jaga flash news

Saturday, 10 December 2016

குரு”

உடலை வளர்க்க உதவியவர் பெற்றோர். அறிவை வளர்க்க உதவியவர்கள் ஆசிரியர்கள்.
உணவு செரிக்கும் வரையிலும், உடல் மரிக்கும் வரையிலும் உதவும்
ஆனால் ஆசிரியரால் கல்வி கற்றதன் பயன் பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து துணை செய்யும்.
அறிவு வளர்ச்சிக்கும், தெளிவிற்கும் அடிப்படைத் துணையாக அமைந்திருப்பது ஆசிரியர் புகட்டும் கல்விப் பயிற்சிதான்.
கல்விக்குத் தொடர்பானது அறிவு; அறிவுக்கு தொடர்பானது உடல், உடலுக்குத் தொடர்பானது உயிர். உயிருக்குத் தொடர்பானவர் ஆண்டவன்.
இந்த ஆண்டவனைக் கல்வியறிவினால் உணர்த்துபவர் ஆசிரியர் {குரு} ஆகவேதான் ஆன்றோர்கள் ஆசிரியரைச் சர்வத்துக்கும் காரணனாக விளங்கும் ஆண்டவனுக்குச் சமமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
“குரு” என்பதற்கு அஞ்ஞானத்தை நாசம் செய்பவர் என்பது பொருள்.
நன்னெறியைத் தாமும் கடைப்பிடித்துத் தம்மை அணுகும் மாணவனையும் நன்னெறியில் நிறுத்துபவரே குரு எனப்படுகிறார்.
வேதாத்யயனம் செய்தவராகவும், அதன் உட்பொருளை அறிந்தவராகவும், துவேஷமில்லாதவராகவும், மந்திரமறிந்தவராகவும், ஆசார்ய பக்தியுடையவராகவும், விஷேசமாகப் புராணங்களைப் படித்தவராகவும் ஒருவித பயனையும் கருதாமல் போதிப்பவராகவும், பணத்திற்காகவோ, புகழுக்காகவோ, பெருக்காகவோ கற்பிக்காமல் சீடனிடம் கருணையினால் மட்டும் உபதேசிப்பவராகவும் இருப்பவரே குரு எனப்படுகிறார்.
குருமார்களில் இரண்டு வகையுண்டு:
1, காரியகுரு. 2, காரணகுரு.
தம் வாழ்வின் காரணமாக சமய தீட்க்ஷை. சரியை, கிரியை, யோகங்களைப் பற்றிய போதனைகள்; கர்ம காண்ட விதிப்படி ஏற்பட்டுள்ள சடங்குகள் ஆகியவற்றைச் செய்பவரே காரிய குரு எனப்படுகிறார்.
ஒரு கைம்மாறும் கருதாமல் கருணையால் நமது அறியாமையைப் போக்கி-ஞானத்தைத் தந்து-பிறவிப் பெரும்பிணியைப் போக்குபவரே காரணகுரு எனப்படுவார்.
“மானிட தேகமே முக்தி அடைவதற்கு அனுகூலமானது இறைவனை ஊக்கத்துடன் உற்று உணர்வதற்கு இந்த உடல் துணை புரிவதால் இதுவும் குருவுக்கு ஈடானது” என்று தமிழ் பாகவதத்திலுள்ள ஒரு பாடலில் சுகப்பிரம்ம ரிஷி பரிட்சித்து மனன்னிடம் கூறுகிறார்.
பக்தியில்லத பூஜையும், அரசனில்லாத நாடும், தானம் செய்யாத கைகளும், விசுவாசமில்லாத நட்பும், வீபூதியில்லாத நெற்றியும் விரும்ப தக்கவையல்ல.
அதேபோல குருநாதனில்லாத மாணவனும் நற்கதி சேர மாட்டான்.
ஜகத்குரு ஆதிசங்கரரே சற்குருவை நாடினாரென்றால் நாம் எம்மாத்திரம்?
ஏட்டில் இருப்பதை நாம் சுலபமாகப் படித்துத் தெரிந்துகொள்ள முடியாதா? ஆசிரியர் துனை எதற்கு? என்று நினைப்பது அறிவீனம்.
ஆற்றைக் கடக்க வேண்டுமென்றால் படகோட்டுபவனைக் கொண்டுதானே கடக்க வேண்டும்? அதுபோல் சத்குருவின் துணையால்தான் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும்.
துருவாசர் முதலியவர்கள் விதுரனிடம் ஞானோபதேசம் பெற்றார்கள் என்றும், திருத்துறையூரிலிருந்த சகலாகம பண்டிதர் என்னும் அருணந்தி சிவாச்சாரியார் திருவெண்ணைய் நல்லூரிலிருந்த மெய்கண்ட தேவரிட்த்தில் ஞானோபதேசம் பெற்றார் என்றும் அறிகிறோம்.
நல்ல நூலகளை உழைத்துப் படிக்க வேண்டும். உயர்ந்தோர் இனக்கம் வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இவையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால் ஒரு பெண், தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளைவரம் கேட்ட கதை போலாகும்” என்று பதிபசுபாச விளக்கம் கூறுகிறது.
ஒருவன் தனித்துப் படிப்பதால் புத்தி நுட்பம் பெறலாமே தவிர ஞானம் பெற முடியாது.
நல்லாசிரியன் ஒருவரை நாடிப் பெரும் கல்வியே ஞானத்தை எளிதில் பெற்றுத்தரும்.
அத்தகைய ஆசிரியரை அடைந்தவர்கள், தம்முடைய உடலாலும் மனதாலும் பொருளாலும் வாகினாலும் அவருக்குத் தொண்டு செய்ய வேண்டும்.
அதாவது, ஆசிரியன் கட்டளையை மீறாமல் நடப்பது உடலால் செய்யும் தொண்டாகும். ஆசிரியரின் வடிவத்தையே தியானித்திருந்தல் மனதால் செய்யும் தொண்டாகும்.
“தெளிவு குருவிரு சிந்தித்தல் தானே_திருமூலர்.
“உற்றுழி உதவியும் உற்பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே._புறநானூறு.
ஆசிரியரின் குணநலங்களைப் புகழ்ந்து சொல்லுதல் வாக்கினால் செய்யும் தொண்டாகும்.
மேலும் ஆசிரியரைக் கண்ட்தும் அன்பு பெருகும் உள்ளத்தோடு கைகுவித்து வணங்க வேண்டும்.
“ஆசானைக் காண்தோறும் அன்பு பெருகும் உள்ளத்தோடு கைகுவித்து வணங்க வேண்டும்.
ஆசானைக் காண்தோறும் அன்புருகக் கைகுவியும்.”_ சிவஞானப்பிரகாச வெண்பா.
“ஆசாரியரை “உம்” என்று அதட்டிக் கூறியவர், பிணம் சுடுகிற சுடுகாட்டில் மரமாக முளைத்து நாய் நரி கழுகுகளுடன் ஒன்றாக இருக்க நேரிடும்” என்ற உண்மையைப் பின்வரும் பாடலால் அறிக:
“குருவை உம்மெனக் கூறுவர்...எரிசுடலையிற்பெருந்த தருவாகியேயிருந்து, திரிகழுகுகள் முதலன சேரவாழுவரே.”_ஆத்ம புராணம்.
இன்னும் “ஆசாரியன் மனம் நோவச் செய்தவர்கள், ஊரில் நாயாகவும், யுகாந்திரகாலம் புழுவாகவும் மண்ணில் கிடக்க நேரிடும்” இந்தக் கருத்துக்கள் அடங்கிய திருமூலரின் திருவாக்கிலிருந்து வெளிவந்த பின்வரும் அமுதப் பாடல்களை என்றும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
“ ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங்கோர்யுகம் பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே.
“ மந்திரம் ஒன்றை உரைசெய்த மாதவர் சிந்தையில் நொந்திட்த் தீமைகள் செதவர், பிந்திச் சுணங்கனாய்ப் பிறந்தொரு நூறுரு வந்து புலையராய் மாய்வர் மண்ணிலே.

