jaga flash news

Thursday, 8 November 2012

புலிப்பாணி ஜோதிடம் 35-44


புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி


கூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க
கொற்றவனே துணைவனுடன் போரும்செய்வன்
வீரப்பா விரதனடா வாய்ச்சமர்த்தன்
விளம்புகிறேன் நாலினுட விவரங்கேளு
பாரப்பா பதி கடந்து கிரியில் வாசம்
பாலனவன் சிலகாலம் வாழ்ந்திருந்து
கூறப்பா போகருட கடாக்ஷத்தாலே
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே.


இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக. மேலும் நான் கூறுவதைக் கேட்பாயாக. குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை என்று போக முனிவரின் பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். இதை நன்கு ஆய்ந்து தெளிக. 

இப்பாடலில் மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி


கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை
குணமாக வாழ்வனடா சேய்க்குதோஷம்
தேரினேன் வீரனடா சத்துருபங்கன்
திடமாக வாழ்வனடா தனமுள்ளோன்
ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு
அப்பனே அடுத்தோரைக் காக்கும் வீரன்
கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க.
கொற்றவனே இப்பலனைக் கூறினேனே.


இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன், மேலும் இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக. 

இப்பாடலில் ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி



குறித்திட்டேன் குளிகனுமோ ரேழில்நிற்கக்
கொற்றவனே குடும் பிக்குக் கண்டம்சொல்லு
சிரித்திட்டேன் சென்மனுக்கு விவாதத்தாலே
சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்.
அரித்திட்டேன் அட்டமத்தில் குளிகன்நிற்க
அப்பனே அழும்பனடா ஜலத்தால் கண்டம்
முரித்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
முகரோக முண்டென்று மூட்டுவாயே.


மேலும் ஒரு கருத்தைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும். அதே போல் எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம். என் குருவான போகருடைய கருணையாலே புலிப்பாணியாகிய நான் கூறும் இன்னொன்றையும் நீ அறிந்து கொள்க. இச்சாதகன் முகரோகன் என்பதையும் நீ உணர்த்துவாயாக. 

இப்பாடலில் ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி



மூட்டுவாய் குளிகனுமோ பாக்கியத்தில்
முகவசியன் அழும்பனடா பிதுர் துரோகி
கூட்டுவாய் குவலயத்தில் தனமுள்ளோன்
குற்றமில்லை கருமத்தின் குறியைக் கேளு
நீட்டுவாய் நீணிலத்தில் கருமிதுரோகன்
நிலையறிந்து நீயறிவாய் அய்யம்வாங்கி
தீட்டுவாய் தின்பனடா விரலேஉச்சம்
சிறப்பாக செப்புவாய் திண்ணந்தானே.


இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக. இனி பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக. 

இப்பாடலில் ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி


தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்
தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன்
யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு
யென்மகனே வசியனடா ஜாலக்காரன்
வீணென்ற விரயனடா ரசவாதத்தால்
விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான்
கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே
கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே


இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன். இனி பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். ன் குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக. 

இப்பாடலில் பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம்


பாரப்பா மூன்றாறு பத்துஒன்று
பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்
சீரப்பா சீலனுட மனையில் தானும்
சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்
வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி
வளமான புத்திரர்கள் அரசர்நேசம்
கூறப்பா புரிவனடா சத்துருங்கன்
கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.


இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் இனன் என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக அமைந்து மூர்க்கனாக விளங்குவான் என்றும் கூறுவாயாக. 

இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம்



கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு
கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில்
ஆரேனீ ஆதித்த னிருந்தானானால்
அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு
சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய்
சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும்
கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே
கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே


சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் [இலக்கினத்திலிருந்தது] அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும் என்று கிரகநிலையை நன்கு ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக. 

இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 2,3,4,7,5 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்



கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன்
கனமுள்ள தனலாபம் கேந்திரகோணம்
ஆளப்பா அகம்பொருளும் நிலமுங்காடி
அப்பனே கிட்டுமடா கறவையுள்ளோன்
சூளப்பா சுகமுண்டு ஜென்மனுக்கு
சுயதேச பரதேச அரசர்நேசம்
கூளப்பா கொடியோர்கள் சேர்ந்துநோக்க
கொற்றவனே கலைகண்டு கூற்ந்துசெப்பே


அமிர்த கலையை அள்ளி வழங்கும் சந்திர பகவானின் பெருமையையினை இனிக் கூறுகிறேன் கேட்பாயாக! மிகுதியான நன்மை தரும் இரண்டாம் இடத்திலும் இலக்கினத்திற்குப் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும், மற்றும் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களிலும் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானத்திலும் சந்திர பகவான் நிற்பாரேயாகில் நல்ல மனையும், நிறைந்த தன வருவாயும் நிலமும், விளை வயலும் கன்று காலிகளும் நிரம்ப வந்தடையும். இச்சாதகனுக்கு மெத்த சுகம் உண்டென்றும் சுயமான தேசத்திலும் பிற தேசத்திலும் வாசஞ்செய்யும் போதும் அரசினரால் ஆதாயம் மிகவும் உண்டாகும்.எனினும் தீயகோள்களை தங்கள் தீட்சண்யமான பார்வையில் நோக்குதலின் உண்மையறிந்து சந்திர பகவானின் கலை தீட்சண்யம் அறிந்து பலன் கூறுக. 

இப்பாடலில் சந்திரன் இலக்கினத்திலிருந்து 1,4,7,10, 1,5,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 43 - சந்திரன் 3,7,5,11 ல் தரும் யோகம்



சூடப்பா சந்திரனார் மூன்றேழ்ஐந்து
சுத்த இந்து பன்னொன்றில் தனித்திருக்க
மாடப்பா மந்திரங்கள் செய்வன் காளை
மகத்தான வாதமொடு வயித்தியம் செய்வான்
கூடப்பா குடும்பமது விருத்தியாகும்
குவலயத்தின் எதிரிக்கு மார்பிலாணி
வீடப்பா போகருட கடக்ஷத்தாலே
விதியறிந்து புவியோர்க்கு விளம்புவாயே.


எல்லாராலும் போற்றப்படும் சந்திரபகவான் 3,7,5,11 ஆகிய இடங்களில் தனித்திருக்க, அச்சாதகன் செல்வமுள்ளோன் என்றும் மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பவன் என்றும் வாதம் செய்வதில் வல்லவன் என்றும் வயித்திய சாத்திரத்தில் சிறந்தோன் என்றும் அவனது குடும்பமானது என்றும் விருத்தியடையும் அவனது எதிரிகள் அழிவர் என்றும் எனது சற்குருவான போகரது கருணையாலே புலிப்பாணி அருளியதை புவியோர்க்கு உணர்த்துவாயாக. 

இப்பாடலில் சந்திரன் இலக்கினத்திலிருந்து 3,7,5,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம்


கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து
கனமுள்ள தனலாபம் ஆறில்நிற்க
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் செம்பொன்
அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்
சூளப்பாரு குடித்தலைவன் சத்துருபங்கன்
கொற்றவனே வகையாகப் பகர்ந்து சொல்லே


புலிப்பாணி ஆகிய நான் சொல்லும் இக்குறிப்பினையும் நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக! செவ்வாய் கிரகமானது 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின், அவனுக்கு மனை வாய்த்தாலும், செம்பொருட்சேர்க்கையும், சிறந்த நிலமும்,செம்பொன்னும் கிட்டுமென்றும், செய்தொழில் விருத்தியுடையவன் என்றும் பல குடும்பங்களைக் காக்கும் தலைவன் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் வீரனென்றும் மற்றைய கிரக நிலவரங்களை ஆராந்து கூறுவாயாக. 

இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி

No comments:

Post a Comment