jaga flash news

Thursday, 13 July 2017

அறிவைப் பெருக்கும் தமிழ் சித்தர் அகத்தியர் கூரிய தோப்புக்கரணம்:

அறிவைப் பெருக்கும் தமிழ் சித்தர் அகத்தியர் கூரிய தோப்புக்கரணம்:
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

2 comments:

  1. இப்பல்லாம் மாணவர்களை தோப்புக்கர
    ணம் போடச்சொன்னா, என் ஸ்டேட்டஸ் என்னனு தெரியுமா உனக்குன்னு. ஆசிரியரை,, அவன் முன்னாடி தோப்புக்கரணம் போடவச்சிருவான். காலம், கலிகாலம் வெ.சாமி அவர்களே. ஆகையால், பிள்ளையார் முன்னாடி நான் செய்த, பாவத்துக்கும், இனிமேல் செய்யப்போற பாவத்துக்கும் சேர்த்து, தோப்புக்கரணம் போடுகிறேன் பிள்ளையாரப்பா. என்னை மன்னியுங்
    கள்னு, அவர் முன்னாடி தோப்புக்கர
    ணம் போடுறது தான் சாலச் சிறந்தது.
    எங்கள் குடும்பமே ஆசிரிய,ஆசிரியை தான். தோப்புக்கரணம் நம்ம காலத்தோடு முடிஞ்சி போச்சுதுங்க அய்யா....

    ReplyDelete
  2. பணத்தை கட்டி, யோகா சென்டர் போய் கத்துக்கச் சொன்னால் செய்வான்.ஆனால் அதே தோப்புகரணத்தை நம்ம போடச் சொன்னால், அவன் முன்னாடி என்னை தோப்புக்கரணம் போட வச்சின்டான்டாம்பான். இதே தப்புக்கு மேல் தப்பு பண்ணி, அதே தப்பைச் திரும்பவும் செய்வான். ஆனால் பிள்ளையார் முன்னாடி பத்து தோப்புக்கரணம் போடுவான். எதற்கு திரும்பவும் தப்பு பண்ணிவிட்டு, உன் முன்னாடி, வந்து நான் தோப்புக்கரணம் போட்டா, நீதான் என்னை மன்னிச்சுருவியே அப்படிங்கிற தவறான எண்ணம். பிள்ளையார் வாய்திறந்து பேசமாட்டார்ங்கிற எண்ணம். அவர் சகலத்தையும் அறிகிறவர் என்பதை இவர்கள் நினைப்பதில்லை. அப்போ இவர் போடுகிற தோப்புக்கரணம், அய்யா! சொன்னமாதிரி, வெறும் உடற்பயிற்சியே என்றாகி விடுகிறது. நான் ஒருமுறை பிள்ளையாரை வணங்கச் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் மற்றவர்களை ஒருமுறை பார்த்துக் கொண்டு, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட்டார். ஆனால் அந்தமுறையே, அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு உணர்த்தியது. விலகிச் சென்றேன் நான், ஆனால், அவர்போட்ட தோப்புக்கரணம் முறை, இன்று கூட என்னை நினைக்கத் தூண்டியது. பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுபவர்கள், வேஷ்டியை பணிவாக இறக்கிவிட்டு, அவரை ஆழ்மனதில் வணங்கி, அவர் அருகில் பிறர் நிற்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றாமல், நான் மட்டுமே அவர்முன் நிற்கிறேன், என்ற உணர்வு தோன்றும்போது, நம் பாவங்களை எல்லாம், பிள்ளையாரிடம் அறிக்கை செய்து, அவசரமின்றி, நிதானமாக தோப்புக்கரணமிட்டு, மன்னிப்பு கேட்டு, வணங்கி வர வேண்டும். மீண்டும், அறிந்து செய்த பாவத்தை விட்டுவிட்டு, நம்மை அறியாமல் செய்த பாவங்களுக்காக, மற்றொருநாள் வரும்போது அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு, தோப்புகரணம் போடவேண்டும். அதுவே,மனதுக்கும், உடம்புக்கும் மருத்துவமாகிவிடும். எனக்கும் இந்த பழக்கம் உண்டு. நானும் ஆண்கள் மாதிரி உட்கார்ந்து தோப்புக்கரணம் போடும் பழக்கம் உண்டு. நட்டமாக நின்று, தலையில் குட்டிச் செல்வது கிடையாது. நாம் வணங்க வந்திருப்பது இறைவனை. அவரை முறைப்படி வணங்குவது தான் சாலச்சிறந்தது. நான் வணங்கும்போது அப்படிதான் வெ.சாமி அவர்களே, என் பக்கத்தில் யார் நிற்கிறார்கள் என்பது தெரியாது. சிலசமயம் என் வணக்கத்திற்கு யாராக இடைஞ்சலாக இருந்தால்,"தூரம் சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து,"என் மனதை மீண்டும் ஒருநிலைப் படுத்தியபின்தான் வணங்கி வருவேன். ஆகவே! அய்யா! வெ.சாமி அவர்கள் கூறியதுபோல், தோப்புக்கரணம், நம் உடம்புக்கு மட்டுமின்றி, நம் மனதுக்கும் ஆரோக்கியமானவையே.

    ReplyDelete