டு சுட்டுடு. அப்புறம் நமக்கு ஒரு ரெண்டு படி போடு. ரெண்டு படி கூட போடலைன்னா எப்படி?  அக்கம் பக்கம் எல்லாருக்கும் கொடுக்கணும் இல்லையா?"
கல்யாணம் ஆகி 35 வருஷமா இதே பேச்சுதான்... யாரும் மாறவில்லை. நானும் அப்படியேதான் இருக்கேன். மனசுக்குள்ளதான் எனக்கும் வயசாச்சு. அப்படி பண்ணனும், இப்படி பண்ணனும்னு சொல்லிக்கலாம். ஆனா வெளியே "சரிங்க அத்தை பண்ணிடலாம்"தான்.

மங்களத்தின் குரல் மீண்டும் கேட்டது. "அப்படியே மைசூர் பாகுக்கு ரெண்டு தம்ளர் மட்டும் போடு. பிள்ளைங்க வருவாங்க இல்லையா. அதனால குலோப்ஜாமூன் ரெண்டு பாக்கெட் மறக்காம  தீபாவளிக்கு  முதல் நாள் போட்டு உள்ள எடுத்து வச்சிடுமா. புள்ளைங்க சாப்பிடட்டும்..." 
 "சரிங்க அத்தை. நீங்க சொன்னபடியே பண்ணிடலாம்.” மீண்டும் அதே பதில்.

அத்தை  சொன்னபடியே முறுக்குக்கு ஊறப்போட்டு,  மிளகாய் எண்ணிப் போட்டு, ஆட்டி எடுத்து, பொட்டுக் கடலை மாவை அரைத்து சலித்து, உப்பு, எள்ளு, வெண்ணெய், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து பக்குவமாக மாவு பிசைந்து மூடி வெச்சாச்சு.
வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு உட்கார்ந்து முறுக்குகளை பிழியும் வேலையைத் தொடங்கியாச்சு… மங்களம் வந்து முதல் ஈடு மட்டும் போட்டு முறுக்கு சுடும் படலத்தை துவங்கி வைக்க, தொடர்ந்து  6 மணிநேரம் ஆச்சு சுட்டு எடுக்க.

நடுவுல பதம் பார்க்க ஒரு முறுக்கு எடுத்து கடிச்ச அத்தையோட குரல் கேட்டுச்சு “சுதா முறுக்கு கொஞ்சம் வின்னுனு இருக்கு பாரு.  இன்னும் கொஞ்சம் தளர செஞ்சு சுடு..” கையில் எடுத்த முறுக்க வெச்சிட்டு அத்தை சொன்ன மாதிரியே செய்ய, எல்லாரும் சாம்பிளுக்கு சாப்பிட்டு ஆஹா சூப்பர்னு பாராட்ட...  அப்பாடா!
முறுக்கு எல்லாம் எடுத்து காற்று வராத ஒரு டப்பாவில் அடச்சு வெச்சாச்சு. அந்த முறுக்கு எடுத்து வைக்கிற பக்குவம் இருக்கே. ஒண்ணு மேல ஒண்ணு அடி படாமல் சாய்த்துவைக்கணும். இல்லன்னா அதுக்கு மாமியார்கிட்ட ஒரு பாடம் கேட்கணும். முறுக்கு சுட்டு எடுத்து வெச்சாச்சு;  சுதாவுக்கு இடுப்பும் பிடிச்சாச்சு.. இரவு கண்ணை மூடியதுதான் தெரியும்... அவ்வளவு அலுப்பு.
அடுத்து மைசூர் பாகை காய்ச்சி கீற்று போட்டு எறும்பு வராமல் இருக்க தண்ணீர் மேல அந்த டப்பாவை வெச்சாச்சு. குலோப்ஜாமூன் மட்டும் தீபாவளிக்கு முதல் நாள் செய்ய பிளான்.

இதுல அக்கம் பக்கத்து வீட்ல இருந்தெல்லாம் வந்த மிக்சர் பாக்கெட்டுகளும் லட்டுகளும் கண் சிமிட்டுது சாப்பிட சொல்லி… ஆனா நேரம் எங்க இருக்குது? அவங்க கொடுத்ததெல்லாம் மாத்தி மாத்தி பேக் பண்ணி தேவைப்படுறவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சாச்சு.
தீபாவளிக்கு முதல்நாள் குலோப்ஜாமூன்  செஞ்சாச்சு. வர வேண்டியவங்க எல்லாம் வந்தாச்சு. தீபாவளிப்பண்டிகையும் களை கட்டியாச்சு.

