jaga flash news

Sunday, 15 May 2016

தமிழ்க் கடவுள்

ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.
வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம்.
சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும்.
கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி.
அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள்.
உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.
விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.
பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது.
தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும். ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும்.
இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம்.
அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது பெற வேண்டும். அதற்கு ஒரு நாள் இரண்டு நாள் போதாது, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முருகனது அருளைப் பெற முதலில் நாம் இதுவரை செய்து வந்த, உயிர்க்கொலை செய்து புலால் உண்பதை நிறுத்த வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் ஆகியவற்றிலும் சைவமாக இருப்பதோடு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் வேளைக்கு குறைந்தது பத்து நிமிடமேனும் “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாது நாமஜெபங்களை மந்திரங்களாகச் சொல்லி உரு ஏற்றி வருவதோடு மாதம் குறைந்தது ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கட்டாயமாக செய்வதுடன் ஜீவதயவை மனதினுள் பெருக்கி எவ்வுயிர்க்கும் தீங்கு நினைத்திடாத மனதினையும் பெற்று முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனம் உருகி தொடர்ந்து பூஜை செய்ய செய்ய, முருகனருள் கூடி அனைத்தையும் பெற்று இறுதியில் முருகன் நம்மை சார்ந்து வழிநடத்திட சேராத கலைகளை சேர்த்து பெற முடியாத மரணமிலாப் பெருவாழ்வையும் முருகனருளால் பெற்று அழிவிலாத நித்திய வாழ்வை வாழலாம்...................
காரண குருவான கந்தனைப் போற்றிட
காரிய உடம்புள்ளே காணலாம் உண்மை.
படிநிலையானது நான்கானது என்றும், அவற்றினிலே சரியை என்ற நிலையினிலே தன்னை நோக்கி வருகின்ற விருந்தை உபசரித்தும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் உலக உயிர்களுக்கு தம்மால் ஆகிய உபகாரங்களை செய்தும், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தும், உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், ஜீவகாருண்ய நெறி நின்றும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலாகிய தூயநெறியில் நின்று தேறி கிரியை என்ற நிலையிலே நின்று மனித தன்மைக்கும் அப்பாற்பட்ட சக்தி உண்டென்றும் அந்த சக்தியே கடவுள் என்றும் கடவுள் உண்டென்று நம்புதலும் அந்த கடவுளை அடைந்திட வேண்டியே பக்தி செலுத்துதலும் கடவுளை அடைந்திட ஏதுவாக உள்ள வகையினிலே சான்றோர்களை போற்றுதலும் வணங்குதலுமாய் இருந்துமே அடியவர்கள் தம்மை பாதுகாப்பதுடன் கடவுள் வழிபாட்டையும் செய்து வருதலும் கடவுள் தன்மை அடைய உதவிடும் உண்மை சாதுக்களின் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு