பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில், தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்… அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்… அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே… ‘மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
மருத்துவமனைகளே இல்லாத அந்தக் காலம் முதல், அதிநவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இந்தக் காலம் வரை… மனிதனின் பிணிகளைக் களைவதில் முக்கிய இடம் வகிக்கும் மூலிகைகளில் ஒன்று நொச்சி. அனைத்துப் பகுதிகளிலும் தானாகவே விளைந்து கிடக்கும் நொச்சி… காய்ச்சல், தலை வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி.
நொச்சி, சிறு மரவகையைச் சேர்ந்தத் தாவரம். வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. மூன்று முதல் 5 கூட்டு இலைகளைக் கொண்டது. வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல ரகங்கள் இருந்தாலும் வெண்நொச்சிதான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. ‘விடெக்ஸ் நெகுண்டோ’ (Vitex Negundo) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நொச்சியின் இலை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. இவை, வயிற்றில் உள்ள புழுவை வெளியேற்றும், கோழையை அகற்றும், உடலைத் தேற்றும், வலிகளைப் போக்கும், வியர்வையை உண்டாக்கி, காய்ச்சலைக் குணமாக்கும். இதனாலேய இதை ‘தெய்வீக மூலிகை’ என கொண்டாடுகிறார்கள், சித்த மருத்துவர்கள்.
கொசுவை ஒழிக்கும்!
உலகின் முதல் பூச்சிக்கொல்லி கண்டுபிடிக்கப்பட்டதே, கொசுக்களை ஒழிப்பதற்காகத்தான். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து, இரவு, பகலாக உழைத்து புதுப்புது மருந்து களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்கும் ‘அல்வா’ கொடுத்துவிட்டு முன்னைவிட வீரியமாக வலம் வருகின்றன, கொசுக்கள். ஆனால், கொசுக்களை ஒழிப்பதற்கான தீர்வை தன்னுள் வைத்திருக்கும் நொச்சியின் மீது இப்போதுதான் பலரின் கவனம் திரும்பியிருக்கிறது. நொச்சி இலையின் புகைக்கு கொசுக்கள் வராது, தற்போது, ‘கொசுக்களை விரட்டியடிக்க நொச்சிச் செடிகளை வளருங்கள்’ என்றபடி மாநகர மக்களுக்கு, சென்னை மாநகராட்சி நொச்சிச் செடிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது!
போலியோ குணமாகும்!
‘நொச்சி இலை ஒரு கைப்பிடி, மூக்கிரட்டை வேர் அரை கைப்பிடி, காக்கரட்டான் வேர் அரை கைப்பிடி ஆகியவற்றை ஒன்றாக இடித்து, ஒரு லிட்டர் நீர்விட்டு, ஒரு சுக்கு, தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை என ஒரு வாரம் கொடுத்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள இளம்பிள்ளைவாதம் (போலியோ) குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்கள், இரண்டு நொச்சி இலையுடன் நாலு மிளகு, ஒரு லவங்கம், 4 வெள்ளைப்பூண்டுப் பல் ஆகியவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கினால், சரியாகும். இடுப்புவலி, மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றுக்கு… ஒரு ஸ்பூன் நொச்சி இலைச் சாறுடன், ஒரு கிராம் மிளகுத்தூள் இட்டு, சிறிது நெய் சேர்த்து காலை, மாலை இருவேளைகள் உண்டு, வேலிப்பருத்தி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்’ என்கிறது, சித்த மருத்துவம்.
கழுத்து வாதம் போக்கும்!
”தலைபாரம், தலையில் நீர்கோத்தல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு, நொச்சி இலையில் ஆவி பிடிக்கும் பழக்கம் இன்றைக்கும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. நொச்சி இலையை பானையில் நன்றாக வேகவிட்டு இறக்கி, அந்த பானையில் சூடான செங்கல் துண்டுகள் அல்லது வெங்கிச்சான் கல்லைப் போட்டு, உடல் முழுவதும் கனமான போர்வையால் மூடி, ஆவி பிடித்தால், இரண்டு நிமிடங்களில் உடலில் உள்ள துர்நீர் அனைத்தும் வியர்வை யாக வெளியேறும். நொச்சி இலையைப் பறித்து, பருத்தித் துணியில் கட்டி தலையணை யாகப் பயன்படுத்தினால் மண்டையிடி, கழுத்து வீக்கம், கழுத்து வாதம், ஜன்னி, நரம்பு வலி, மூக்கடைப்பு குணமாகும். உடலில் தோன்றும் கட்டிகள் மீது நொச்சி இலைச் சாறை பற்று போட்டால், கட்டிகள் கரைந்துவிடும். நொச்சி இலைகளை அரைத்து மூட்டுவீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம் குறையும்” என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.
தானியங்களைப் பாதுகாக்கும்!
நொச்சி வேரை தண்ணீரில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வேர் பட்டையைக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி… ஒரு சிட்டிகைப் பொடியை தேனில் குழைத்து, வாரம் இரு முறை காலையில் உட்கொண்டால், நரம்பு வலி, வாதப்பிடிப்பு குணமாகும். தானியங்களைச் சேமித்து வைக்கும் பாத்திரங் களில் நொச்சி இலையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகையான நொச்சியை, நெஞ்சில் இருத்துவோம்.
No comments:
Post a Comment