jaga flash news

Thursday 13 July 2017

*பாவத்தின் தந்தை யார்?*

    *பாவத்தின் தந்தை யார்?*
    அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது.
    பாவத்தின் தந்தை யார்?
    அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான்.
    அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.
    பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
    யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?
    அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.
    வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர்.
    நாட்கள் கழிந்தன.
    ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!
    அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்.
    “என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
    பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.
    “அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்.
    பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
    இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!
    “பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்.
    “சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்.
    அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
    தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.
    “என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.
    பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!
    “சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.
    “வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.
    “சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பைப் பாருங்கள். அதை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.
    பண்டிதர் அவர் மார்பகங்களைப் பார்த்தார். அதில் அலங்கரிக்கும் வைர மாலை அவர் கண்களைக் கவர்ந்தது.
    “சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் அமர்ந்தார்.
    ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.
    பண்டிதர் துடிதுடித்துப் போனார்.
    “இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை, பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?” தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது.
    அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது.
    கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்.
    சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டாது” என்று கத்திக் கொண்டே ஓடலானார்.
    நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.
    “மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்.
    “மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.
    “ஆஹா! பாவத்தின் தந்தை ஆசையா? பேராசையா. சரியான் பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை ந்ண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.
    “நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுற்க்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.
    ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்!
    [
    *தினம் ஒரு திருக்கோவில்*
    அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்!
    🌀 அம்மன் என்றாலே பெண் தெய்வம் தான். அதனால் பெண்கள் அனைவரும் அம்மனுக்கு விரதம் இருந்து பல விதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். ஆனால் கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலத்திலுள்ள அருங்கரை அம்மன் ஆண்களுக்கு மட்டுமே அருள் புரிகிறார்.
    *தல வரலாறு*
    🌀 முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். ஒருசமயம் ஒரு மீனவர் ஆற்றில் வலைவீசிய போது, அம்மன் சிலை உள்ள பெட்டி ஒன்று சிக்கியது. அம்பாள் தனக்கு அருள்புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாக கருதிய மீனவர்கள் ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்து வழிபாடு செய்து வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது.