சாதுசங்க தொடர்பினை விடாது பற்றி அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முயற்சிகளை விடாது செய்தும் அவரவரால் இயன்ற அளவு ஞானிகள் கூறின, மார்க்கம்தனிலே தவதான தருமங்களை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முயலுதலும், ஆக இவ்விதம் செய்து கிரியையை முடித்து, யோகமார்க்கம் தனிலே வருகையுற்று யோகநிலை என்ற நிலையடைந்து கசடான மனித தேகத்தின்கண் உள்ள நீங்காத கசடை நீக்குதற்கான ஞானபண்டிதரால் வகுத்தும் தொகுத்தும் அளிக்கப்பட்ட வாழையடி வாழையென திருக்கூட்ட மரபினை சார்ந்திட்டவர்க்கு மட்டுமே புலப்படும்படியானதொரு அற்புத கலைதனை யோககலைதனை பக்குவம் பெற்றுமே அறிந்திடல் வேண்டும்.
யோகம் என்பதே மூச்சுக்காற்றையும், அதன் இயக்கத்தையும், அதன் வெளிப்பாடையும், அதன் இரகசியத்தையும், அதன் பயன்களையும் அறிந்து யாருக்கும் எந்த சக்திக்கும் கட்டுக்கடங்காத வாசியெனும் மூச்சுக்காற்றின் இயக்கத்தை கட்டுக்குள் அடக்கி ஒடுங்கிட செய்தலாம் என்ற உண்மை அறிந்து நாசியின் இடது பக்கம் வருகின்ற இடகலை காற்றையும், நாசியின் வலதுபக்கம் ஓடுகின்ற வலகலை காற்றையும், சுழிமுனையாகிய புருவமத்தியில் ஒடுங்கிடச் செய்திடல் வேண்டும். அதை செய்திட அதிகாரம் பெற்றிட்டவர் யோகநாதனாம் முருகப்பெருமான் ஒருவர் மட்டுமே என்ற அதிநுட்ப சூட்சும இரகசியத்தை உணர்ந்திடல் வேண்டும்.
யோகம் என்பது ஆதிதலைவன் ஆறுமுகனாம் யோகநாதனாம், யோகமூர்த்தியாம், முருகப்பெருமானாரால்தான் செயல்படுத்திட இயலும் என்றும் அதற்குரிய சாதனங்களை அவரவர் தகுதிக்கேற்ப அவனே அருளுவான் என்றும், அவனருள் இல்லையேல் யோகம் இல்லையென்றும் உணர்தல் வேண்டும்.
உணர்ந்து யோகம் கற்று ஞானம்தனை அறிந்திடவே அயராது ஊன் உருகி உருகி உருகி, மனம் கசிந்து கசிந்து கசிந்து, நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆற்றி அரற்றி தலைவன் மனம் குளிர நடந்து நடந்து, ஞானியர் நெஞ்சம் நெகிழ்ந்து கரைந்திட பக்திதனை செலுத்தி செலுத்தி, குருவிசுவாசம் மிகுதிபட நடந்து நடந்து, குருநாதன் முருகன் தம்முள் கலந்து நமக்கு உடலைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவித்து உடலையும் உயிரையும் தூய்மையாக்கி, செம்மையாக்கி, உடல்உயிரை சேர்த்து, பிறவாநிலை தனை அடைந்திடல் என்றொரு நிலைதனை அடைந்திடல் வேண்டும்.
இப்படி நான்கு படித்தர நிலைகளிலே மனிதன் பன்னெடுங்காலம் அயராது பாடுபட்டு இறையருள் துணையுடனே சரியை நிலையும் கடந்து, கிரியை நிலையையும் கடந்து யோகநிலைதனை அடைந்து இறைவனாம் முருகப்பெருமான் தனிப்பெரும் தயவினாலே அந்த சாதகன் அவன்தன் தனது சாதக இருநிலைகளாம் முன்பு செய்த சரியை, கிரியை தனிலே அளவிலாது செய்திட்ட தானதவ பலன்களாலே, பக்தி விசுவாசத்தாலே, புண்ணிய பலத்தாலே ஞானிகள் அருள்பலத்தாலே, ஞானகுருவின் அண்மையாலே, தீவினைகளை குறைத்திட்டதாலே, உலக ஜீவர்களது ஆசியினாலே உயிர்க்கொலை துறந்ததாலே, பற்றுகளை துறந்ததாலே அவர் தமக்கு ஞானம் அடைதற்கு சாதகமாய் அதன் சாதனமாம் யோகம்தனை யோகஞானத்தலைவன் முருகப்பெருமானே முன்னின்று அருளுவான், அந்த சாதகனுக்கு ஞானியர் புடைசூழ யோகம்தனை. இப்படி திருஞான திருக்கூட்ட மரபினர் ஒன்று கூடிட எல்லாம்வல்ல ஞானத்தலைவன் சாதகன் தனக்கு யோகமளித்து அவர்தமக்கு வாசியின் சூட்சுமங்கள் உணர்த்தி வாசியாம் பரம்பொருளை அவன் தன்னுள்ளே இருத்தி புருவமத்தியாம் சுழிமுனைக் கதவை திறந்து செலுத்தி அடைத்து அவன்தன் தேகத்தினின்று அடைக்கப்பட்ட ஓரங்குல காற்று உருதரித்த நாடிதனிலே செலுத்தி மீண்டும் வெளியேறா வண்ணமே பாதுகாத்து வாசிப்பயிற்சிதன
