jaga flash news

Tuesday 21 July 2020

நட்ப்பில்_ஏது_உயர்வு_தாழ்வு



#நட்ப்பில்_ஏது_உயர்வு_தாழ்வு...
********/*//****//***//*******/***
துரோணர் என்றொரு பெரியவர் வாழ்ந்து வந்தார்.அவர் வில்வித்தையிலும் ஏனைய பல கலைகளிலும் வல்லவராக இருந்தார். 

மகாபாரதத்தில் வருகின்ற அர்ச்சுனன்
துரோணரிடம் வில்வித்தை கற்றவன்.
அவனை உலகம் வில்வித்தகன் என்று போற்றுமளவிற்கு அவன் பிற்காலத்தில் உயர்ந்தான், 

அப்படிப்பட்ட துரோணர்
சிறுவனாக இருந்தபோது குருகுலத்தில் சேர்ந்து பயின்றார்.அப்போது அவருடன் துருபதன் என்ற மாணவனும் கல்வி பயின்றார்.

துருபதனும், துரோணரும் மிக நெருங்கிய நண்பர்களாயினர், ஒருவர் இல்லாமல் மற்றவரில்லை என்ற அளவிற்கு
அவர்கள் நட்பு வளர்ந்தது. 

துரோணர் ஆச்சாரிய வம்சத்தவர்.துருபதனோ, மிகப்பெரிய அரசகுல வாரிசு. என்றாலும்
இருவரும் எந்த வேறுபாடும் இன்றி வாழ்ந்தனர். ஒருமுறை இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது துருபதன், 
"துரோணா, இனி வருங்காலத்தில் என் நாட்டிற்கு நான் அரசனாவேன். அப்படி நான் அரசாளும் போது நீ வந்தால் உனக்குப் பாதி நாட்டைத் தந்து உன்னை அரசனாக்குவேன். இது சத்தியம்!" என்றான். 

இது கேட்ட துரோணர் தன் நண்பனின் நட்புணர்வை எண்ணி நெகிழ்ந்தார். இது நடந்து பல வருடங்களாயின. இருவரும் குருகுல வாசம் முடிந்து தங்கள் நாடு திரும்பினர். 

துரோணர் 
வில் வித்தை கற்பிக்கும் ஆச்சாரியரானார். துருபதன் தன் நாட்டிற்கு அரசனானான். துரோணருக்குத் திருமணம் நடந்தது. 

அழகான குழந்தை ஒன்று பிறந்தது. துரோணர் குடும்பம் வறுமையில் வாடியது. உண்ண உணவு இல்லை. குழந்தை குடிக்கப் பால் இல்லை. இப்படியாக வறுமை அவர்களை வாட்டியது. 

இந்த நிலையில் துரோணர் மனைவிக்கு ஒரு யோசனை. தோன்றியது. அவள் தன் கணவனை அழைத்து, 

"பிரபு! தங்கள் நண்பர் துருபதன் தன் நாட்டில் பாதியைத் தருவதாகக் கூறினாரே! இப்போது அங்கு செல்லுங்கள். நமக்குப் பாதி நாடு தேவையில்லை. 

பதிலாக நம் குழந்தை பால் குடிக்க உதவியாக ஒரு பசுமாடு மட்டும் கேட்டு வாங்கி வாருங்கள்,” எனக் கூறினாள். 

அவள் சொல்வது சரி என்றே நினைத்தார் துரோணர். எனவே அன்றே புறப்பட்டார். நேராகத் துருபதன் நாட்டை அடைந்தார். 

தான் வந்து இருப்பதாக துருபதனிடம் தெரிவிக்கும்படி கூறினார். காவலாளி நேராக மன்னரிடம் சென்றான். 

துரோணரின் வருகையை அறிவித்தான். துருபதன் அது கேட்டு அதிர்ந்தான். துரோணர் தன்னிடம் நாட்டில் பாதியைக் கேட்கப் போகிறார் என்று பயந்தான். என்றாலும் வேறு வழியின்றித் துரோணரை உள்ளே வரவழைத்தான்.
அவரை அவமானப்படுத்தி திருப்பியனுப்பிவிடத் திட்டமிட்டான்.