    🌀 பெட்டி இருந்த இடத்தில் சிறிய மேடு மட்டும் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் நல்லதாய் என்ற சிறுமி, மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டு வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது. அதன் மீது அவள் அமர்ந்தாள். அதன்பின் எழவில்லை.
    🌀 மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது, சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர். அங்கிருந்து வர மறுத்த சிறுமி அவர்களிடம், நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன். என்னைக்கண்ட இந்த நாளில், இதே நேரத்தில் மட்டும் எனக்கு பு+ஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள். பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது.
    தலச் சிறப்பு :
    🌀 சிறுமியை தேடிய ஆண்கள் இப்பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை என்பதால், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோவில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பு+ஜை நடக்கிறது.
    🌀 பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.
    அம்பாளுக்கு பு+ஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பு+ஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோவில் முன் மண்டபத்தில் இருந்து சு+ரை விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலைத்தலைப்பில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.
    பிரார்த்தனை :
    🌀 இங்கு பிரார்த்தனை செய்யும் ஆண் மகன்கள் தங்கள் குடும்பங்கள் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக் கொள்கின்றனர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அன்னதானம் தருகின்றனர்.
    *மாடத்தி #அம்மன கோயில் பன்னம்பாறை*
    திருச்செந்தூர்-சாத்தான்குளம் வழியில் இருக்கிறது பன்னம்பாறை.
    இங்கு தனது சகோதரர்களால் கௌரவ கொலை செய்யப்பட்ட மாடத்தி, தெய்வமாக வணங்கப்படுகிறாள். பன்னம்பாறை கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்துவந்தார் முருகேச பாண்டியன். இவரது மனைவி முத்துபேச்சியம்மாள். இவர்களுக்கு வரிசையாய் ஏழு ஆண் குழந்தைகள். குலதெய்வம் சுடலைமாடனின் அருளால் எட்டாவதாக மகள் பிறந்ததால் மாடத்தி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.
    மாடத்திக்கு வயது பத்து முடியும் தருவாயில் பெற்றோர் இருவரும் ஒருவர்பின் ஒருவராக மாண்டுபோனார்கள். பெற்றோர் இல்லாத குறையே தெரியாதபடி, ஏழு அண்ணன்மார்களும், அண்ணியரும் மாடத்தியை செல்லமாக வளர்த்து வந்தனர். மாடத்தியின் அண்ணன்மார்கள் நாட்டாண்மை செய்துவந்தனர். மாடத்தி பருவமடைந்தபோது பன்னம்பாறையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர்கள் தனது மகனுக்கு பெண் கேட்டு, மாடத்தியின் அண்ணன்மார்களைத் தாம்பூலத் தட்டோடு வந்து பேசினர்.
    அவர்களை மரியாதையோடு வரவேற்ற மூத்த அண்ணன், தங்கைக்கு இன்னும் ஓராண்டு கழித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் கூறியிருப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தான். ‘உள்ளூர் சம்பந்தம், உள்ளங்கை சிரங்கு’ என்று கருதிய அண்ணன் கந்தையா பாண்டியன், தங்கை மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டிக்கு மணமுடித்துக் கொடுத்தான். வேறோரிடத்தில் மாடத்தியை கட்டி கொடுத்ததால் பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர்கள் மாடத்தியின் அண்ணன்மார்கள் மேல் பகை கொண்டார்.
    இந்நிலையில் மாடத்தி ஆண், பெண் என இரு குழந்தைகளைப் பெற்றாள். அவர்களுக்கு சுடலைமுத்து, இசக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். செல்லப்பாண்டி பொருளீட்ட கொழும்பு சென்றார். அதன் பின்னர் தனக்கும், மாமியாருக்கும் ஒத்துப்போகாததால் பிறந்த வீட்டுக்கு பிள்ளைகளுடன் வந்தாள் மாடத்தி. இரண்டே வருடங்களில் திரும்பிவந்துவிட்ட அவளையும் குழந்தைகளையும் அண்ணன்களும், அண்ணிமார்களும் அன்போடுதான் நடத்தினார்கள்.
    ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசிமாத திருவிழா நடந்துகொண்டிருந்தது. தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, அண்ணிமார்கள் துணையோடு மாடத்தி திருவிழாவிற்கு சென்றாள். மிட்டாய்க் கடைகளில் அண்ணிமார்களிடம், ‘மதனி, உங்க மருமக பிள்ள, ராட்டு ஆடனும்கிறான். கூட்டிப்போயிட்டு வாரேன்,’ என்று கூறிச்சென்றாள் மாடத்தி. குழந்தைகளை ராட்டில் ஏற்றிவிட்டாள். ராட்டினம் சுற்றத் தொடங்கியதும் மகள் அழ, உடனே ராட்டை நிறுத்தச் சொல்லி மகளை எடுக்கச் சென்றாள்.
    பக்கத்தில் நின்ற ஒருவன் ராட்டையில் உயரே நின்ற தட்டிலிருந்து மகளை எடுத்து மாடத்தியிடம் கொடுக்க, அவள் வாங்கிக்கொண்டாள். மாடத்தியை முதலில் பெண் கேட்டுச் சென்ற பூச்சிக்காடு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இதைப் பார்த்தார்கள். இரண்டு வாரத்துக்குப் பிறகு #சாத்தான்குளத்தில் ஒரு பஞ்சாயத்துக்கு கந்தையா பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் தீர்ப்பு கூற சென்றனர். தீர்ப்பு பன்னம்பாறைக்கு சாதகமாக இருந்ததால் ஆத்திரப்பட்ட பூச்சிக்காட்டார்கள் கந்தையா பாண்டியனை பார்த்து, ‘‘ஊருக்கெல்லாம் நியாயஞ்சொல்லும் உன் குடும்ப கௌரவத்தை, உன் உடம்பிறந்தா குழி தோண்டி புதைச்சிட்டா, தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டார்கள்.
    ‘‘என்னலே செல்லுதே?’’ என்று கோபமாகக் கேட்டான் அண்ணன். ‘‘மாசித் திருவிழாவில, உன் தங்கச்சி மாடத்தி, எவனோ ஒருத்தன்கூட சோடிபோட்டு ராட்டு ஆடினாளே, அவளுக்கு என்ன தீர்ப்ப சொல்லப்போற?’’ உடனே அந்த இடத்திலிருந்து கடும் சினத்துடன் புறப்பட்டனர், கந்தையா பாண்டினும் அவரது தம்பிகளும். வீட்டுக்கு வந்த அவர்கள் சாப்பிடக்கூட இல்லாமல் களத்து மேட்டிற்குப்போய் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். ‘நாலு பேரு சபையில நம்மள கேவலப்படுத்தின தங்கச்சிய கொல்லுவதுதான் சரி’ என முடிவு செய்தனர்.
    மறுநாள் காலை, சந்தண பாண்டியன், தங்கையை அழைத்தான், ‘‘தாயி, விறகு வெட்டப்போணும்... ஓலைப்பெட்டியை எடுத்துக்கிட்டு கல்லாட்டாங்குடி தோட்டகாட்டுக்கு விரைசல வந்து சேரு,’’ என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றான். அண்ணன் தம்பிகள் ஏழு பேரும் கல்லாட்டாங்குடி ஆலமரத்து கிளைகளில் ஏறி அமர்ந்து கொண்டனர். குலசாமியை வேண்டிக்கொண்டனர். ‘ஐயா, நம்ம குடும்ப கௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திட்டா உடம்புறந்தா. அதனால இந்த முடிவு எடுத்திருக்கோம். எங்களை மன்னிச்சிரு அப்பனே’ என்று வேண்டிக்கொண்டனர்.
    தங்கச்சி வந்து விறகு எடுப்பதற்கு ஏதுவாக காய்ந்த மரக்கிளைகளை கொஞ்சம் வெட்டிப்போட்டிருந்தனர். மாடத்தி வந்ததும், அண்ணன் சுடலை முத்து பாண்டியன், ‘விறக விருசுல எடு, தாயி’ என்று சொன்னான். மாடத்தியும் குனிந்து இரண்டு சுள்ளி விறகு எடுக்கையில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்த மூத்த அண்ணன் கந்தையா பாண்டியன், வீச்சருவாளால் தங்கையின் கழுத்தை வெட்ட, மாடத்தியின் தலை தனியேபோய் விழுந்தது. கோபம் தனியும் வரை சுழன்றுகொண்டேயிருந்தது.
    பிறகு அந்தத் தலை பேசியது: ‘அண்ணே, எவன் பேச்சேயோ கேட்டு, என்னை இப்படி, பண்ணிட்டியே, என் புள்ளங்களும், புருஷனும் வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவீக? ஏழு அண்ணன்மார்களிலே ஒருத்தனக்குக்கூடவா தங்கச்சிங்குற இரக்கம் இல்லாம போச்சு?, நான் எந்த தப்பும் பண்ணலையே! என்னைப் பெத்தவளே, இந்த கொடுமையை பார்க்க, நீ உசுரோட இல்லாம போயிட்டியே! ஏ, சுடலமாடசாமி, நீ இருக்குறது உண்மைன்னா இவனுங்களே நீரே கேளும்..’
    கண்களை மூட, தனியே கிடந்த அவள் உடல் துடிதுடித்து, கைகள் மண்ணை அள்ளி வீசிவிட்டு அடங்கின. உடனே சகோதரர்கள் மாடத்தியின் உடலை எரித்து, அவளது தலையை மண்ணில் புதைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். இப்போது மாடத்தியின் வாரிசுகள், மாடத்தியை சாந்தம் அடையச்செய்து அவள் இறந்த இடத்தில் கோயில் எழுப்பி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் தீபாவளி அன்று சிலைக்கு எண்ணெய், மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து, புதிய பட்டு அணிவித்து, இனிப்பு, காரம் கொண்ட பலகாரங்கள் படையலிட்டு பூஜை செய்கின்றனர்....

    Comments

2 comments: