jaga flash news

Friday, 4 December 2015

அறிவியலும், ஆன்மீகமும், ஆனந்த தாண்டவமும்:

அறிவியலும், ஆன்மீகமும், ஆனந்த தாண்டவமும்: பகுதி1

அருவம்,உருவம்,அருவுருவம் என இறைவனை கண்ட தலைசிறந்த மெய்ஞானம் சைவசமயம்.

அருவமான இறைவனுக்கு உருவங்கள் வழங்கி சிவனாக கண்டது சைவப் பண்பாடு என்றால் அந்த உருவங்களுக்குள் ஆயிரம் அர்த்தங்களை புகுத்தியது சைவப் பண்பாட்டின் தனித்துவமான சிறப்பு என்றே கூறவேண்டும்

எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளை தமிழர்கள் நடராசப் பெருமானாக கண்டு அறுபத்தி நான்கு மூர்த்தங்களில் ஒன்றாய் சைவப் பண்பாட்டில் இருத்தி, வேதநாகரீகத்துக்கு பொதுச்சின்னமாக மலரும் வகையில் பாரதப் பண்பாட்டுக்கு குறியீடாக மலரும் வகையில் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், சமயம், அழகியல் உட்பட ஏராளமான அம்சங்களை நடராச திருவுருவத்துள் கண்டு இவ்வுலகுக்கு அளித்தனர் எனலாம்.

நடராசப் பெருமானின் நூற்றியெட்டு கரணங்கள் அல்லது தாண்டவங்கள் பற்றி சைவ ஆகமங்கள்,சிற்ப நூல்கள், பரத நாட்டிய சாத்திரம் ஆகியன எடுத்துக்கூறுகின்றன.

எனினும் தாண்டவங்களில் தலைசிறந்ததாய் விளங்கும் ஆனந்த தாண்டவம் பரத நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.

திருவெண்காட்டில் அகழ்வாய்வில் கண்டெடுத்த நடராச மூர்த்தியின் பீடத்தில் தேசி நடனத்தை ஆடுபவர் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தேசி நடனமும் பரதரின் நாட்டிய சாத்திரத்தில் கூறப்படவில்லை.

ஆனந்த தாண்டவமானது வேறு எங்கும் இல்லாது தமிழகத்திலே காணக்கிடைப்பது ஆனந்த தாண்டவமானது தமிழரின் ஆன்மீகக் கண்டுபிடிப்பென நவில வலுச்சேர்க்கின்றது.

கி.பி 4ம் நூற்றாண்டளவில் இருந்து தமிழகத்தில் நடராச சிலைகள் இருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளமை பரதக் கலையிலும் இறைவனின் திருநடன
வடிவங்ககளிலும் தமிழரின் உரித்து அதிகம் இருப்பதை புலனாக்கிறது.

தமிழரிடம் இருந்த நாட்டியக் கலையை சற்று மேலதிக இணைப்புக்களுடன் பரதர் சாத்திரம் செய்தார் எனபதே சாலச் சிறந்ததாகும்.
அறிவியலும், ஆன்மீகமும், ஆனந்த தாண்டவமும்: பகுதி2

தாண்டவம் தண்டு எனும் வினையடி வழிவந்ததாகவும், தண்டு என்பது துள்ளுதல்,பாய்தல்,ஆடுதல் எனும் பொருளில் புழக்கத்தில் உள்ளமையை தமிழாராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுவர்.

இறைவனின் ஐந்தொழிலையும் குறிக்கும் ஆனந்த தாண்டவம் பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடைபெறுகின்றது. இச்சபையை கனகசபை என்பர். நாதாந்த நடனம்,புஜங்க நடனம் எனவும் ஆனந்த தாண்டவத்தை அழைப்பர்.

திருத்தாண்டவங்கள் தமிழகத்தில் உள்ள ஆலயங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது போன்று வேறெங்கும் தொடர்புபடுத்தப்படவில்லை.இவ்வாறு நடராச மூர்த்த வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருவதும் தமிழ்நாட்டில் என்பதை எண்ணும் போது தமிழரின் பண்பாட்டு முதிர்ச்சி புலனாகிறது எனலாம்.

வலக்கையில் ஏந்தியுள்ள
உடுக்கு படைத்தலையும்
அபயகரம் காத்தலையும்
இடது கையில் ஏந்தியுள்ள நெருப்பு அழித்தலையும்
முயலகன் மீது ஊன்றிய வலது திருப்பாதம் மறைத்தலையும்
தூக்கிய இடது திருவடி அருளுதலையும் குறிக்கும்.

இவ்வாறு நடராசப் பெருமானின் திருவுருவம் ஐந்தொழில்களையும் குறிக்கும் திருவுருவமாக விளங்குகின்றது.

இதனை,
"அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் அங்காரம்
அரனுற்றணைப்பில் அமருந்திரோதாயி
அரனடியென்னும் அநுக்கிரகமே" என்கிறது தமிழ் மறையாகிய திருமந்திரம்.

No comments:

Post a Comment