jaga flash news

Saturday, 5 December 2015

பாவம் புண்ணியம் இவையெல்லாம் மனிதர்களுக்கு மட்டுமா, இல்லை எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா?

பாவம் புண்ணியம் இவையெல்லாம் மனிதர்களுக்கு மட்டுமா, இல்லை எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா?

பூலோகத்தில் பிறக்கும் உயிரினங்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1. புழுக்கதிலிருந்து தோன்றுபவை (சுவேதஜம்), அதாவது புழு, பூச்சி, வைரஸ், பாக்டீரியா போன்றவை.
2. பூமியை பிளந்து கொண்டு வருபவை (உத்பிஜஜம்), அதாவது செடி, கொடி, மரம் போன்றவை.
3. முட்டையிலிருந்து வெளிவருபவை (அண்டஜம்), அதாவது பறவை, பாம்பு போன்றவை.
4. கருப்பையிலிருந்து வெளிவருபவை (ஜராயுஜம்), அதாவது ஆடு, மாடு, மனிதன் போன்றவை.

இதில் மனிதன் மட்டுமே, அதிக இந்திரியங்களுடன் விவேக சக்தி உடையவன். அதாவது, ஒரு பாத்திரத்தில் உணவு பொருளும், இன்னொரு பாத்திரத்தில் பணவும் வைத்திருந்தால், பிராணிகள் உணவை தான் எடுக்கும். ஆனால் மனிதனோ, பணத்தை தான் எடுப்பான். ஏனென்றால் பணத்தை வைத்து அவன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதைதான் விவேக சக்தி என்பது.

ஆகவே, விவேக சக்தி படைத்தவனுக்கு தான் செய்த கர்மத்துக்கு ஏற்றவாறு பலன் வருகிறது. இந்த பலன் இரண்டு வகைப்படும். ஓன்று பிரத்தியக்ஷபலன் மற்றொன்று அப்பரதியக்ஷபலன். பிரத்தியக்ஷபலன் என்பது இந்த உடல் இருக்கும் போதே அடைவது. உதாரணமாக, நேர்மை, தான தர்மங்கள் செய்வது முதலியவை, இந்த பிறவியிலே புகழை ஈட்டி தரும். அப்பரதியக்ஷபலன் என்பது, இந்த உடல் போன பின்னர் நாம் அடைவது. இந்த பலனுக்கு ஏற்றவாறே ஒருவனது அடுத்த பிறவி அமைகிறது. உதாரணமாக, ஒருவன் செல்வசெழிப்புடன் வாழ்வதும், இன்னொருவன் ஏழையாக இருப்பதும் இதனால் தான். ஒரு முறை தோன்றிய ஆன்மா பல பிறவி எடுக்கிறது. பல பிறவிக்கு பின்னரே அது மனிதனாக தோன்றுகிறது. இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் அல்லாத உயிரினங்களுக்கு, விவேக சக்தி இல்லாததால், அவை ஒவ்வொரு ஜன்மாவிலும் உயர் பிறப்பு அடைகிறது, அப்படியே ஒரு நிலையில் மனிதனாகவும் பிறக்கிறது. அப்போது, அது விவேக சக்தி பெறுகிறது, அந்நிலையில் அவன் செய்யும் கர்ம பலனுக்கு ஏற்ப, மோக்ஷமோ, அல்லது உயர் பிறப்பான தேவர்களாகவோ, அல்லது மனிதர்களாகவே அல்லது வேறு பிரானிகளாகவோ தோன்றலாம். இது அவரவர் செய்யும் நன்மை தீமைகளை பொறுத்தது.

எந்த ஒரு மனிதனும் தன்னிலையிலிருந்து கீழிறங்க விரும்ப மாட்டார்கள். ஆனால், அதற்கான வாய்ப்புகள் அதிகம். இது மாயையினால். உண்மை எது பொய் எது என்று நாம் உணர்வதில்லை. இதிலிருந்து தப்பிக்க தான் மதம், நீதி, தர்மங்கள் முதலியன இருக்கின்றன. இவைகளில் தான் துன்பங்கள் முற்றிலும் ஒழித்து விடுவதற்கு காரணங்கள் விளக்கப்பட்டிருகின்றன. இதற்க்கு அடிப்படை விசுவாசம் ஆகும். விசுவாசம் என்பது மூடதனம் இல்லை. உதாரணமாக, மாத கடைசியில் ஊதியம் கிடக்கும் என்ற விசுவாசத்தில் தான் வேலை செய்கிறோம். அதுபோல தான், மருத்துவர் கொடுக்கும் மருந்து நோயை குணப்படுத்தும் என்ற விசுவாசத்தில் தான் அதை சாப்பிடுகிறோம். ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் விசுவாசத்துடன் இறைவனுக்காக செய்தால் நிச்சயம், இந்த பிறப்பு இறப்பிலிருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment