jaga flash news

Wednesday 23 July 2014

வாஸ்து – உணர முடிந்த உண்மை

வாஸ்து –  உணர முடிந்த உண்மை

வாஸ்து – உணர முடிந்த உண்மை மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு அவசியமாக தேவைப்படுகிறதோ அதே போல் வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இப்பிரபஞ்சத்தை காக்கும் பஞ்சபூத சக்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அனுசரித்து வாழும் பறவைகளும், மிருகங்களும், அதனதன் வாழ்க்கையில் குறைபடுவது இல்லை, மேற்படி பஞ்சபூத சக்திகளை ஒத்து வாழாமல் இயற்கையை மீறி வாழும் மனிதகுலமே இன்பத்திலும் துன்பத்திலும் மாறி மாறி சுழலுகிறது. இவ்வாறு உழலும் நிலையற்ற வாழ்வை கொண்ட மனிதகுலத்தை வாழும் காலத்தில் மகிழ்ச்சியுடன் வளமுடனும் வாழ இந்த வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்சபூத சக்திகளும் சூரிய ஆற்றலின் மின்காந்த அலைகளின் நல்ல சத்தியை தேவையான அளவு வீட்டினுள் வரவழைப்பதும் உருவாகும் தீயசக்திகளை அவ்வப்போது வெளியேற்றவும் தேவையான அமைப்புகளுடன் வீட்டை அமைக்க உதவுவதே வாஸ்துவின் நோக்கமும் தத்துவமும் ஆகும்.

மனிதகுல ஆயுள், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைமுறை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சேமிப்பு, வீண் விரைய செலவுகள், ஒழுக்ககேடு, அவமானத்தினால் ஏற்படும் மனச்சோர்வு போன்றவற்றை வாழும் வசிப்பிடங்களே தீர்மானிக்கின்றன.

ஒரு வீட்டில் ஒருவர் வளமையுடன் வசிப்பதற்கு அவ்வீட்டினுள் நிறைந்த நல்ல சக்திகளும், மற்ற ஒரு வீட்டில் ஒருவர் துன்பங்களுடன் உழலுவதற்கு தீயசக்திகளின் ஆதிக்கமே காரணம் என்பதை வாஸ்துவின் மூலம் உணரலாம்..
வாஸ்து என்பது விளையாட்டல்ல, சூரியனும், எண் திசைகளும் இவ்வுலகில் எற்படுத்தும் தாக்கத்தின் உணர்வே என்பது ஆராய்ந்தறிந்த ஒரு அறிவியல் உண்மை.

நம் ஒவ்வொருவர் மனதிலும் இலட்சிய கனவாக உள்ள வளமான ஒரு இல்லம் நனவாக காண இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அபூர்வசக்திகளை நம் இல்லத்தில் சரிவர நிரப்பி எல்லாம் விதிப்பயன் என விரக்தியுடன் வாழும் மனித குலத்தை நம்பிக்கையூட்டி வளமுடன் வாழ வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.,
  • ஆசைகளை நிறைவேற்றுவதல்ல வாஸ்து.
  • இலட்சியங்களை அடையவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருப்பதே வாஸ்து.
  • தகுதியற்ற ஆசைகளையும், ஒழுக்கத்துக்கு புறம்பான சபலங்களையும் விலக்குவதே வாஸ்து.
குடியிருக்கும் வீட்டிற்குரிய வாஸ்து: வந்த பொருள் நிலைக்க வேண்டும் .
வியாபார ஸ்தலத்திற்குரிய வாஸ்து: வந்த பொருள் விரைவாக விற்பனை ஆகி லாபம் ஈட்ட வேண்டும்.
தொழிற்சாலைக்குரிய வாஸ்து: உற்பத்தி திறனை அதிகரிக்க, தொழிலாளர் நல்லுறவைப் பேணி, வெற்றிகரமாக இயக்கி லாபம் ஈட்டவேண்டும். இதை சரியான முறையில் சரியான இடத்தில் வாஸ்துவை செயல்படுத்துவதன் மூலம் உணர்த்த முடியும். வெற்றிபெற முடியும்.

தீராத பிணியை தீர்த்து வைக்கும் ஆற்றல் வாஸ்துக்கு உண்டு, மனைக்கு மேல் மனை வாங்குவதும், மாளிகைக்கு மேல் மாளிகை கட்டுவதும் வாஸ்துவினாலே. கையில் செல்வமிருந்தும் சொந்தமாக ஒரு மனைக்கோ வீட்டிற்கோ மனம் ஏங்குவதும் தற்போதய வசிப்பிட வாஸ்துவினாலே..,

மனையின் அமைப்பில் ஈசானிய மூலை எனும் வடகிழக்கும் கன்னி( நிருதி ) மூலை என்னும் தென்மேற்கும் வீட்டின் பதினாறு வகை செல்வத்தையும், எண் வகை போகத்தையும் நிர்ணயம் செய்கின்றன.

வீட்டினுள்ள பெண்களின் சிறப்பை வடக்கும், தெற்கும், வாயுமூலை எனும் வடமேற்கும் . ஆண்களின் சிறப்பை கிழக்கும், மேற்கும் அக்னி மூலை எனும் தென்கிழக்கும் நிர்ணயம் செய்கின்றன.,

ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு தக்க வயதில் திருமணமும் ஆண்களுக்கு தக்க வயதில் தொழில் (அ) உத்தியோகம் கிடைப்பதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மனையும் அதில் சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்ட இல்லமுமே காரணம் ஆகும். தாமதமாகும் திருமணம் நடைபெற, தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் வெற்றி பெற, பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடி மகிழ, குழந்தை செல்வம் வேண்டுமென ஏங்குவோருக்கு மழலைச் செல்வம் கிட்டிட, வெற்றி பெற துடிக்கும் இளைய தலைமுறையின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மற்றும் தொழில் சிறக்க வாஸ்துவே வாழ்வளிக்க முடியும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று.

வீட்டின் பிரம்மஸ்தானமான மையப்பகுதியில் பாரம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதே சிறப்பு..வீட்டினுள் வரும் பஞ்சபூத சக்திகளில் ஒன்றான வான்வெளி சக்தி பிரம்மஸ்தானம் வழியாகப் பெறப்பட்டு வீடு முழுவதும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் சுழற்சி சிதறாமல் பரவும்போது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
வாஸ்துவை ஏற்றுக்கொண்டோர்க்கு சில ஆலோசனைகள்:

