jaga flash news

Sunday, 8 May 2016

ஆதிசங்கரரின் தாய் பாசம்ஆதிசங்கரரின் தாய் பாசம்
ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள ஆதிசங்கரருக்கு மனம் ஒப்பந்தம் அளிக்கவில்லை.
ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார், “தாயே! என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் துறவறம் மேற்கொள்ள நீங்கள் அனுமதி தந்தால் அது என்னை விட்டு விடும்”. ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒப்புதல் அளித்தார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)
கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி ” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார். உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ”உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”.
ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார். அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஜகத்குருவான ஆதிசங்கரர், ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -
“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே! நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன். எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே. அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே. தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவனே, கிருஷ்ணனே, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? தாயே உன்னை வணங்குகிறேன்.”

1 comment:

 1. Newbie ( உறவுகள் ).

  ஆடம்பரமாய் கட்டித் தந்த வீட்டை விட, உன் சேலையில் கட்டித் தந்த வீடு தான் ஆனந்தத்தை தந்தது அம்மா. என்னைப் 10 மாதங்கள் கருவறையில் சுமந்தவள் என் தாய் என்றால், என் தாயையும் சேர்த்து என்னையும், தன் நெஞ்சில் சுமந்தவர் என் அப்பா.
  நினைத்தபோது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாதபோதும் உன்னை நினைத்துக் கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள். பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளைத் தக்கவைப்பதை விட உண்மையைச் சொல்லித் தனிமர
  மாகவே இருப்பது மேல்..மனசாட்சி மட்டுமாவது கடைசிவரை கூடஇருக்கும்.

  தோற்றுப்போனால் வெற்றி கிடைக்கும்.
  அம்மாவிடம் தோற்றுப் போ, அன்பு அதிகரிக்கும். அப்பாவிடம் தோற்றுப் போ.. அறிவு மேம்படும். துணைவி
  யிடம் தோற்றுப் போ..மகிழ்ச்சி இரட்
  டிப்பாகும். பிள்ளைகளிடம் தோற்றுப்
  போ..பாசம் பன்மடங்காகும். சொந்தங்களிடம் தோற்றுப் போ.. உறவு பலப்படும். நண்பனிடம் தோற்றுப் போ நட்பு உறுதிப்படும்.

  ஆகவே தோற்றுப் போ.. தோற்றுப் போனால் வெற்றி கிடைக்கும். கோபத்தில் விலகி இருந்தாலும் தன்னால் நேசிக்கப்பட்ட உறவின் மனதை நோகடிக்காமல் பார்த்துக் கொள்ளும் உறவுகள் யாருக்கும் சுலப
  மாக கிடைப்பதில்லை.

  தேடிப் போய் பேசினால் அவமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால் தான் தொலைத்து விடுகிறோம் பல உறவுகளை. உறவுகள் மனதில் சில உறுத்தல்களோடு சேர்ந்திருப்பதை விட சில நல்ல நினைவுகளோடு பிரிதலே சிறந்தது.

  தேவைக்காக பூக்கள் மீது உட்காரும் பட்டாம்பூச்சி போல தான் சில உறவுக
  ளும் தேவைக்காக நம்மிடம் ஒட்டிக்
  கொள்ளும். வேலை முடிந்ததும் பறந்து விடும்.

  ஆகவே, உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன்


  *அம்மா*.

  ReplyDelete