சுதாவுக்கு மட்டும் கண்ண கட்டிட்டு வந்தது. இருந்தாலும் நாத்தனார் குழந்தைங்கனு வீடு ஃபுல்லா ஒரே குதூகலம்தான். கண்ண கட்டிட்டு வந்தாகூட சுதா சுதாரிசுப்பா! தனிமையில கொண்டாடுற எந்த பண்டிகையும் அவளுக்குப் பிடிச்சதே இல்ல. வீடு ஃபுல்லா உறவுகளோட கூட்டத்தோட  கொண்டாடுவதே சுதாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

சாம்பார் வடைக்கு பருப்பு கொதிச்சிட்டு இருக்கு. அதுல ரெண்டு பள்ளி சீரகம் மிளகு தேங்காய் வறுத்து தனியா தேங்காய் வறுத்துபோட்டு வீடே கமகமன்னு இருக்கு. சாம்பார் ரெடி. அடுத்து எண்ணெயில வடைய போட ஆரம்பிச்சுட்டா சுதா. அதுவும் வடையில அவ போடுற அழகான அந்த ஓட்டை பல உறவுகளோட வாயை அடைக்கும். ஏன்னா டேஸ்ட் அப்படி. அவளோட கைபக்குவம் அருமையா இருக்கும்.
       

"சுதா வாம்மா நீயும் சாமி கும்பிடு. பிறகு எல்லோரும் சாப்பிடலாம்"…

பூஜையறையில் நங்கை நாத்திகம் பிள்ளைகள் என எல்லோரும் இருந்தார்கள். கலகலவென்று அனைவரும் சுவாமியை வழிபட்டு ஒருவருக்கொருவர் விழுந்து கும்பிட்டு ஆசிகளுடன் பணம் பரிசுகளை பெற்றுக் கொண்டதும் சுதா "அத்தை நான் போய் எல்லாம் எடுத்து வைக்கிறேன் எல்லாரும் சாப்பிட வந்துருங்க" என்றபடி தான் செய்த சாம்பார் வடை, வெண்பொங்கல் இட்லி இத்தியாகிகளை எடுத்து ஸ்வீட்  உடன் இலை போட்டு தயாராக வைத்தாள்.

இலை போட கீழே குனியும்போது சுதாக்குள் எப்படியோ இருந்தது. ஆனால், அவள் அதை கண்டுகொள்ளவில்லை. பசி மயக்கம் என்று நினைத்து சிறிது தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் அனைவரையும் உபசரிக்க ஆரம்பித்துவிட்டாள்.


இதோ பட்டாசு வெடித்து, அறுசுவை உணவு எல்லாம் உண்டாயிற்று. மங்களம், "எங்க சுதாவை காணோம்? ரொம்ப நேரமா ஆளையே காணோமே,  அவ சாப்பிட்டாளா இல்லையா?" என்று சுதாவைத் தேடிப் போக,  சமையலறை நாற்காலியில் மயங்கி போய் அமர்ந்திருந்தாள் சுதா.

பிள்ளை
"என்னம்மா ஆச்சு உனக்கு?” வீடே பரபரப்பு ஆனது. தன் கணவனுடன் சுதா மருத்துவமனைக்கு சென்றாள். சுதாவை பரிசோதித்த மருத்துவர் "என்னம்மா வேலை அதிகம்போல. இருந்தாலும் உடம்ப கவனிச்சுக்கணும் இல்லையா… இப்ப பாருங்க பிபி அதிகமா இருக்கு. நீங்க இனிப்புகள், எண்ணெய் பதார்த்தம் எல்லாம் எடுத்துக்காதீங்க. சத்துள்ள ஆகாரமா சாப்பிடுங்க.  சரியா போயிடும். முக்கியமா ஓய்வு எடுங்க..."
மருத்துவமனைக்கு சென்று வந்ததும் கண் அயர்ந்த சுதா மதியம் புத்துணர்வுடன் மீண்டும் சமையல் அறைக்கு சென்று வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் சுட்ட முறுக்குகள் பரிதாபமாக அவளைப் பார்த்து சிரித்தன. "நீ மட்டும் இன்னும் என்னை வாயிலேயே வைக்கவில்லையே."

"எல்லாம் அடுத்த வருஷம் பாத்துக்கலாம். மத்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்க இல்லையா. அது போதும் எனக்கு." சத்து மாவு கஞ்சியை குடித்துக்கொண்டே சுதாவின் மனசு பேசியது.




No comments:

Post a Comment