மனை வாங்கும் போது கவனிக்க தக்க சில ஆலோசனைகள்:
  • வடக்கிலும், கிழக்கிலும் தெரு அமைந்த மனையே மிகச் சிறந்தது. வடக்கு அல்லது கிழக்கு தெரு அமைந்த மனையும் சிறந்தது. மற்ற எல்லா திசைகளும் சிறந்தவையே அதனதன் திசையின் தன்மைக்கேற்ப வீட்டை அமைத்துக் கொள்வதே சிறப்பு.
  • நாம் குடியிருக்கும் மனைக்கு வடக்கு, கிழக்கு, வட கிழக்கு திசையில் அருகிலோ அல்லது தொலைவிலோ மட்டுமே மனை வாங்குவது சிறப்பு.
  • மனையில் கிழக்கு ஆக்கினேய வளர்ச்சியோ, மேற்கு வாயுவிய வளர்ச்சியோ இருக்ககூடாது.
  • மனைக்கு வடக்கு, கிழக்கு, வடகிழக்கில் மலை, குன்று, உயரமான பாரமான கட்டிடங்கள் இருக்ககூடாது.
  • மனைக்கு மேற்கு, தெற்கு, தென்மேற்கில் நீர் நிலை, ஓடைகள், வாய்க்கால், குட்டை, பள்ளம் இருப்பது சிறப்பல்ல.
  • மனைக்குள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி சரி செய்ய இயலாத மேடாக இருந்தால் நல்லதல்ல.
  • மனையின் அமைப்பில் திசைகள், மூலைகள் குறைந்து அல்லது வளர்ந்து இருப்பதினால் ஏற்படும் நன்மை தீமைகளை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும். எனவே மனை அமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும்.
கட்டிடம் கட்டுவது அவரவர் பொருளாதார வசதிகேற்ப அமைவது.
அப்படி கட்டப்படுகின்ற வீட்டை அமைக்க சில யோசனைகள்:
  • சுற்றுப்புற சூழல் வாஸ்துவின் தீயதாக்கத்தில் இருந்து நம்மை காக்கும் கவசம் காம்பெளண்டு சுவராகும். அதில் அமைக்கும் வாசல் கேட் நற்பலன்களின் வரவேற்பு ஆகும்.
  • ஆழ்துளை கிணறு மனையின் வடக்கு, கிழக்கு உச்சத்திலோ, வடகிழக்கிலோ மட்டுமே அமைய வேண்டும்
  • கட்டிட வேலை குறிப்பிட்ட காலத்தில் முடிய கட்டிடத்திற்கு வானம் (கடைக்கால்) தோண்டும் போது, ஈசானிய மூலையில் துவங்க வேண்டும். கட்டிட அஸ்திவார வேலை கன்னி மூலையில் துவங்க வேண்டும்.
  • கட்டிடத்தின் தலைவாசல் திசையின் உச்சமான பகுதியில் அமைய வேண்டும். உள் அறைகளின் வாசலும் உச்சமாக இருப்பது சிறப்பு. ஆனால் ஒரே வீட்டில் தெற்கு ஆக்கினேயத்திலும், மேற்கு வாயுவியத்திலும் ஆக இரண்டு வாசல் வைக்ககூடாது. தெற்கிலும், மேற்கிலும் உச்சத்தில் ஆக இரண்டு வாசல் வைக்கக்கூடாது. ஆக ஒரு வாசல் மட்டும் தான் வைக்க வேண்டும்.
  • கிழக்கு மற்றும் வடக்கு தலைவாசல் அமைந்தால் மேற்கு, தெற்கில் பின்புற வாசல் அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மேற்கு மற்றும் தெற்கு தலைவாசல் அமைந்தால் அதன் எதிர் திசையில் கண்டிப்பாக வாசல் அமைக்க வேண்டும்.
  • செப்டிக் டேங்க் மனையின் கிழக்கு அல்லது வடக்கு திசையின் நடுவில் அமைய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிடத்தின் தென்மேற்கு மூலையில் அமைவது நன்று.
  • மாடிபடி வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே அமைக்கும் போது வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைப்பதோடு அதன் நிலை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பூமியிலிருந்து ஏறும் போது அமைத்துக் கொண்டு இடத்திற்கு தகுந்தவாறு மேலும் சில நுட்பங்களுடன் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • கன்னி மூலையில்(தென்மேற்கு) தான் தலைவரது படுக்கை அமைய வேண்டும் என்பது ஒரு மரபு. அதில் குடும்ப தலைவர் தெற்கே தலை வைத்து படுப்பது குடும்பத்திற்கே ஒரு கவசம்.
  • பூஜை அறையில் ஈசானியத்தை நோக்கி பூஜை செய்ய வேண்டுமென்பது சாஸ்திரமேயன்றி ஈசானிய மூலையில் தான் பூஜை அறை அமைய வேண்டுமென்று கட்டாயமில்லை. வீட்டின் அமைப்பிற்கேற்ப அருள்மழை பொழியும் இடத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கினேய மூலையில் சமையல் அறை அமைக்க முடியாத சூழ்நிலையில் ஈசானியம் தவிர மற்ற அறைகளில் அவ்வறையின் ஆக்கினேய மூலையில் சமையல் மேடை கிழக்கில் வடக்கு சுவரை தொடாமல் அமைத்துக் கொள்ளலாம்.
  • மனையின் கட்டிடத்தை சுற்றி மேற்கைவிட கிழக்கிலும், தெற்கைவிட வடக்கிலும் அதிக காலியிடம் விடப்படுவது ஆண், பெண் வெற்றிக்கு அடிப்படை.
  • வீட்டின் முன் போர்டிகோ அமைக்கும் போது பில்லர் இல்லாமல் பீம் முறை கொண்டு அமைப்பது சிறப்பு.
  • வீட்டின் ஆர்ச் வாசல் அமைப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், பொது உபயோக கட்டிடங்களில் ஆர்ச் அமைக்கலாம்.
  • வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே கழிப்பறை அமைக்கும் போது வடமேற்கு அல்லது தென்கிழக்கில் அமைப்பது ஆரோக்கியத்திற்கு அழைப்பு.
  • கழிப்பறையில் மனிதன் அமரும் திசை வடக்கு அல்லது தெற்கு நோக்கி மட்டும் அமைப்பது உடல் நலத்திற்கு பாதுகாப்பு.
  • போர்வெல் கிணறு வடகிழக்கில் மட்டும் அமைவது பொருள்வரத்தின் அறிகுறி மேல்நிலை நிர்தேக்கத் தொட்டி தென்மேற்கில் உயரத்தில் அமைப்பது வருவாயில் பெரும்பகுதி சேமிப்பு.
வாடகை வீடு, அபார்ட்மென்ட், அரசு குடியிருப்பு ஆகியவற்றில் வசிப்பவர்கள் மற்றும் வாடகைக்கு இருக்கும் வியாபாரஸ்தலத்தில் வாஸ்து குறைபாடுகளை பெங்சூயி எனும் சீனவாஸ்து சாஸ்திர முறைப்படி எளிய வழியின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும் மார்க்கமுண்டு.

மேலும் வாஸ்து எனும் நலம் நாடும் சூத்திரத்துடன் வளம் நிறைந்த ஒரு வீட்டை அமைக்க வாஸ்து வல்லுநரின் ஆலோசனையின் பேரில் மனை வாங்கி வீடு கட்டிக் கொள்வது நற்பலனை அளிக்கும்.

No comments:

Post a Comment