jaga flash news

Friday 10 June 2016

உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா?

உடம்பானது உயிர் எடுத்து வந்ததா?
அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா?
உடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது. உடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் உயிர் அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, உயிரை மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக உயிர் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலே இருந்து உணர்ந்து கொண்டு ஞானம்.
மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே.
இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் வெளிவுறம். அப்படிவரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் உயிரே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.
ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த மனத்தை குவித்து நம்மில் நினைவால் நிறுத்தி உயிரை நினைந்து தியானம் செய்ய மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும். பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் உயிர் சோதியை தனக்குள்ளே கண்டு உயிர் கடவுள் எப்போதும் கருத்தில் வைத்து தியானியுங்கள் இறவாநிலை பெற காரணமாகும்.
இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் உயிர் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல் உயிர் கடவுள் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.
மாடமாளிகைகள் கட்டி, மாடு கன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும் உயிர் போனதை உணர்ந்தும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். அவ்வுடலில் உயிராய் நின்று ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இரவா நிலைபெற்று இறைவனை சேர உயிர் தியானம் செய்யுங்கள்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா, வெ.சாமி அவர்களே, சைவ சித்தாந்தம் கற்ற பின்னர் தான், தங்களின் இப்பதிவு எனக்கு புரிந்திருக்கிறது.. என் கவனத்திற்கும் இப்போதான் இப்பதிவு புலப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  3. அய்யா...தங்களின் இப்பதிவுக்கு அடியேனின் விளக்கம்...!

    Tue. 23, May, 2023 at 10.00 pm

    *உயிர் :*

    *எது உயிர் ?*

    *உயிர் என்றொரு பொருள் உண்டா ?*

    உடம்பில் நாள்தோறும் இன்பத் துன்ப உணர்வுகளும், அநுபவங்களும் ஏற்படு கின்றன. அவற்றை அறிந்து அநுபவிக் கின்ற பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் அல்லவா ?

    உடம்பே அவற்றை அறிந்து அநுபவிக் கிறது என்று கூறலாமா ?

    உடம்போ அறிவற்ற சடம். ஆகையால் அது இன்ப தூன்பங்களை அறியும் என்றலும்,அநுபவிக்கும் என்றலும் பொருந்தாது. அப்படித்தானே.

    உடம்பு அநுபவிக்கவில்லை என்பதால்,
    உடம்பினுள்ளே உடம்பிற்கு வேறாய ஒரு பொருள் இருத்தல் வேண்டும், அது அறிவுப் பொருளாய் இருத்தல் வேண்டும்...அல்லவா.

    அந்த அறிவுப் பொருளே, இன்ப துன்பங்களை நுகர்கிறது எனல் வேண் டும். "அப்பொருளே உயிர் என்று சொல்லப்படுகிறது."

    சரி...

    உயிர் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகின்ற பொருள் எது ?

    உடம்பிற்கு வேறானதாய், உடம்பைத் தனக்கு இடமாகக் கொண்டு அறிந்து வருகின்ற அறிவுப் பொருளே... உயிர் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து.

    "யான்" எனத் தன்னை நோக்கி அறியும் அறிவே "உரிர்" என்று சொல்லலாம்.

    ஏதேனும் ஒன்றைச் செய்யும்பொழு
    தும், அறியும் பொழுதும், "நான்" இதனைச் செய்கின்றேன்; நான் இதனை அறிகின்றேன் என உணர்வு நிகழ்கிறது. இங்கு "நான்" என்றது உயிரைக் குறிக்கும்.

    உயிர், ஆன்மா என்பன ஒருபொருட் சொற்கள்.

    அடுத்து...;

    "உடம்பு உயிர் ஆகுமோ ?"

    அறிவு, உடம்பிலே நிகழ்வதாலும், உடம்பிலன்றி வேறிடங்களில் அது நிகழக் காணாமையாலும், உடம்புதான் உயிர் அல்லது ஆன்மாவாகும் என்று ஒரு சாரார் கூறுவர். ..