ை செய்திட செய்திட அக்காற்றே அளவிறந்த சக்தியுடையதாய் மாறி பெரும் ஆற்றலாய் மாறியே பெருங்கனலாய் மாறி மனிததேகத்தை சுட ஆரம்பிக்கும்.
அப்படி தவம் தணலாய் சுடுகின்ற அந்த மூலாக்கினியில் மனித தேகத்தின்கண் உள்ள பிறவிக்கு காரணமாக உள்ள அசுத்த சுக்கிலத்தை தாக்கி தாக்கி சுத்தப்படுத்த முயற்சிக்கும்.
ஆயினும் தாய்தந்தையரால் பெறப்பட்ட இந்த தேகத்தில் சுத்த சுக்கிலம் ஊறாது. ஆயின் ஒவ்வொரு அணுக்களிலுமே இயற்கையின் அதீத சக்தியினால் காமக்களிம்பு விடாது பற்றியுள்ளதால் அந்த அணுக்களிலிருந்த
ு தோன்றும் சுக்கிலமும், காமக்களிம்புடனே இருக்கின்றபடியாலே காமக்களிம்பை நீக்கிட ஞானத்தலைவனே சாதகன் உடலைச் சார்ந்து வழிநடத்தி உடல் அணுக்களிலே உள்ள காமக்களிம்பை தன்மூலக்கனல் கொண்டு சாதகன் மூலக்கனல் உதவியுடன் மிகமிக மெதுவாக அணுக்களை சூடேற்றி சூடேற்றி அணுக்கள் வெப்பமாகிடும்படியாக அதேசமயம் அணுக்கள் செத்துவிடாமலும் செய்து செய்து அணுக்களை சுத்தப்படுத்துவான்.
எப்பொழுது அணுக்கள் சுத்தமாகின்றதோ அதுவரை அதனின்று ஊறும் சுக்கிலம்தனை கட்டமாட்டார்கள் யோகிகள்.
இது அந்த ஞானக்கூட்டத்தினருக்கு மட்டுமே தெரியும். அவ்விதம் இல்லாமல் மீறி சூட்சுமம் அறியாமலேயே அசுத்த சுக்கிலத்தை கட்டினால் அசுத்தமாகிய சுக்கிலம் ஆர்ப்பரித்து எழுந்து உடம்பை விஷமாக்கி அதீத காமத்தை உண்டு பண்ணுவதோடு அந்த சாதகனை எந்த சுக்கிலம் பிறவாமையை தரவல்லதோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.
ஆதலின் அதுவரை யோகியர் தேகத்துள் தூயதேகம் பெறுமளவும் ஊறும்.
சுக்கிலம்தனை இறைவனருளால் ஞானபண்டிதன் சார்ந்து உடலை சார, அசுத்த சுக்கிலம் ஒட்டாது செய்து புறந்தள்ளி விடுவான்.
இப்படி அதிலுள்ள இரகசியங்கள் இருக்க இவ்வுலகினிலே நூறுக்கும் சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு தனக்கு தெரியாத யோகப்பயிற்சிகளை ஏதோ சில ஞானநூல்களை அதன் உண்மைப் பொருளுணராது படித்து, கற்று தேர்ந்தவர் போல பசப்பி, மக்கள் மனம் கவர்ந்து, சொல்வதை நம்பி இல்லறத்தான் சென்று அசுத்த சுக்கிலத்தை உடம்பினுள் தவறான யோகப்பயிற்சிகள் மூலம் கட்டுவானேயானால் அதனால் உடல் உஷ்ணம் காமக்கனலும், யோகக் கனலுமாய், உடல் உஷ்ணம் அளவு கடந்து ஏறி தலைபாரம் ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்பட்டு அசுத்த சுக்கிலம் உடலில் தங்கி உடம்பு நாற்றமெடுத்து விஷமாகி இறந்தும் போவான். அன்பு கொண்டு எச்சரிக்கை செய்கிறேன் மக்களே! விந்து கட்டுதல் ஆறுமுகனார் அருள் பெற்ற யோகிகளுக்கு மட்டுமே உகந்ததாகும். மற்றைய சாதாரண இல்லறவாசிகளுக்கோ, ஆசி பெறாத வாலிபர்களுக்கோ உகந்தது அல்ல. பக்தி செலுத்துங்கள் ஆறுமுகனார் திருவடியைப் பற்றி! அவன் உணர்த்துவான் உங்களுக்கு!
“முருகா! முருகா!! முருகா!!!” என்றே மனம் உருகி பூசிப்போம் யோகத்தின் இரகசியம் அறிந்து தேறுவோம்

2 comments:

 1. அய்யா வெ. சாமி அவர்களே! தமிழ் கடவுள் பற்றி, அழகாக கூறியுள்ளீர்கள். மிகவும் அருமை.

  ReplyDelete
 2. என் அப்பன் முருனைப்பற்றி எனக்கும் எழுத ஆசை. பலரும் அறியாத பல அற்புத ரகசியங்கள்.

  சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்று கருதப்படும் இவர், பல்லாயிரம் ஆண்டுகள் இளமையோடு வாழ்வதற்கான யுக்தியை அறிந்து, அழகான குமாரனாக, பூத உடலுடன் இந்த பூமியில் வாழந்து காட்டிய
  வர். அதனாலேயே இவருக்கு *குமரன்*
  என்றொரு பெயரும் உண்டு. *தமிழ் மொழியை* வடிவமைத்த கடவுள் இவரே.
  அதனாலேயே இவரை *தமிழ் கடவுள்* என்று அழைக்கிறோம். *சரம்* என்றால் *மூச்சு* என்று பொருள். சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்,
  காலனையும் வெல்லலாம், கடவுளையும் காணலாம் என்பது இவரது தத்துவம்.
  சரத்தை வயப்படுத்திக் காட்டியதாலே இவருக்கு *சரவணன்* என்ற சிறப்பு பெயர் வந்தது.

  சிவனின் நெற்றி கண்ணில் இருந்து வெளிப்பட்ட பொறிகள் பொய்கை நதியில் பட்டதும், அவை *ஆறு குழந்தைகளாக மாற* அந்த ஆறு குழந்தைகளும் *கார்த்திகை பெண்களிடம்* வளர்ந்து வர
  பின் ஒரு நாள் அந்த ஆறு குழந்தைகளுக்
  கும் *தாயான பார்வதி தேவி* அந்த ஆறு
  குழந்தைகளையும் ஒருசேர அணைக்கை
  யில், *பன்னிரு கரங்களோடும், ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார் என்கிறது கந்த புராணம்*.

  ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம். ஆனால் அந்த மொழியின் கடவுளுக்கோ * 2 * மனைவிகள் என்று சிலர் கேலி செய்வதுண்டு. ஆனால் உண்மையில் முருகனுக்கு இரண்டு மனைவிகள் உண்டா என்றால் இல்லை.
  ஏனென்றால், ஒரு மனிதனின் தலையில் இருந்து கால்வரை உள்ள ஒற்றை உறுப்
  புகள், 1) நெற்றி (பிரம்மந்திரா)
  (2) தொண்டைக்குழி (ஆங்ஞை)
  (3) மார்புக்குழி (விசுத்தி)
  (4) தொப்புள் குழி (மணிப்பூரம்)
  (5) ஆண்/பெண் குறி (சுவாதீஸ்டன்)
  (6) மலைக் குழி (மேல் மூலாதாரம்) இந்த
  ஆறு குழிகளையும், ஒரு நேர்கோட்டால்
  இணைத்தால் வரும் மையக்கோடே *சுழுமுனை* என்பதாகும். இந்த நேர்கோட்
  டிற்கு இடப்புறமும்,வலப்புறமும் உள்ள அவயவங்களை இயங்கச் செய்வது இந்த *சுழுமுனையே*.

  இந்த சுழுமுனையே *முருகன்*. இதற்கு
  *இடப்புறமும், வலப்புறமும் உள்ள, அவயவங்களே வள்ளி, தெய்வானை*. ஆக மனைவியர் என்பது ஒரு *குறியீடே.*
  மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்
  டால், இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய *ஞானத்தினையும்* அறிந்து கொள்ளலாம். எனவே தமிழ்கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு *வேதாந்த ரகசியம்*.

  சகோதர சகோதரிகளே, உங்கள் குழந்தைகளுக்கும், முருகப்பெருமானுக்கு
  இரண்டு மனைவி என்று சொல்வதற்குப் பதிலாக, இந்த வேத ரகசியத்தைக் கூறி, முருகனுக்கு இரண்டு மனைவியர் என்று அறிமுகப்படுத்துங்கள்.

  *என்றும் நட்புடன்.. ஜான்ஸி கண்ணன்.*

  ReplyDelete