அதன்படி துரோணர் உள்ளே நுழைந்ததும், 

“என்ன துரோணா! தரித்திரனாகிய நீ மன்னனாகிய என்னிடம்.யாசகம் (பிச்சை) பெற வந்தாயா? 

ஏற்றத் தாழ்வைப் 
புரிந்துநடந்துகொள். மன்னனாகிய என்னை உன் நண்பன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை இருக்கலாம். ஆனால் தரித்திரனாகிய உன்னை நண்பன் என்பதால் எனக்குச்
சிறுமையே அன்றிப் பெருமை இல்லை,

எனவே நட்புப் பாராட்டிக் கொண்டிராமல் வந்த வேலையைச் சொல்லிவிட்டு இடத்தைக் காலிசெய்,என்றானே பார்க்கலாம். 

சபையோர் ஏளனமாகச் சிரித்தனர்.துரோணர் கூனிக்குறுகி அவமானத்தில் துவண்டு போனார்.

உடனே துருபதனிடம், 

"நண்பா! நான் உன்னைப் பார்த்துச் செல்லவே வந்தேன். தவிர உன்னிடம் யாசகம் பெற.
வரவில்லை. உன்னைக் கண்டேன். மீண்டும் செல்கிறேன்!” என்று கூறி எதுவும் துருபதனிடம் கேளாது திரும்பிவிட்டார்.

இந்த நிகச்சியைத் துருபதன் மறந்து போனான். ஆனால் துரோணர் மனதில் அந்த அவமானம் பசுமரத்தாணி போலப் பதிந்துவிட்டது. 

சந்தர்ப்பம் வரும்போது துருபதனுக்குத் தன்னை யார் என்று உணர்த்த முடிவு செய்தார். '

மேலும் சிலகாலம் சென்றது. துரோணர் ஒரு நாள் மன்னன் திருதராட்டிதனைக் காணச் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது பாண்டவர்கள் ஐவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். மூத்தவனான தருமன் எதிர்பாராமல்தான் விளையாடிக் கொண்டிருந்த பந்தை அருகிலிருந்த கிணற்றில் போட்டுவிட்டான். உடன் சென்று அந்தப் பந்தை எடுக்க சகோதரர்கள் ஐவரும் முயன்றனர்.

துரதிர்ஷ்டவசமாகப் பந்தெடுக்கும் முயற்சியில் கையிலிருந்த மோதிரமும் கழன்று விழுந்துவிட்டது. 

இரண்டையும்
எடுக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தபோது அந்த வழியாக துரோணர் வந்தார். குழந்தைகள் கிணற்றைச் சுற்றி நின்று எட்டிப்பார்ப்பதைக் கண்டார். அருகில் சென்று விபரம் விசாரித்தார். தருமன் நடந்ததைக் கூறினான்.

உடனே துரோணர், 
“பாண்டவர்களே! உங்கள் குரு கிணற்றில் விழுந்த பொருட்களைக் கிணற்றில் நாம் இறங்காமலேயே எடுக்கும் வித்தையைச் சொல்லித்தரவில்லையா?" என்று கேட்டார். 

உடன் தருமன் 
“கிணற்றில் இறங்காமல் அதன் உள்ளே விழுந்த பொருட்களை எப்படி எடுக்க முடியும்?” என்று கேட்டான். துரோணர் அதற்கு ஒரு
மந்திரம் இருப்பதாக கூறினார்.

'பின்பு சில சிறிய சுள்ளிக்குச்சி போன்ற குச்சிகளை எடுத்தார். ஒவ்வொரு குச்சியாக ஏதோ மந்திரம் கூறிக்கிணற்றினுள் போட்டார். அப்படிப் போட்ட குச்சிகள் சங்கிலித்தொடர்போல் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டன. 

பின்னர் வேறு ஒரு மந்திரம் கூற அந்த சங்கிலித் தொடரின் அடிமுனையில் பந்தும், மோதிரமும் சிக்கிக் கொண்டன. பின்பு துரோணர் அவைகளை மெல்ல வெளியே எடுத்தார்.