    அதனை எப்படி மறுப்பது ?

    இதற்கு பல காரணங்கள் காட்டி அதனை மறுக்க முடியும்.

    உடம்பு தான் உயிர் என்றால் "யான் உடம்பு" என்றல்லவா கூற வேண்டும்... அப்படி யாரேனும் கூறுகிறார்களா ? இல்லையே... "எனது உடம்பு" என்று உடம்பைத் தமது உடைமைப் பொருளாகவே கூறுகின்றனர்.

    இதிலே நாம் அறிவது, உடம்பு உடைமைப் பொருளே என்பதும், அது உயீராகாது என்பதும் விளங்கும்.

    சரி...

    "யான் பருத்து விட்டேன்; யான் மெலிந்து விட்டேன்" என்று கூறீவது வழக்கமாக உள்ளது. இவ்வழக்கில் யான் என்பது உயிரையும், பருத்தல், மெலிதல் என்பன உடம்பையும் கூறித்தல் வெளிப்படையானது.

    இவ்வுலக வழக்கு, உயிர் என்பது உடம்பே என்ற அவர்கள் கருத்தை அல்லவா ஆதரிப்பதாக உள்ளது ? இவ்வழக்கிற்கு எவ்வகையில் விளக்கம் கூறி அவர்களை மறுப்பது ?

    மாந்தர் இயல்பு என்னவென்றால்.... அவர்கள் தமக்கு வேறாக உள்ள பொருள்களையும், அவற்றின் மீது கொண்ட அளவு கடந்த பற்றின் காரணமாகத் தம் உயிராகவே நினைப்பர்.

    அப்பொருள்கள் தமக்கு வேறானவை என்பதை எண்ணாமல், அவற்றைத் தாமாகவே மதிப்பர். மனைவி, பிள்ளைகள் முதலியோர் தமக்கு வேறானவர்கள் என்று யாரேனும் எண்ணிப் பார்க்கிறார்களா ? இல்லை.

    அவர்களைத் தாமாக மதித்து, அவர்களுக்கு வருகீன்ற, இன்ப துன்பங்களைத் தம்முடையவனாகக் கொண்டு, மகிழ்ச்சியும், வருத்தமும் அடைகிறார்கள்.

    "என் உயிரே" என்று அவர்களை அழைத்து சீராட்டுகிறார்கள்.

    தம் உயிராகக் கருதும் அளவுக்கு அவர்களோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற காரணத்தாலேயே "என் உயிரே" என்பன போன்ற "மயக்க மொழிகளைக்" கூறுகிறார்கள் .

    இம்முறையிலேயே மக்கள் தமக்கு வேறாயுள்ள உடம்பையும், அவற்றின் மேல் உள்ள பற்றுக் காரணமாகத் தாமாகவே மதித்து, உடம்பிற்கு ஏற்படும் பெருக்கம், மெலிவு முதலியவற்றைத் தமக்கு ஏற்பட்டனவாகக் கொண்டு, "நான் பருத்து விட்டேன்; நான் மெலிந்து விட் டேன் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

    இவ்வாறு உடம்பின் தன்மையைத் தன்மேல் ஏற்றிக் கூறுவனவாகிய இம்மொழிகளைக் காட்டி, "உடம்பே உயிர் அல்லது ஆன்மா என்று கூறுவது பொருந்தாது.

    "யான் எனப்படுகின்ற உயிர், காணப்படுகின்ற பருவுடம்பின் வேறேயாகும். இது சைவ சித்தாந்த முறை.

    இன்னும் இத்தலைப்பிற்கு விளக்கங்கள் கூறிக் கொண்டே போகலாம் அய்யா.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  4. அய்யா நமஸ்காரம். வாய்ப்பு கிடைக்கும்போது, இதற்கு மாற்றொரு விளக்கமும் பகிர்கிறேன் அய்யா. திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete