jaga flash news

Saturday 24 October 2020

வீட்டு யோகமும் கிரகபிரவேசம் செய்ய வாஸ்து காலமும்.

வீட்டு யோகமும் கிரகபிரவேசம் செய்ய வாஸ்து  காலமும்.

பொதுவாக பெரும்பாலானோரின் கனவு "வாழ்க்கையில் சொந்த வீடொன்றாவது வாங்கனும். சிறுமையாக சேர்த்தேனும் வங்கிக்கடன் வாங்கியேனும் வீட்டை கட்டனும்" என்பது தான். 

ஜோதிட ரீதியாக அவ்வமைப்பு உண்டா என்பதை பின்வருமாறு ஆராயலாம்,

லக்ன ராசிகளின் நான்காம் அதிபதி வீட்டை குறிக்கும். (சுகஸ்தானம்) அதன் அதிபதி சுகாதிபதி ஆவார். வீட்டுக்கு காரகராக செவ்வாயும், நிலத்திற்கு காரகனாக புதனும் செயற்படுவர்கள். 

* லக்ன ராசிக்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சமாகியோ, 
* கேந்திர கோணத்தில் அமர்ந்தாலோ, 
* குரு, சுக்கிரன், பௌர்ணமி சந்திரன் முதலான சுபர் பார்வையில் அமர்ந்தாலோ,
சேர்க்கை பெற்றாலோ, 
* செவ்வாய் ஆட்சி உச்சமாகி / கேந்திர கோணத்தில் / சுபர் தொடர்பில் இருந்தாலும் வீட்டு யோகம் உண்டாகும்.
* புதன் ஆட்சி உச்சமாகி / கேந்திர கோணத்தில்/ சுபர் தொடர்பில் இருந்தால் காணி யோகமும் உண்டாகும். 
* நான்காம் அதிபதி பகை நீசம் அஸ்தங்கமோ அடையாமல் நட்பு வீட்டில் நின்றாலும் சொந்த வீட்டில் வசிக்கும் நிலை உண்டாகும்.
* 4ம் அதிபதி / செவ்வாய் அதிக பலமோ சுபத்துவமோ அடைந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையும்.

எப்படியான வீடு அமையும்

நான்காம் அதிபதியையும் நான்கில் உள்ள கிரகத்தையும் பார்வை செய்யும் கிரகத்தையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட வேண்டும்.

* சூரியன் - விசாலமான வீடு, பங்களா, மாடி வீடு, பிரகாசமான வீடு, அரச நிறுவனங்களுக்கு அருகில் உள்ள வீடு, தந்தையின் வீடு

* சந்திரன் - குளிர்ச்சியான வீடு, மலைகள், நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள வீடு, காற்றோட்டமானது, தாய் வீடு

* செவ்வாய் - கல் வீடு, கணவன் வீடு, 

* புதன் - புதிதாக கட்டிய வீடு, அடிக்கடி மாற்றம் நிகழும் வீடு, தோட்டத்துடன் இருக்கும் வீடுகள். நூலகங்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு.

* குரு - பெரிய வீடு, தொடர்மாடி கட்டிடங்கள், ஆலயங்களுக்கு அருகில் உள்ள வீடு, குழந்தை மூலமாக கிடைக்கும் வீடு, பரம்பரை வீடு

* சுக்கிரன் - கலைநயம் மிக்க வண்ணமயமான வீடு, மனைவி வீடு

* சனி - பழைய வீடு, பாழடைந்த வீடு, மயானாத்திற்கு அண்மையில் உள்ள வீடு, அசுத்தமான வீடு,

* ராகு - இருளடைந்த வீடு, பாதையோர வீடு, காட்டுக்கு அருகில் உள்ள வீடு

* கேது - மிருகங்கள் உள்ள வீடு, குடிசை, 

வாஸ்து வரலாறு

வாஸ்து பகவான் பிரபஞ்சம் உருவான போது தோன்றிய பெரும் பூதம் ஆவார். பிரம்மன் உலகத்தைப் படைத்தபோது நிலத்தையும், ஆகாயத்தையும் ஒருசேர வியாபித்துக் கொண்டு வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு  குப்புறக் கிடந்தபடி தோன்றினார்.  
 
ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டு பெரும்பூதமாக உறங்கிக் கொண்டிருந்த வாஸ்து பகவானைக் கண்டு நடுநடுங்கிப் போன பிரம்மனும்,  தேவர்களும் அவரை எழுந்திருக்க விடாதபடி, அப்படியே குப்புறக் கிடந்த நிலையிலேயே அழுத்திக்கொண்டார்கள். வாஸ்து பகவான் அப்படியே  உறங்கத் தொடங்கி விடுவார். அப்போது யார், யார் எந்தெந்தப் பகுதியைப் பிடித்து அழுத்திக்கொண்டார்களோ, அவரவர் அந்தந்தப் பகுதிகளுக்கு  அதிபதியானார்கள். பிரம்மனாலும், தேவர்களாலும் உறங்கவைக்கப்பட்ட வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாள்கள்  கண் விழிப்பார். அந்த  நாள்களிலும் 3 3/4 நாழிகை தான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்று விடுவார். ஆகையால் அவர் கண் திறக்கும் மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்யப்படுகிறது. 

அவர் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். வாஸ்து புருஷன் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரமாகும். இந்த நேரத்தில் மனை பூஜையைத் தொடங்கி முடித்தால் மனை சிறப்பாக அமையும்.  மற்ற நேரத்தில் பூஜை செய்யலாகாது.

வாஸ்து விழிப்பு நாள்: 

சித்திரை 10-ம் தேதி சூரியன் உதயமான நேரத்திலிருந்து 5 நாழிகைக்குப் பிறகும் (சூரிய உதயம் + 2.0வது மணிநேரத்தில்),

வைகாசி 21- ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும்,(சூ.உ.+ 3.12)

ஆடி 11- ம்தேதி 2 நாழிகைக்குப் பிறகும், (சூ.உ.+0.48)

ஆவணி 6 - ம் தேதி 21 நாழிகைக்குப் பிறகும், (சூ.உ.+8.24)

ஐப்பசி 11- ம் தேதி 2 நாழிகைக்குப் பிறகும்,  (சூ.உ.+0.48)

கார்த்திகை 8- ம் தேதி 10 நாழிகைக்குப் பிறகும், (சூ.உ.+6.0)

தை 12 - ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், (சூ.உ.+3.12)

மாசி 22 - ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும் (சூ.உ.+3.12) வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரமாகும். 

வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். (கிரகபிரவேசம் செய்ய சிறந்த நாட்கள்.)

* சிறந்த மாதமும் திதியும்

வாஸ்து பகவான் கண் திறக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி முதலான மாதங்கள், கிரகப் பிரவேசம் செய்ய சிறந்த மாதங்கள் ஆகும். இந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்தால், குடும்பம் தழைக்கும், சந்ததிகள் கடந்தும் வீடும்வாசலும் நிலைக்கும் என்பது ஐதீகம். இம்மாதங்களிலேயே இரண்டு பௌர்ணமி அமாவாசை திதிகள் வருமானால் (மலமாதம்) கிரகப்பிரவேசம் செய்யலாகாது. சுக்லபட்ச துதியை,திரிதியை,பஞ்சமி,சப்தமி, தசமி,ஏகாதசி,திரயோதசி, பௌர்ணமி திதிகள் சிறந்தவை. 

* சிறந்த கிழமைகள்:
திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை. இந்த நான்கு கிழமைகளும் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த கிழமைகள்.

* சிறந்த நட்சத்திரங்கள்:
ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், , உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நட்சத்திரங்கள்.

* சிறந்த லக்னங்கள் :
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம், மீன லக்னம் ஆகியவை வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்வதற்கு ஏற்ற லக்கினங்கள் ஆகும். குரு சுக்கிரன் அஸ்தமனமோ மறையாமலும் நீச அஸ்தங்கமில்லாது இருப்பது சிறப்பு. 8,12ம் பாவகம் சுத்தமாக இருப்பது அவசியம்

* சிறந்த ஹோரைகள்:
குரு, சுக்கிர, சந்திர, புதன் ஹோரைகள் சிறந்தவை. லக்ன யோகரின் ஹோரையையும் பயன்படுத்தலாம்.

வீடு வாங்க குளிகை ஹோரையை பயன்படுத்தலாம். வாடகை வீடு செல்லும் போது குளிகை ஹோரையை பயன்படுத்த கூடாது. வாடகை வீடு போகும் போது ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு குடி சென்றால் வாடகை வீட்டில் இருந்து விடுதலை தந்து சொந்த வீடு செல்ல வழிவகுக்கும். 

பூமி பூஜை செய்யும் இலகுவான வழிமுறை:

மனையின் வடகிழக்கு திசை ஈசான்ய மூலையில் தான் பூமி பூஜை செய்ய வேண்டும். வடகிழக்கு மூலையில் மூன்றுக்கு மூன்றடி பள்ளம் தோண்டி, அங்கிருக்கும் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மண் கொண்டுவந்து நிரப்ப வேண்டும். பிறகு, அதில் ஓர் அடி ஆழமுள்ள குழி  எடுத்துக் கொள்ள வேண்டும். 

புண்ணிய நதிகளின் நீரை கொண்டு வந்து அதில் பால் சேர்த்து குடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்தை மனதார வேண்டியபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்குச் சந்தன குங்குமம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். இதைத் தொடர்ந்து கன்னிப்பெண்கள்,  குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்களை பால் கலந்த நீரை குழிக்குள் ஊற்றச்செய்ய வேண்டும். பிறகு நவ தானியங்களையும் பஞ்சலோகம் தூய்மையான வெள்ளைத் துணியில் முடிச்சிட்டு கல்லில் கட்டி, குழிக்குள் இறக்க வேண்டும். பின்னர் சில்லறை நாணயம், அர்ச்சதை, பூ, வில்வம், துளசி கொண்டு பூஜித்து வணங்க வேண்டும். இதுவே பூமி பூஜை செய்யும் இலகுவான
முறை.  இந்தப் பூமி பூஜையை வாஸ்து நேரத்தில் கடைசி 36 நிமிடத்துக்குள் செய்து முடித்து விட வேண்டும்.

சொந்த வீடு அமைய வழிவகுக்கும் சில வழிபாட்டு முறைகள்:

 * அபிராமி அந்தாதியின் 20வதும் 68வதும் ஸ்லோகம் பாடலாம்.சொந்த வீடு அமைவதற்கு சூழ்நிலைகளை உருவாக்கி தரும்.

> ஸ்லோகம்-20
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

> ஸ்லோகம்-68
பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே!

* திருப்புகழ்
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

* கனகதாரா ஸ்தோத்திரம் தனம் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும்.


No comments:

Post a Comment