3 comments:

 1. மாதா, பிதா, குரு தெய்வம். அவர் மலரடி தினம் தினம் தொழுதிட செய்வோம், மாதா, பிதா, குரு தெய்வம் என்று அழகான ஒரு பாடல் உண்டு.

  ReplyDelete
 2. திருக்குறள் :2.

  கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறி
  வன்
  நற்றாள் தொழாஅர் எனின்.

  Explanation : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர் படித்ததினால் பெற்ற பயன் தான் என்ன ?

  ReplyDelete
 3. குரு தலைப்புக்கு ஒரு கதை:

  குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்
  தது. யாருக்காவது ஏதேனும் சந்தேகங்
  கள் இருந்தால் கேட்கலாம் என்கிறார் குரு.

  ஒரு மாணவன் உடனே எழுந்து, குருவே
  அனைத்தும் அறிந்த இறைவன், நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்
  காமல், கஷ்டங்களை சந்திக்காமல், அவன்
  அருளை பெறவே முடியாதா என்று கேட்கி
  றான். நல்ல கேள்வி, இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன் என்று கூறுகிறார் குரு. மறுநாள் மாணவர்கள், ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.

  மாணவர்களுக்கு முன்னால் 2 மண்ணால்
  செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
  இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா
  என்று குரு மாணவர்களை கேட்கிறார்.
  தெரியவில்லை.
  ஆனால் இரண்டிற்கும்
  ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

  மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை
  கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார், அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

  ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ, அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும்வரை, அதற்குள் என்ன இருந்தது
  என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே,என்று நினைத்துக் கொண்டீர்கள்.
  வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன்,உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.

  *இறைவன் நமக்கு தரும் சோதனைகளும், இப்படித்தான்.*

  நாம் சோதனைகளை சந்திக்கும்வரை, சகஜமாக, நல்லவர்களாக இருக்கிறோம்.
  ஆனால் சோதனையை சந்திக்கும்போது தான், நமக்கு உள்ளே இருக்கும், நமது உண்மையான குணம் வெளியே வருகிறது
  நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது.

  நமது உண்மையான குணத்தை, பரீட்சிக்கவே, இறைவன் சோதனைகளை தருகிறான் என்றார்.

  இறைவன் நம்மை சோதிப்பதும், சீண்டுவதும், நமது உண்மையான குணத்தை *நாம் அறியவே, அவனறிய அல்ல* அவனுக்குத்தான் உள்ளே இருப்பது, சந்தணமா, சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படிச் செய்வது, நம்மை நாமே தெரிந்துகொள்ள.
  நம்மைநாம் அறிந்துகொண்டால்தான், நம்மைத் திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில், நமது தவறுகளை திருத்திக்கொள்ள, நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும். அடுத்தமுறை,
  ஒரு மிகப்பெரிய சோதனையை சந்தித்தாலோ (R) வாழ்க்கையில் இடறி
  விழுந்தாலோ (R) எவரேனும் உங்களை சீண்டினாலோ, உங்களது (Reaction) எப்படி இருக்கும்?

  *தேனின் பொறுமையும், கனிவுமா? (R) சாக்கடை நீரின் கோபமும், அருவருப்புமா"

  ReplyDelete