தருமன் கையில் கொடுத்தார். குழந்தைகள் ஐவரும் மகிழ்ச்சியில் கூத்தாடினார்கள்.

"நீங்கள் யார்? எந்த ஊர்” என்று விசாரித்தனர்.துரோணரும் கூறினார், அவரிடமிருந்து கற்க வேண்டியவை
பல உள்ளன என்றுணர்ந்த பாண்டவர்கள் நேராகத் தமது பாட்டானார் பீஷ்மரிடம் சென்று நடந்ததைக் கூறினர்.

பீஷ்மர் 
மிகப் பெரிய அறிஞர். தீர்க்கதரிசி, துரோணரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதை நன்கறிந்தவர். 

எனவே துரோணரை வரவழைத்தார் பீஷமா். கௌரவர்கள் நூறு பேருக்கும் பாண்டவர்கள் ஐவருக்கும். வில்வித்தை கற்பிக்கும்படி கூறினார்.

அன்று முதலே கல்விப் பயிற்சி தொடங்கியது.பாண்டவர்கள் துரோணர் கற்றுத் தருவதை நன்றாகக் கற்றனர். கௌரவர்களுக்குப் பயிற்சியில் முழுமையான
கவனமும் ஆர்வமும் இல்லை. 

முடிவில் பாண்டவர்கள் வில் வித்தையைக் கற்று முடித்தனர். ஒரு நல்ல நாளில் குருவின்
பாதங்களைப் பணிந்தனர். குருதட்சிணை தரமுன் வந்தனர்.

குரு தட்சிணையாகப் பணம் காசு எதையும் பெற மறுத்துவிட்டார் துரோணர். மாறாகத் துருபதனை போரில் வென்று கைது செய்து உயிருடன் தன் முன் கொண்டு
வந்து நிறுத்தவேண்டும் என்று கூறினார்.

பாண்டவர்களும் அதை ஒப்புக்கொண்டனர். துருபதனுடன் போர் தொடுத்தனர். துருபதனை வென்றனர். 

அவனைக்
கைது செய்து கொண்டு வந்து துரோணர் முன் நிறுத்தினர். துரோணரைப் பார்த்த துருபதன் திடுக்கிட்டான். 

உடனே துரோணர் "துருபதா! அன்று உன்னை என் நண்பனாகக் கொள்ள எனக்கு என்ன தகுதி உள்ளதெனக் கேட்டாய்.

இன்று அதனால்தான் என் சீடர்கள் மூலமாகவே உன்னை.வென்று கைதாக்கிக் கொண்டு வந்தேன். இப்போது நீயும் உன் நாடும் என் அடிமை. 

அன்று 
உன் நாட்டைக் கேட்டு விடுவேனோ என்று பயந்து என்னை அவமானப்படுத்தி விரட்டினாய்.

ஆனால் அதே நாட்டில் பாதியை உனக்குத் தருகிறேன்.அதோடு என் சார்பாக மீதமுள்ள பாதி நாட்டையும் நீயே ஆண்டுவரும் உரிமையும், தருகிறேன். 

இப்போது 
நான் உன்னிலும் அதிகத் தகுதியுடையவன்” என்று கூறினார்.

இதைக்கேட்ட 
துருபதன் நாட்டிற்காகத் தன் நட்பை இழந்த தனது கீழ்த்தரமான செயலுக்காகப் பெரிதும்
வருந்தினான். தலை குனிந்து தன் நாடு திரும்பினான்.

நட்பையும் அதன் உண்மைத் தத்துவத்தையும் துருபதனுக்கு உணர்த்திய துரோணர் நிம்மதி அடைந்தார்.

என் அன்புக்குாியவா்களே! 
நட்பின் முன் பணக்காரன் ஏழை,உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு ஏதும் இருக்கக் கூடாது. நட்பைத் தெய்வீகமானதாக நினைக்கும் போது அந்த நட்பிற்கு ஒரு வலிமையும் சக்தியும் பிறக்கும்.

எனவே உங்கள் நண்பர்களை நேசிக்க, மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment